Published:Updated:

#GadgetReview: குறைந்த விலை... தரமான ஆடியோ... #MISoundBar வாங்கலாமா?

இது இசை விரும்பிகளுக்கான சாதனம் கிடையாது. படம் மற்றும் சீரிஸ் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தவே ஷியோமி கடினமாக உழைத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

#GadgetReview: குறைந்த விலை... தரமான ஆடியோ... #MISoundBar வாங்கலாமா?
#GadgetReview: குறைந்த விலை... தரமான ஆடியோ... #MISoundBar வாங்கலாமா?

ந்தப் புதிய வருடத்தை MI சவுண்ட்பார் அறிவிப்புடன் தொடங்கியது ஷியோமி. ஏற்கெனவே நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் டிவி பரவலாகச் சென்று சேரத்தொடங்கியிருக்கும் நேரத்தில் இந்த சவுண்ட்பார் மூலம் வீடியோ, ஆடியோ எனப் பொழுதுபோக்கு சாதனச் சந்தையில் இன்னும் ஒரு படி முன்னேற்றம் கண்டு பல வீடுகளின் கதவுகளையும் தட்டலாம் என நம்புகிறது ஷியோமி. டிவியின் முதன்மையான விஷயம் வீடியோ ஒளிபரப்பாகும் தரம்தான் என்பதால் ஒலிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நல்ல ஒலியைக் கொண்டுவர வேண்டுமென்றாலும் டிவியின் சைஸ் பெரிதாகிவிடும். இதற்கு மாற்றாகவே இந்த சவுண்ட்பாரை அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறது ஷியோமி. ஆனால் மக்களின் லைக்ஸைஅள்ள போதிய அம்சங்கள் இந்த சவுண்ட்பாரில் இருக்கிறதா? 

டிசைன்

ஷியோமியின் முந்தைய சாதனங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த சவுண்ட்பார். fabric ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளதால் பார்க்க அழகாகவே இருக்கிறது. சுமார் 2 கிலோ எடையுள்ள இதில் கறுப்பு நிறத்தில் ஒரு வேரியன்ட் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஷியோமியின் Mi டிவிகளே கறுப்பு நிறத்தில் வருவதால், அவற்றிற்கு வெள்ளை அந்த அளவுக்கு செட் ஆகவில்லை. 33 இன்ச்கள் நீளமுள்ள இவற்றை `Wall mount' செய்யவும் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே உங்கள் டிவி `Wall mount' செய்யப்பட்டிருந்தால் கீழே இதையும் `Wall mount' செய்துகொள்ளலாம். இதற்குத் தேவையான ஆணிகள் உட்பட அனைத்துமே இதனுடன் வந்துவிடுகிறது. இதை டேபிள் மீதும் வைத்துக்கொள்ளலாம். அசையாமல் நிற்கக் கீழே ரப்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே டிசைனில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறது ஷியோமி.

வசதிகள்

ரிமோட் கிடையாது என்பதால் கையால்தான் சத்தத்தை ஏற்றி இறக்கமுடியும். அதன் அளவைக் காட்டவும் எந்த டிஸ்பிளேவும் கிடையாது. இருப்பினும் இதன் விலைக்காக இதை மன்னித்துவிடலாம். ப்ளூடூத், 3.5 AUX இன்புட், ஃபைபர் ஆப்டிக் இன்புட், co-axial SPDIF இன்புட் மற்றும் சிவப்பு, மஞ்சள் ஆடியோ இன்புட் என மொத்தம் 5 முறைகளில் இந்த சவுண்ட்பார்களை கனெக்ட் செய்யமுடியும். இவற்றை செலக்ட் செய்ய தனித்தனி பட்டன்களும் LED லைட்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கிட்டத்தட்ட எந்த டிவியையும் இதனுடன் கனெக்ட் செய்யலாம். ப்ளூடூத் இருப்பதால் போன், லேப்டாப் ஆகியவற்றை கனெக்ட் செய்வதும் எளிதாகவே இருக்கிறது. இருப்பினும் ஒரு நல்ல `wired' கனெக்ஷனில் இருக்கும் தெளிவு ப்ளூடூத்தில் கிடைக்காது. சவுண்ட்பாருடன் SPDIF கேபிள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் AUX கேபிள் கொடுத்திருந்தால் அனைவருக்கும் உதவியிருக்கும். டிவியில் SPDIF அல்லது ப்ளூடூத் வசதி இல்லாதவர்கள் இதனால் புதிய வயர் ஒன்றை வாங்க வேண்டியது வரலாம். மற்றபடி குறைகள் பெரிதாக இல்லையென்றாலும் இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் HDMI வசதியும் இதில் மிஸ்ஸிங்! 

ஸ்பெக்ஸ்

மொத்த சவுண்ட்பாரையும் 8 யூனிட்டுகளாகப் பிரித்துவிடலாம். இரண்டு பேஸ் (Bass) யூனிட்கள், பி இரண்டு dome treble யூனிட்கள், நான்கு பாஸ்ஸிவ் ரேடியேட்டர்கள். இதில் 2 பேஸ் யூனிட்கள் அதிர்வுகளை உணரவைக்கும் பேஸ் சத்தத்தையும், dome treble யூனிட்கள் கண்ணாடி உடைவது போன்ற treble சத்தத்தையும் தரும். இதனால் தனியாக வூஃபர் எதுவும் இல்லாமலேயே இதன் பேஸ் சத்தம் எதிர்பார்த்ததை ஓரளவு நன்றாகவே இருக்கிறது. இது போனஸ்!

