பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

காலமே... காதலே...

காலமே... காதலே...
பிரீமியம் ஸ்டோரி
News
காலமே... காதலே...

காலமே... காதலே...

ரு புகைப்படத்தைப் பார்க்கும் போது சமயங்களில் நம் காலம் உறைந்துநிற்கும். சமயங்களில் நம் காலம் பின்னோக்கி விரைந்து செல்லும். அதுவும் அது அன்பின் நிமித்தமாய், காதலின் அடையாளமாய் இருக்கும்போது எப்போதும் அந்தக் கடந்துபோன தருணத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. 

காலமே... காதலே...

1984-ம் ஆண்டு செல்வன், குடந்தை அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியில் பயின்ற நேரம். அப்போதுதான் ரஷ்யத் தொழில்நுட்பத்தில் தயாரான ஜெனித் வகை கேமராவை நண்பர் ஒருவரிடமிருந்து 800 ரூபாய்க்கு விலைக்கு வாங்கியிருந்தார். அதற்கு முன்பு இரண்டு பேர் பயன்படுத்தி மூன்றாவதாகச் செல்வன் கைகளுக்கு வந்திருந்தது. 

காலமே... காதலே...1987-ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது அவர் நண்பர் ஒருவர், அவரின் அண்ணனது திருமணத்தைப் பதிவு செய்து தரும்படி கேட்கிறார். அதற்கு முன்பு திருமண நிகழ்ச்சிகளைச் செல்வன் பதிவு செய்ததில்லை. நண்பர்கள் கொடுத்த நம்பிக்கையில் செல்வனும் அவர் நண்பரான மனோகரனும்  கும்பகோணத்திலிருந்து நாமக்கல்லில் உள்ள மணமகள் வீட்டிற்குச் செல்கின்றனர். இதற்கு முன்பு திருமண விழாக்களைப் பதிவுசெய்து அனுபவமில்லாததால் மிகவும் பதற்றத்துடனும், கவனத்துடனும் பதிவுசெய்ய ஆரம்பிக்கிறார்கள். மற்ற புகைப்படக்காரர்களின் படங்களைவிட தாம் எடுக்கிற புகைப்படங்கள் தனித்துத் தெரிய வேண்டும் என்பதால் நடக்கிற நிகழ்வுகளை ‘கேண்டிட்டாக’ எடுக்கிறார்கள். 

காலமே... காதலே...

1987-ம் ஆண்டில் 36 ரீல் கொண்ட படச்சுருளில் ஒன்று அல்லது இரண்டு படச்சுருள்களில் படம் எடுப்பது மிகுந்த சவால் நிறைந்த பணி. 35 எம் எம் கொண்ட 36 பிரேம்களில் ஒரு பிரேமைக் கூட வீணடிக்க முடியாத சூழல். மிகுந்த கவனத்துடன் தாலி கட்டும் நிகழ்வைப் படம்பிடித்துவிடுகிறார்கள்.  திருமணம் முடிந்து குழுவாகப் புகைப்படம் எடுக்கும்போது கேமராவில் புதிதாக ஒரு படச்சுருளை இணைத்துப் படம் எடுக்கிறார்கள். படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது படச்சுருளின் எண்ணிக்கை 39, 40 என்கிற எண்ணிக்கையைத் தாண்டியிருந்தது. ஒரு படச்சுருளில் 36 படங்களை மட்டுமே அப்போது எடுக்க முடியும். ஆனால், அதைக் கடந்து எண்ணிக்கை சென்றதால் செல்வன் பதற்றமடைகிறார். கேமராவில் படச்சுருள் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் இருவருக்கும் எழ ஆரம்பிக்கிறது. ஏனெனில், அவர்களுக்குக் கிடைத்த முதல் திருமண நிகழ்ச்சி. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அவர்கள்மீது இருக்கிற நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துவிடும். இருவருக்கும் பதற்றத்தில் வியர்க்க ஆரம்பித்திருக்கிறது.

படச்சுருளில் எடுக்கப்பட்ட படம் இருக்கிறதா என்பதை அறிய வேண்டுமானால் அவற்றை லேபில் வைத்துக் கழுவினால் மட்டுமே தெரியும் என்பதால் பதற்றத்துடன் வீடு திரும்புகிறார்கள். படச்சுருளைக் கழுவிப் பார்த்தபோது அவர்கள் நினைத்தது போலவே படம் இல்லாமல் வெறும் படச் சுருள் மட்டுமே இருந்திருக்கிறது. திருமண மண்டபத்தில் எந்த நிகழ்வையும் தவற விட்டுவிடக்கூடாது என்கிற பதற்றத்தில் படச்சுருளைச் சரியாகப் பொருத்தாமல் இருந்திருக்கிறார்கள். முதல் திருமணப் பதிவு இப்படி நிகழ்ந்துவிட்டதே என எண்ணி இருவரும் கவலைகொள்கிறார்கள். இந்தத் தகவலை மணமகன் வீட்டிற்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். திருமண வீட்டாரிடம் நடந்தவற்றைக் கூறினால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். 

