Published:Updated:

கன்ட்ரோல் ரூம்

கன்ட்ரோல் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்ட்ரோல் ரூம்

- காக்கிசான், ஓவியங்கள்: ரமணன்

கன்ட்ரோல் ரூம்

மீண்டும் சொகுசு வசதிகள்!

புழல் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சமீபத்தில் வெளியாகின. புழல் சிறைக்குள் கோலோச்சிய உயர் அதிகாரி ஒருவர், சிறைத்துறையின் உச்சமாகத் திகழ்ந்த அதிகாரிக்கு நெருக்கமானவர். இதைப் பயன்படுத்தி, ஏழு வருடங்களாக அதே சிறையில் நீடித்ததுடன் பதவி உயர்வும் பெற்றுள்ளார். இதைப் பொறுக்க முடியாத மற்ற அதிகாரிகள், அந்த உயர் அதிகாரியை விரட்டக் காத்திருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிகிச்சைக்காக அந்த உயர் அதிகாரி விடுப்பில் சென்றுவிட, தர்மமான ஒருவர் தற்காலிக உயர் அதிகாரி ஆனார். அவரும், ஸ்டோர் ரூமை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயமான ஏட்டு ஒருவரும் சேர்ந்து, கோடிக்கணக்கில் வருமானம் பார்த்தனராம். சிகிச்சை விடுமுறை முடிந்து பணியில் சேர்ந்த அந்த உயர் அதிகாரி, இவர்களது தகிடுதத்தங்களை மேலிடத்துக்குக் கொண்டுசென்றதால், தர்மமானவரும் ஜெயமானவரும் தூக்கியடிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தால் கடுப்பான சில அதிகாரிகள், அந்த உயர் அதிகாரிக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளனர். அவர்கள்தான் சிறைக்குள் நடக்கும் அத்துமீறல்களைப் படம்பிடித்து ‘லீக்’ செய்தனராம். இதன் தொடர்ச்சியாகத்தான் அந்த உயர் அதிகாரி ‘கோட்டை’ நகருக்கு இடம்மாற்றப்பட்டாராம். உயர் அதிகாரியை விரட்டிவிட்ட குஷியில், மற்ற அதிகாரிகள் தரப்பு இப்போது புதிய டெண்டர் பாலிசியை கொண்டுவந்துள்ளதாம். நேர்மையான அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாமல், கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள்.

கன்ட்ரோல் ரூம்

ரூம் போட்டு யோசிக்கிறாரோ?

சென்னையின் பல பகுதிகளில் ‘நோ பார்க்கிங்’ ஏரியாவில் நிறுத்தப்பட்ட, மக்களுக்கு இடைஞ்சலாக நிற்கும் டூவீலர், கார்களைப் போக்குவரத்துப் போலீஸார் சில மாதங்களுக்கு முன்புவரை அப்புறப்படுத்தி வந்தனர். இதில் போக்குவரத்து போலீஸாருக்கு, உதவுவதற்காக இளைஞர்கள் வாகனங்களை வேனில் தூக்கி வைத்து, அருகிலுள்ள காவல் நிலையங்களில் இறக்கிவைப்பார்கள். ஆனால், முன்புபோல இப்போது, நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்படும் வாகனங்களைப் போக்குவரத்து போலீஸார் தூக்கிச் செல்வது குறைந்திருக்கிறது என்கிறார்கள். இதுகுறித்து விசாரித்தபோது, அந்த இளைஞர்களுக்கு நாளொன்றுக்கு  ரூ.500 என்று கொடுக்கப்பட்டுவந்த சம்பளத்தை, இனிமேல் கொடுக்க வேண்டாமென போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சொல்லிவிட்டாராம். அதனால் அவர்கள் வருவதில்லையாம். போக்குவரத்து போலீஸார் கடுப்பில் இருக்கிறார்கள்.

கன்ட்ரோல் ரூம்

அப்பாவிக்கு அடி உதை!

சென்னை ஆற்காடு சாலையில், கடந்த ஜனவரி 15-ம் தேதி ஒரு கொலை நிகழ்ந்தது. இறந்தவர் அரசுப் பேருந்து ஓட்டுநர் என்பதால், விரைவாக நடவடிக்கை எடுக்கச்சொல்லி மேலிடத்திலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடும் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. சந்தேகத்தின் பெயரில் அண்ணன், தம்பி இருவரை அழைத்துவந்து ‘கவனித்தனர்’ போலீஸார். அப்போது வலி தாங்க முடியாத அண்ணன், ‘நான்தான் சார் கொன்னேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘அப்பாடா, வழக்கு முடிவுக்கு வந்திருச்சு’ என்று காக்கிகள் இளைப்பாறிய நிலையில், அந்த நபர் கூறியதற்கும், கொலை நடந்தபோது சாலையில் இருந்த சி.சி.டி.வி-களில் பதிவான காட்சிகளுக்கும் ஒத்துப்போகவில்லை. மீண்டும் அவரை விசாரித்தபோது, ‘உங்க அடி தாங்க முடியாமதான் சார் அப்படிச் சொன்னேன்’னு அவர் அழுதுபுரண்டார். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போலீஸார், ஐ.டி.ஐ படிக்கும் அன்புமணி என்பவரைத் தூக்கிவந்து விசாரித்தனர். இதில் அவர்தான் கொலையாளி என்று தெரிந்தது. உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் ஓர் அப்பாவியைக் கவனித்த போலீஸாரைப் பார்த்து, சக போலீஸாரே தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்!

