Published:Updated:

பறவைகளின் மொழி புரிய வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியது இவைதாம்!

பறவைகளின் மொழி புரிய வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியது இவைதாம்!
பறவைகளின் மொழி புரிய வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியது இவைதாம்!

பறவைகள் புரியும் அற்புதங்கள் பல. அவற்றின் மொழியைப் புரிந்துகொள்கையில் அவை சொல்லும் பல கதைகளைக் காதுகொடுத்து ரசிக்கையில் நாமும் நமக்கே தெரியாமல் இயற்கை ஆர்வலர்களாக உருமாறிக் கொண்டிருப்போம். பறவை பார்த்தலின் போது நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை இவைதாம்!

றவைகள் உலகின் ஆகச்சிறந்த கதை சொல்லிகள். நாம் யாவருமே அவற்றுக்குக் குழந்தைகளே. எப்போதுமே விழிப்புடன் இருக்கும் பறவைகளின் மொழியை இயற்கை ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் புரிந்துகொள்வார்கள். மஞ்சள் தொண்டைச் சின்னானின் மொழியைப் புரிந்துகொண்ட பின்னர்தான் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்களை உணர்ந்து உலகின் புகழ்பெற்ற பறவையியலாளராக அவதாரமெடுத்தார்  சாலிம் அலி. சூழலியல் எழுத்துகள் பலவற்றைத் தமிழுக்குக் கொடையளித்த நக்கீரனைச் சூழலியலாளராக உருவாக்கியதில் போர்னியோ காடுகளில் அவர் பார்த்த இருவாச்சிக்கும் பங்குண்டு. இப்படியாகப் பறவைகள் புரியும் அற்புதங்கள் பல. அவற்றின் மொழியைப் புரிந்துகொள்கையில் அவை சொல்லும் பல கதைகளைக் காதுகொடுத்து ரசிக்கையில் நாமும் நமக்கே தெரியாமல் இயற்கை ஆர்வலர்களாக உருமாறிக் கொண்டிருப்போம். அத்தகைய பறவைகளின் மொழியை நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டுமா! அந்தப் புதிர்களைப் புரிந்துகொள்ள செய்யவேண்டியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமா! மேலே படியுங்கள்.

1. அமைதியாக ரசிப்பதற்கு ஏற்றவாறான இடத்தைத் தேர்ந்தெடுங்கள்

பறவையின் மொழியைக் கற்றுக்கொள்ள முதலில் செய்யவேண்டியது இதைத்தான். எந்தப் பறவையைக் கவனிக்க வேண்டுமோ அதற்கேற்றவாறான தகுந்த இடத்தைத் தேர்வு செய்யுங்கள். அங்கு அவற்றின் இன்னிசையைத் தவிர வேறெந்த ஓசையும் கேட்காதவாறாக இருந்தால் சிறப்பு. அதே இடத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துங்கள். தினசரி அதே இடத்தை அதே நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும்போது பறவைகளுக்கு உங்களின்மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். பறவைகளைக் கவனிக்கவும் அவற்றைப் புரிந்துகொள்ளவும் உறவாடவும் முதலில் அவற்றின் நம்பிக்கையைப் பெறவேண்டும். இப்படியான சீரான செயற்பாட்டின் மூலம் உங்களால் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.

ஒவ்வொரு பறவையிடமும் உங்களுக்கோர் உணர்வு தனிப்பட்ட முறையில் ஏற்படும். உங்களால் அவற்றைத் தனித்தனியே இனம்காண முடியும். அடையாளப் பெயர்கூட வைக்கத் தோன்றலாம். அவையும் உங்களை அடையாளப் படுத்திக்கொள்ளத் தொடங்கும். அவற்றின் உணவூட்டும் பழக்கம், உணவு தேடுவதில் அதனுடைய போட்டியாளர் யார், அவற்றை வேட்டையாடும் மற்ற பறவைகள், விலங்குகள் எது என்ற விவரங்கள் உங்களுக்கு அத்துப்படியாகும். அவற்றின் வாழ்வியல் செயற்பாடுகளுக்கு நீங்கள் இடையூறு செய்யக்கூடியவராகத் தெரியமாட்டீர்கள். நீங்கள் வழக்கமாக வருவதை அவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பறவைகள் உங்களை எந்த அளவுக்கு ஆபத்தற்றவராக நினைக்கின்றனவோ அந்த அளவுக்கு அவற்றின் வாழ்வியலைக் கற்றுக்கொள்ள முடியும். அவற்றின் ஒவ்வோர் அழைப்புக்கும் இருக்கும் வேறுபாட்டை அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அந்த அன்னியோன்னியம் அவசியம். அது கிடைக்கும்.

2. பறவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்துக்குப் பல வகையான பறவைகள் வரலாம். ஆனால், ஆரம்பத்தில் தினமும் பார்க்க முடிகிற அங்கேயே வாழ்கின்ற பறவைகளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது சிறப்பு. மற்றவற்றை அவ்வப்போது கவனிப்பதன் மூலமாகச் சிறிது சிறிதாகப் பின்னர் கற்றுக் கொள்ளலாம். தொடக்கத்தில் அந்த மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடர்ச்சியான கவனிப்பு அவசியம். அதற்குத் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளே உதவும். உதாரணத்துக்குச் சிட்டுக்குருவி, தேன் சிட்டு, தையல் சிட்டு, சின்னான், குயில், மைனா போன்றவற்றைத் தேர்வுசெய்து கொள்ளலாம். ஏனென்றால் இவற்றைப் பெருவாரியான இடங்களில் நம்மால் எப்போதுமே பார்க்கமுடியும். 

அதிகபட்சம் மூன்று முதல் நான்கு பறவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஒரே பறவையைத் தினமும் கவனிக்க ஏதுவாக இருக்கும். முன்னரே சொன்ன அடையாளப்படுத்துதல், அவை உங்களோடு ஒன்றிப்போதல் போன்றவையும் நடக்கும். அடுத்ததாக அவற்றின் அடிப்படையான தினசரி செயல்களைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு அன்றாடம் அவை என்னென்ன செய்கின்றன என்பன போன்றவற்றை. பல்வேறு காரணிகள் பறவைகளை அச்சுறுத்தும். அவை என்னென்ன காரணங்கள், அப்படி அச்சமுறும்போது அவை என்ன செய்கின்றன என்பனவற்றைக் கவனியுங்கள். மற்ற பறவைகளை எச்சரிக்கும்போது எப்படி ஒலி எழுப்புகிறது, தன் வாழ்விடத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களை எப்படியெல்லாம் தொல்லைக்கு உள்ளாக்குகின்றன என்பவையும் கவனிக்க வேண்டியவை. இந்த மாதிரியான விதவிதமான சமயங்களில் அவை செய்யும் வெவ்வேறு விதமான செயல்களைக் கவனிக்க வேண்டும்.

இப்படியான இந்த இரண்டையும் தொடர்ச்சியாகச் செய்யும்போது பறவைகளைக் கண்டறியவும், மாற்றங்கள் நிகழும்போது அதையுணர்ந்து கவனிக்கவும் உங்களால் முடியும். இந்தத் தேர்ச்சி வந்துவிட்டால் இனி அனைத்துமே சுலபம்.

(குறிப்பு: காகங்களும் அவற்றின் உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வகைப் பறவைகளும் மிகவும் புத்திசாலிகள். விதிமீறல்களைச் செய்வதில் பேரார்வம் கொண்டவர்கள். அதனால் பறவை கல்வியின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள். அவர்கள் பொல்லாதவர்கள். உங்களைக் குழப்புவதற்காகவே வலியவந்து தம் செயல்களை மாற்றி மாற்றிச் செய்து விளையாடுவார்கள். நம் அருகிலேயே எளிதாகவே பார்க்கக்கூடிய பறவையாகவே இருந்தாலும் காகங்களைப் பின்னால் கவனித்துக் கொள்ளலாம்.)

