Published:Updated:

நியூசிலாந்தில் அசத்திய இந்திய அணி! - 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடரைக் கைப்பற்றி சாதனை

நியூசிலாந்தில் அசத்திய இந்திய அணி! - 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடரைக் கைப்பற்றி சாதனை
நியூசிலாந்தில் அசத்திய இந்திய அணி! - 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடரைக் கைப்பற்றி சாதனை

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றுள்ளது.


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக இந்தப் போட்டியில் தோனி விளையாடவில்லை அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்தார். ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பியதால் கடந்த போட்டியில் இடம்பிடித்திருந்த விஜய் சங்கர் அதிரடியாகக் கழற்றிவிடப்பட்டார். இந்த இரண்டு மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியது. 

நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில், மூன்றோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இந்த ஜோடியை விரைவிலே ஷமி பிரித்தார். சிறிது நேரத்திலே கப்திலை புனேஷ்வர்குமார் வெளியேற்றினார். ஷமி - புவனேஷ்வர் கூட்டணி நியூசிலாந்து அணிக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. சிறிது நேரத்தில் கேப்டன் கனே வில்லியம்ஸனை சாஹல் வெளியேற்ற நியூசிலாந்து அணி தடுமாறியது. ராஸ் டெய்லர் - நாதம் அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றனர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளிக்கும் வகையில் விளையாடியது. சாஹல் சுழலில் லாதம் சிக்க இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதன்பின் ரன் வேகம் குறைய ஆரம்பித்தது.

இந்தியப் பந்துவீச்சாளர்கள் தங்களது பிடியை வலுப்படுத்தினர். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் ராஸ் டெய்லர் அச்சுறுத்தி வந்தார். அவரை ஷமி வெளியேற்ற இந்திய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இறுதியில் அந்த அணி 49 ஓவர் முடிவில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா தரப்பில், ஷமி 3, புவனேஷ்வர் குமார், சஹால், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் மிரட்டிய  ரோகித் ஷர்மா, தவான் கூட்டணியை ட்ரெண்ட் பவுல்ட் விரைவிலே பிரித்தார். பவுல்ட் பந்துவீச்சில் தவான் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி , ரோகித் ஷர்மாவுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். சிறப்பாக விளையாடிய ரோகித் 62 ரன்களில் வெளியேறினார். அரைசதம் கடந்த கேப்டன் கோலி சிறிதுநேரத்தில் அவுட்டானர்.

பந்துகள் அதிகம் இருந்ததால் அம்பத்தி ராயுடு- தினேஷ் கார்த்திக் ஜோடி நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் போட்டியைத் தித்திப்பாக முடித்து வைத்தனர். 42 ஓவர்களில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அம்பத்திராயுடு (40), தினேஷ் கார்த்திக் (38) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்தத் தொடரையும் கைப்பற்றியுள்ளது.