கன்ட்ரோல் ரூம்

பேபி என்ற பேட்ட பிஸ்தா!

கோகுலத்தில் இருக்கும் கடவுளின் பெயரைக் கொண்ட உதவி ஆணையர் ஒருவர், வடசென்னையில் கோலோச்சுகிறார். அவரை போலீஸார் ‘பேபி ஏ.சி’ என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள். தன் ஆளுகைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் இளம் பெண் காவலர்களை ‘பேபி’ என அவர் அழைப்பதால், அதுவே உதவி ஆணையரின் அடையாளமாகிப்போனது. அதைத் தாண்டியும் அவர் மீது சில புகார்கள் உண்டு. மேலதிகாரிகள் இவருக்கு நெருக்கம் என்பதால், எங்கு புகார் அளித்தாலும் அது அவர் கைக்கே வந்துவிடுகிறது. ‘என்ன பேபி, என் மேலயே பெட்டிஷனா? அவ்ளோ பெரிய ஆளா நீ?’ என்று புகார்களைக் கையில் விசிறிக்கொண்டு அவர் எகத்தாளம் செய்வதால், யாரும் இப்போது அவர் குறித்துப் புகார் அனுப்புவதில்லையாம். சமீபத்தில் சென்னை மாநகரம் முழுவதையும் சி.சி.டி.வி கண்காணிப்புக்குள் கொண்டுவர விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாகச் சொல்லி, ஏரியா தொழிலதிபர்களிடம் ‘லம்ப்’பாகக் கறந்துவிட்டாராம். அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்று கொதித்துக்கிடக்கிறது வடசென்னை காவல் வட்டாரம்.

கன்ட்ரோல் ரூம்

புகார் கொடுத்தால் கைது!

யிலாடுதுறையில் லாட்டரி, கள்ளச்சாராயம், போதைப்பொருள் எனத் தடைசெய்யப்பட்ட பொருள்களின் விற்பனை தங்குதடையின்றி நடக்கிறது. விபசாரமும் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவர்களையே கைது செய்கிறாராம், இன்ஸ்பெக்டர். சமீபத்தில் சாராய வியாபாரி  ஒருவர் மீது புகார் கொடுத்தவரைக் கைது செய்துவிட்டார் இன்ஸ்பெக்டர். இதனையறிந்த எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போலீஸைக் கண்டித்துச் சாலை மறியலுக்குத் தயாரானார்கள். இது உயரதிகாரிகள் கவனத்துக்கு வந்ததும், கைது செய்தவரை விடுவிக்கும்படி இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்தே பிரச்னை முடிவுக்கு வந்தது. அந்த இன்ஸ்பெக்டரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

சர்க்கரையின் மாமூல் அக்கறை!

மிழகத்தை உலுக்கிவரும், சென்ஸிட்டிவ் வழக்கு ஒன்றை விசாரிக்கும் பொறுப்பு, சென்னை மத்தியக் குற்றப்பிரிவைச் சேர்ந்த ‘சர்க்கரையான’ அதிகாரியிடம் தரப்பட்டுள்ளது. அவர் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, நடைபாதைக் கடைகளில் கடைக்கு 4,000 என மாதாந்திர மாமூல் வசூலித்து, லட்சக்கணக்கில் புரண்டவராம். ‘இப்படிப்பட்டவரிடம் முக்கியமான வழக்கை ஒப்படைத் துள்ளனர், ஒரு ‘லம்ப்’ அமெளன்டுக்கு வழக்கின் ஓட்டைகளை இவரே எதிர் பார்ட்டிகளிடம் விற்றுவிடுவாரே’ என்று போலீஸ் அதிகாரிகள் சிலர் நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர். 

கன்ட்ரோல் ரூம்

மண்ணா... மணலா?

நாகை மாவட்டம், திருவெண்காடு காவல் நிலையத்தின் மறைமுக ஆதரவோடு, பி.ஜே.பி பிரமுகர் நடத்திவந்த சட்டவிரோத மணல் குவாரியை, மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் அதிரடியாகத் தடுத்து நிறுத்தி குவாரிக்கு  சீல் வைத்தார். இப்போது குவாரியில் இருந்து கைப்பற்றப்பட்டது மணலா, மண்ணா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மணல் என்றால் பொதுப்பணித்துறை, மண் என்றால் கனிமவளத்துறை ஏலம் விட வேண்டும் என்பது அரசு விதி. இரண்டு துறைகளும் பட்டிமன்றம் நடத்தி வருவதால் இதுநாள்வரை ஏலம் விடப்படவில்லை