ஆடியோ தரம்

டெக்னிக்கல் விஷயங்களை விடுவோம், கொடுக்கும் விலைக்கு ஏற்ற ஆடியோ தரம் இருக்குமா என்பதுதான் உங்களில் பலரின் கேள்வியாக இருக்கும். அந்த விஷயத்தில் டிஸ்டிங்க்ஷன் பெறுகிறது இந்த சவுண்ட்பார். இந்த ஒரு 1 வார காலத்தில் ஆங்கிலத் தொடர்கள் தொடங்கி தமிழ்ப் படங்கள், லைவ் டிவி, விளையாட்டு, லோக்கல் குத்துப் பாடல்கள் வரை அனைத்தையும் இதில் கேட்டதில் ஒன்று மற்றும் புரிகிறது. இது இசை விரும்பிகளுக்கான சாதனம் கிடையாது. படம் மற்றும் சீரிஸ் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தவே ஷியோமி கடினமாக உழைத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. வசன உச்சரிப்புகள் தொடங்கி பின்னணி சத்தங்கள் வரை அவ்வளவு துல்லியம் இருக்கிறது இந்த சவுண்ட்பாரில். பேஸ் உட்பட அந்த அனுபவத்திற்காகவே செதுக்கப்பட்டதாக தெரிகிறது. அதைக் கூறித்தான் விளம்பரமும் செய்கிறது ஷியோமி. அதே சமயம் இசை என்று வந்துவிட்டால் சில பாடல்கள் கேட்கும்போது ஏதோ மிஸ் ஆவதை உணராமல் இருக்கமுடியவில்லை. பார்ட்டி ஸ்பீக்கர்கள் போல பேஸ் அதிரவிட வேண்டும் என விருப்பப்படுவோர் முற்றிலுமாக இந்த சவுண்ட்பாரை தவிர்த்துவிடலாம்.

டிவிகளில் வரும் ஸ்பீக்கர்களில் சரியான படம் பார்க்கும் உணர்வைப் பெறாமல் வெறுப்படைந்தவர்களுக்குதான் இந்த சவுண்ட்பார். பேஸ் விரும்பிகள் வேறு சப் ஃவூபர் உடன் வரும் 2.1 ஸ்பீக்கர்களை வாங்கலாம். அவற்றையும் நாங்கள் பயன்படுத்தியுள்ளதால் அவற்றில் படம் மற்றும் சீரிஸ் பார்க்கும்போது இதில் கிடைக்கும் தெளிவு கிடைக்கவில்லை என்பதையும் எங்களால் கூறமுடியும். சினிமாவா, இசையா என்ற கேள்வியில்தான் இந்த சவுண்ட்பாரை வாங்கலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கான விடை இருக்கிறது. உடனே இசை அந்த அளவுக்கு மோசமா என்று கேட்காதீர்கள் அதுவும் ஓகேதான். ஆனால் டிவியில் இருக்கும் ஸ்பீக்கர்களுக்கு மாற்றாக நல்ல ஒரு சினிமா அனுபவத்தை தருவதற்கே இந்த சவுண்ட்பார் என்று கூறியதை செய்யத் தவறவில்லை ஷியோமி. முதலில் இந்த விலையில் இவ்வளவு கொடுத்திருப்பதற்காகவே ஷியோமியைப் பாராட்டலாம். மற்ற பெயர்பெற்ற பிராண்ட்களின் ஆரம்பவிலை சவுண்ட்பார்கள் இதைவிட அதிகமான விலையில் விற்கப்பட்டாலும்கூட இதன் ஆடியோ தரத்தின் அருகில் கூட அவற்றால் நெருங்கமுடியாது. 

முக்கியக் குறிப்பு: ஸ்பீக்கர்களுக்கும் சவுண்ட்பார்களும் இருக்கும் முக்கிய வித்தியாசம், சவுண்ட்பார்கள் பெரிதாக இடத்தை அடைக்காது. வயர்கள் அதிகமாக இருக்காது. இருப்பினும் ஸ்பீக்கர்களை விட சிறியதென்பதால் சாதாரண அறைக்குத்தான் சவுண்ட்பார்கள் செட் ஆகும். இந்த ஷியோமி சவுண்ட்பார் கூட சராசரியான அறையை அதன் சத்தத்தால் நிரப்பிவிடும். ஆனால் சற்றே பெரிய அறைகளில் வைக்கப்போகிறீர்கள் என்றால் விலை அதிகமென்றாலும் நல்ல பவர் கொண்ட ஸ்பீக்கர்கள் வாங்குவதே நல்லது.

ப்ளஸ்

குறைந்த விலை
படம் மற்றும் சீரிஸ் பார்ப்பதற்கான ஆடியோ தரம்
அதிக கனெக்ட்டிவிட்டி வசதிகள் 
அழகிய டிசைன்

மைனஸ் 

ரிமோட் கிடையாது
இசை கேட்பதற்கு உகந்தது இல்லை.

இறுதியாகப் பார்க்கையில் அதிகமாகப் படங்கள் மற்றும் சீரிஸ் பார்ப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். கொடுக்கும் பணத்திற்கு நல்ல தரத்தை தருகிறது ஷியோமி. இசை மட்டுமே பெரும்பாலும் கேட்பவர்கள் இதைத் தவிர்க்கலாம்.