காலமே... காதலே...

`இதற்குப் பிராயச்சித்தமாக எதாவது செய்ய வேண்டும், நம்மீது இருக்கிற நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும்’ என நினைத்தவர்களுக்கு மனதில் தோன்றியதுதான் ‘போஸ்ட் வெட்டிங்’ ஷூட். ஒருவழியாக ஏதேதோ சொல்லி, அந்தத் தம்பதியைச் சம்மதிக்கவைத்துவிட்டார்கள்.

தம்பதியர் எந்த நிறத்தில் உடை உடுத்த வேண்டும், தலைக்கு எண்ணெய் வைக்கலாமா வேண்டாமா, முகத்திற்கு பவுடர் பூசலாமா வேண்டாமா என்கிற பலகட்ட கேள்விகளை முன்வைத்து இருவரும் விவாதிக்கிறார்கள். ஒரு சினிமாப் படப்பிடிப்பிற்குத் தயாராவது போலத் தயாராகியிருக்கிறார்கள்.

அப்போது  மணமக்களைப் புகைப்படம் எடுக்க, கேமராக்கள் ஸ்டுடியோவைத் தாண்டி வெளியே செல்லாத காலம். எந்த நேரத்தில் புகைப்படம் எடுக்கலாம், எந்த இடத்தில் எடுக்கலாம் எனப்  பலவற்றையும் யோசிக்கி றார்கள். நண்பர்கள் இருவரும் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்  பாலுமகேந்திராவை மானசிக குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், அவருடைய படங்களின்  காட்சிகளை மனதிற்குள் ஓடவிட்டுப்  பார்த்திருக்கிறார்கள். திரையரங்குகளில் ஒட்டப்பட்டிருந்த அவருடைய பட போஸ்டர்கள், ஸ்டில்கள், எனத் தேடித்தேடி உள்வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். வார இதழ்களில் வரும் அவருடைய படக் காட்சிகள் என அனைத்தையும் உள்வாங்கிக்கொள்கிறார்கள். பாலுமகேந்திரா படங்களில் இருக்கிற காட்சியின் கட்டமைப்பு, இயற்கை ஒளியமைப்பு, ஆடைத்தேர்வு, இடத்தேர்வு என அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு அதன்படியே தம்பதியரைப் படம் எடுப்பது என முடிவு செய்கிறார்கள்.

அதன்படியே ஒரு காலை நேரத்தில் தமிழ்நாட்டின் முதல் போஸ்ட் வெட்டிங் புகைப்பட நிகழ்வு தொடங்கியிருக்கிறது. நினைத்ததுபோலவே எடுத்த படங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பலரும் அவர்களின் புகைப்படங்களைப் பாராட்டியிருக்கிறார்கள். புகைப்படங்களைத் தம்பதியரிடம் கொடுத்துவிட்டு, திருமண விழாவில் நடந்த தவற்றையும் சொல்லி, மன்னிப்பு  கேட்டிருக்கிறார்கள். போஸ்ட் வெட்டிங் புகைப்படங்கள் நல்லபடியாக வந்திருந்ததால், மணமக்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்படித்தான் முதல் போஸ்ட் வெட்டிங் ஷூட் வெற்றிகரமாக நடந்தது.

“இப்போது நான் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிகிறேன், புகைப்படம் குறித்த வகுப்புகளை எடுக்கும்போது மேற்கூறிய நிகழ்வைச்  சொல்லலாம் என நினைத்திருந்தேன். என்னிடம் அப்போதைய புகைப்படங்கள் எதுவும் கைவசம் இல்லை. நாம் சொல்கிற விஷயங்களை மாணவர்கள் நம்ப வேண்டும் என்பதால், மணமக்களான  பிரேம்குமார் மற்றும் பாத்திமா இருவரையும் சந்தித்து அந்தப் புகைப்படங்களை வாங்கலாம் என முடிவு செய்து, கும்பகோணத்தில் இருக்கும் அவர்களது வீட்டிற்குச் சென்று புகைப்படங்களின் அவசியம் குறித்துக் கூறினேன். அவர்களும் புகைப்படங்களைத் தருவதாகத் தெரிவித்தார்கள். 35 ஆண்டுக்கால பழைய புகைப்பட ஆல்பம் என்பதால் படங்கள் எப்படி இருக்குமென என்னால் யூகிக்க முடியவில்லை.  படங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்தன. மிகுந்த சிரமத்துடன் அவற்றைப் பிரித்து எடுத்தோம். உண்மையில் 35 வருடங்கள் கழித்து புகைப்படங்களைப் பார்க்கும்போது அவ்வளவு பரவசமாக இருந்தது.

கேண்டிட், போஸ்ட் வெட்டிங் குறித்த விஷயங்கள் அறிமுகமாகாத காலகட்டத்தில் நானும் நண்பர் மனோகரனும் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டோம்” என்கிறார்.

காலத்தோடு சேர்ந்து ஒரு கதையும் பொதிந்திருக்கிறது இந்தப் படங்களில்!

ஜார்ஜ் அந்தோணி