3. முக்கியமான ஐந்து குரலொலிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்:

முதல் இரண்டைச் செய்யும்போது சிலவற்றைக் கவனிப்பீர்கள். ஒலியெழுப்புவதற்கான காரணங்களும் அந்தக் காரணங்களுக்கான ஒலி வகைகளும் அவற்றிடம் நிறையவே இருக்கும். அவற்றில் சிலவற்றைக் குறிப்பாக நாம் கவனித்தாலே போதுமானது. பறவைகள் வெறுமனே மரக்கிளையில் அமர்ந்து பொழுதுபோக்கப் பாடிக்கொண்டிருக்காது. அவை எதைப் பார்க்கிறதோ எதை அனுபவிக்கிறதோ அவற்றைப் பகிர்ந்து கொள்வதாகவே அந்தக் குரலொலிகள் அவற்றின் இன்னிசைகள் அமையும். அந்தக் குரலொலியை ஐந்தாகப் பிரிக்கலாம் என்கிறார் பறவை மொழியியலாளரான ஜான் யங் (John Young). அவை,

பாடல்கள்: தம் வாழ்விட எல்லையைப் பாதுகாக்கவும், இனப்பெருக்கக் காலத்தின்போது இணையை ஈர்க்கவும் பாடும் பாடல்.

உரையாடல்: பயணத்தின்போது அல்லது தன் குஞ்சுகளுக்கு உணவூட்டும்போது தன் அருகே இருக்கும் மற்ற பறவைகளோடு பேசுவது.

பசி அழைப்பு: புதிதாகப் பிறந்த குழந்தைகளும் கூட்டைவிட்டு இன்னமும் பறக்க இயலாத பறவைகளும் தன் தாயிடம் பசியை உணர்த்தும்போது.

தற்காப்பு: தன் வாழ்விட எல்லைக்குள் நுழையும், ஆக்கிரமிக்கத் துடிக்கும் மற்ற பறவைகளை எதிர்க்கும்போது.

எச்சரிக்கை: ஆபத்து வரும்போது. உதாரணத்துக்கு அவற்றை வேட்டையாட வேட்டையாடிகளின் வரவை உரைக்கும்போது.

எச்சரிக்கை ஒலியைக் கவனிக்கும்போது சற்று அதிக கவனத்தோடு இருந்தால் பல்வேறு வகைகளையும் அந்த வகைகள் உணர்த்தும் எச்சரிக்கை வகைகளையும் வேறுபடுத்தி உணர முடியும். உடனடியாக முடியவில்லை என்றாலும் காலப்போக்கில் பழக்கத்தின் மூலமாக முடியும். அவற்றால் தாம் எங்கிருக்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் மற்ற பறவைகளை எச்சரிக்க முடியும். அது வருகின்ற ஆபத்தைப் பொறுத்து மாறுபடும். பறவைகளுக்குள் பொதுவான இந்த ஐந்து வகை மொழி வேறுபாடுகளைப் புரிந்துகொண்டாலே நீங்கள் பறவை மொழியியலில் ஓரளவுக்குத் தேர்ந்துவிடலாம். இப்போது இந்த முறையில் நீங்கள் கவனிக்கத் தேர்ந்தெடுத்த உள்ளூர்ப் பறவைகளை அடிக்கடி பார்க்கக்கூடிய பறவைகளில் இந்தக் குரலொலிகளை இனம் காண முயலுங்கள். இதுவே இன்னும் ஆழமாக அவற்றின் மொழியைப் புரிந்துகொள்ள நீங்கள் அடிப்படையாகச் செய்யவேண்டியவை.

எச்சரிக்கை மொழிகளைப் புரிந்துகொள்ளுதல்

மூன்றாவது வழிமுறையில் குறிப்பிட்டுள்ள முதல் நான்கிலும் விரைவாகத் தேர்ச்சிபெற்று விடுவீர்கள். கடைசியாக எச்சரிக்கை மொழி. பறவைகள் எச்சரிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எச்சரிப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த நான்காவது வழிமுறை. அவை ஏற்படுத்தும் ஒலிகள் அந்த அர்த்தத்தைச் சொல்லும். அந்த அர்த்தம் நமக்குப் புரிய சற்றே அதிகமாகக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அப்போது பறவைகள் எதில் ஆர்வம் மிக்கதாக இருக்கின்றன, எதைக் கண்டு பயப்படுகின்றன என்று அந்த எச்சரிக்கைகளை வேறுபடுத்த முடியும். 

