Published:Updated:

ஆண்டுக்கு 80 லட்சம் வருமானம்... ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தும் ஸ்வேதா!

ஆண்டுக்கு 80 லட்சம் வருமானம்... ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தும் ஸ்வேதா!
ஆண்டுக்கு 80 லட்சம் வருமானம்... ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தும் ஸ்வேதா!

ரென்ட்டல் ஆடைகளைப் பொறுத்தவரை அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத டிரெண்டியான ஆடைகளுக்குத் தான் மக்களிடம் எப்போதும் டிமெண்ட் இருக்கும்

``டிரெண்டிற்கு ஏற்ப நம்மை அப்டேட் செய்து கொண்டு, கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் நிச்சயம் சக்சஸ்தான்" என ஆர்வமாகப் பேசத்தொடங்குகிறார் ``கேண்டிட் நாட்ஸ்" என்ற ஆண்களுக்கான ரென்ட்டல் ஆடை நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வேதா போதர்.
 ``எனக்குச் சொந்த ஊர் ஈரோடு. படிச்சது கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங். அப்பா கார்மென்ட்ஸ் பிசினஸ்ல இருக்காங்க. அதனால சின்ன வயசுல இருந்தே துணியின் ரகம், விலை, டிசைன்கள், டிரெண்ட் போன்றவற்றில் அப்டேட்டாக இருப்பேன். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்தால், எங்களை ஊக்குவிக்க அப்பா கிப்ட் கொடுப்பாங்க. எனக்கு கிஃப்ட் வேண்டாம்பா, அதுக்குப் பதிலாக என்னையும் பிசினஸ் பார்ட்னராகச் சேர்த்துக்கோங்க'னு அப்பாவிடம் சின்ன வயதில் நிறைய முறை சொல்லியிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே, பிசினஸ் வுமன் ஆகவேண்டும் என்பது என் கனவு.

கல்லூரி படிக்கும் போது டிரெஸ் டிசைனிங்கில் ஆர்வம் ஏற்பட, எனக்கான ஆடைகளை நானே வடிவமைத்துக்கொள்வேன். என்னுடைய ஒவ்வொரு ஆடையிலும் சின்னச் சின்ன நுணுக்கமான வேலைப்பாடுகள் மூலமாக, ஒரு தனித்துவத்தை வடிவமைத்து இருப்பேன். ``உன் ஆடைத்தேர்வு மற்றவர்களை விட ஸ்பெஷலாக இருக்கிறது. படிப்பை விட்டுட்டு டிரெஸ் டிசைனிங் பிசினஸ் ஆரம்பிச்சுரு"னு என் ஃப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க. ஆனால் நான் அதை என் எதிர்கால பிசினஸிற்கான ஸ்பார்க்காக எடுத்துக்கொண்டேன். படிப்பு முடித்ததும் என் துறை சார்ந்த சில தனியார் நிறுவனங்களில் சில வருடங்கள் வேலை பார்த்தேன். என் ஒவ்வொரு மாதச் சம்பளத்தையும் சேமித்து என் பிசினஸ்கான முதலீட்டை நானே ரெடி செய்தேன்.

என்னுடைய பிசினஸ் மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நிறைய தேடுதலுக்குப் பின் ரென்ட்டல் டிரெஸ் ஐடியா மனசுக்குள் ஸ்பார்க் ஆச்சு. ரென்ட்டல் ஆடைகளில் இருந்த பிளஸ், மைனஸ்களை ஆராய்ந்து மெட்டீரியல் வாங்குவதில் தொடங்கி, ஷோரூம் தொடங்குவதற்கான இடம் வரை எல்லாவற்றையும் பிளான் செய்த பிறகு, அப்பாவிடம் என் பிசினஸ் ஐடியாவைச் சொன்னேன். இந்த பிசினஸுக்கு ஸ்கோப் எப்படி இருக்கும்னு அப்பா ஆரம்பத்துல யோசிச்சாங்க. ஆனாலும் நான் உறுதியாக இருந்ததால் ரென்ட்டல் ஆடைகள் பிசினஸ் ஆரம்பிக்க, வீட்டில் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. உடனே பெங்களூரில் ``கேண்டிட் நாட்ஸ்" என்ற என்னுடைய கனவு ஷோரூமைத் திறந்துட்டேன்.
ஆரம்பத்தில் ஆண் - பெண் என இரு பாலினத்தவர்களுக்கும் ட்ரெண்ட்டுக்குத் தகுந்த ஆடைகளை வடிவமைத்தோம். வெஸ்டர்ன், டிரெடிஷனல், டிரெண்டி என எல்லா வகையான அவுட்லுக்கிற்கும் தேவையான ஆடைகள் அதற்கு மேட்சான அக்சசரிஸ்களுடன் தயார் செய்தோம். பிஸினஸ் தொடங்கிய சில மாதங்களிலேயே பெண்களின் ஆடைகளை விட ஆண்களின் ஆடைகளுக்கு நல்ல ஸ்கோப் இருந்ததால் ஆண்களை கிராண்ட் லுக்கில் காட்டும் பிளேசர்ஸ், டக்சிடோ, ஜோத்பூரி சூட்ஸ், ஷெர்வானி போன்ற ஆடைகளை டிசைனர்கள் மூலம் வடிவமைத்து வாடகைக்குக் கொடுக்க ஆரம்பித்தோம். எங்களுடைய ஆடையில் ஃப்னிஷிங் நன்றாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடி வர ஆரம்பித்தார்கள். எங்களுடைய ஷோருமிலே டிசைனர்கள் குழு இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் எந்த நிகழ்ச்சிக்காக ஆடைகளைத் தேர்வு செய்கிறார்கள், என்ன மாதிரியான ஆடைகள் அவர்களின் உடல்வாகுக்குப் பொருத்தமாக இருக்கும், எப்படி அக்ஸசரிஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்வது என்று அவர்களுக்கு ஐடியா கொடுப்பார்கள். நேரில் தேடி வர முடியாத வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் பக்கத்தை ஆரம்பித்தோம். ஆன்லைன் எங்களிடம் இருக்கும் ஆடைகளையெல்லாம் சைஸ் பிரித்து அப்லோடு செய்தோம். வாடிக்கையாளர் எந்த ஆடையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களின் உடல் வாகு மற்றும் உயரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து, ஹோம் டெலிவரி செய்கிறோம்.

ரென்ட்டல் ஆடைகளைப் பொறுத்தவரை அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத டிரெண்டியான ஆடைகளுக்குத்தான் மக்களிடம் எப்போதும் டிமெண்ட் இருக்கும் என்பதால், டிரெண்டில் என்ன இருக்கிறது என்பதை அப்டேட் செய்து கொண்டே இருப்பது அவசியம். அதே போன்று சிலருக்கு `வாடகை ஆடை அணிந்தால் அலர்ஜி வருமோ?' என்ற பயமும் சந்தேகமுமிருக்கும். நாங்கள் ஒவ்வோர் ஆடையையும் வெந்நீர், ஆன்டி-செப்டிக் லோசன் பயன்படுத்தித் துவைத்தே ஒவ்வொரு முறையும் கொடுக்கிறோம்.ரென்ட்டல் ஆடைகள் பணத்தை மிச்சப்படுத்துகிறது என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு 80 லட்சம் வருவாய் கிடைக்கிறது. மாறுபட்ட யோசனைக்கு எப்போதும் மதிப்பு அதிகம்'' என தம்ஸ் அப் செய்கிறார் ஸ்வேதா.

அடுத்த கட்டுரைக்கு