ஒவ்வோர் எச்சரிக்கையும் ஏற்படுத்தும்போது அதைத் தெரிவிக்கும் பறவையின் உடல்மொழியும் மாறுபடும். அந்த உடல்மொழியே ஆபத்து மேலிருந்து வருகிறதா கீழிருந்து வருகிறதா என்பனவற்றைப் பாதி உணர்த்திவிடும். உதாரணத்துக்குப் பறவை கிளையிலிருந்து குதித்து குதித்து அமர்ந்தவாறு எச்சரிக்கை செய்தால் ஆபத்து கீழிருந்து மேலேறி வருகிறதென்று அர்த்தம். அடுத்ததாக அந்தக் குரலொலியில் இருக்கும் உணர்ச்சிகளை வைத்துப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு உச்சரிப்பைக் கவனிக்க வேண்டும். முதல் நான்கு மொழிகளைக் கவனிக்கும்போதே அந்த உச்சரிப்பைக் கவனிக்க ஓரளவுக்கு நீங்கள் பழகி விடுவீர்கள். அதனால், பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. பொதுவான மொழிகளை வகைப் பிரித்தது போலவே ஜான் யங் எச்சரிக்கை ஒலிகளையும் பன்னிரண்டாகப் பிரித்துள்ளார். அந்த வகைப்பாடுகளைக் கவனிப்பதன் மூலமே உணரவும் கற்றுக்கொள்ளவும் முடியும். 

எச்சரிக்கை மொழிகளைப் புரிந்துகொள்ளத் தொடங்குவது நம்மை அடுத்தகட்டத்துக்கும் அழைத்துச் செல்லும். பறவைகளின் எச்சரிக்கை மொழியே அந்த இடத்தில் இருக்கும் மற்ற பறவைகள், விலங்குகள் என்னென்ன என்பதை நமக்குச் சொல்லிவிடும். உதாரணத்துக்கு, பறவைகள் மொத்தமாகக் கூடி எச்சரிக்கை ஒலியெழுப்பிக் கொண்டே தாக்குவதற்குத் தயாரானால், அந்த இடத்தில் ஆந்தைகள் இருக்கின்றன என்று அர்த்தம். அந்த ஆந்தைகளை அங்கிருந்து துரத்தவே ஒன்று கூடுகின்றன. 

இனி பறவை நோக்குதலின்போது அனைத்தையும் மொத்தமாக அமல்படுத்துங்கள்

இறுதியாக எங்கு பறவை நோக்குதலுக்குச் சென்றாலும் இந்த நான்கு வழிமுறைகளையும் சேர்த்தே முயன்று பாருங்கள். ஒவ்வொரு முறை இவற்றைச் செய்யும்போதும் என்னென்ன பறவைகளைப் பார்க்கிறீர்கள், அவற்றின் உருவத் தோற்றும் போன்றவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். குறிப்புகளையும் கவனித்த நுணுக்கங்களையும் பின்னர் ஒன்று சேர்த்து பாதுகாத்து வையுங்கள். அது நாளை உங்களுக்கே சந்தேகங்கள் ஏற்படும்போது பயன்படலாம்.

ஆரம்பத்தில் சிறிது சிறிதாகப் புரிந்துகொள்ளத் தொடங்கி இறுதியில் பறவைகளின் மொழியில் வல்லுநராவீர்கள். அவை சொல்லும் கதைகளைக் கேட்டு ரசித்துக்கொண்டே நீங்களும் நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருப்பீர்கள். இறுதியில் இயற்கையின் இசை ஞானிகளோடு நீங்களும் உரையாடிக்கொண்டிருப்பீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு