Published:Updated:

`நெகிழி இல்லா திருப்பூர் சாத்தியமாகணும்! - மாற்றத்தை நோக்கி இளைஞர் படை

இன்றைக்குத் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து நல்லதொரு முன்னெடுப்பை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. ஆனால் கடந்த சில வருடங்களாகவே திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை அழித்தொழிக்க தீவிரமாகக் களமாடி வருகிறார்கள் `டிரீம் 20' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்

`நெகிழி இல்லா திருப்பூர் சாத்தியமாகணும்! - மாற்றத்தை நோக்கி இளைஞர் படை
`நெகிழி இல்லா திருப்பூர் சாத்தியமாகணும்! - மாற்றத்தை நோக்கி இளைஞர் படை

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து ``நெகிழி இல்லா திருப்பூர்" என்ற திட்டத்தின் மூலம் தமிழில் ``நெகிழி" என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் கைவிட வேண்டும் என்ற தொலைநோக்குடன் தீவிரமாக இயங்கி வரும் இவர்கள், தற்போது தமிழக அரசு அமல்படுத்தி இருக்கும் பிளாஸ்டிக் தடை சட்டம் குறித்த விழிப்புஉணர்வையும் மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் திருப்பூர் பூ சந்தையில் பூ வாங்குவதற்காக வீட்டிலிருந்தே துணிப்பைகளை எடுத்து வந்திருந்த பொதுமக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக்கொண்டிருந்த அந்த இளைஞர்களைச் சந்தித்துப் பேசினோம். நம்மிடம் பேசிய நந்தகுமார் என்ற இளைஞர், ``என்னைப்போன்ற பல இளைஞர்களுக்கு ஐயா அப்துல்கலாம்தான் வழிகாட்டி. அவர் உயிருடன் இருந்தபோது என்னால் ஒருமுறைகூட அவரை நேரில் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் உயிர் பிரிந்து, இராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உடலை அடக்கம் செய்தபோது நேரில் போய் நின்றுவிட்டேன். அந்த மனிதர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நம்மாளான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் என் மனதில் உதித்தது. அதே உத்வேகத்துடன் திருப்பூர் வந்ததும் என் நெருங்கிய பள்ளி நண்பர்களுடன் அதுகுறித்து ஆலோசனை செய்தேன். கலாம் அதிகம் பயன்படுத்திய வார்த்தை ``கனவு காணுங்கள்" என்பதே. அதேபோல மரம் வளர்ப்பு குறித்தும் அதிகமாகப் பேசியிருக்கிறார். எனவே நாங்கள் நண்பர்கள் 20 பேர் இணைந்து `டிரீம் 20' என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதன்மூலம் திருப்பூர் முழுவதும் மரங்களை நட்டு வளர்க்க முடிவெடுத்தோம். பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை முறையாகப் பராமரிக்காமல் போவதைவிட, தனியார் இடங்களில், பொதுமக்களின் வீடுகளில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மரக்கன்றுகளை வழங்கி பராமரிக்கத் தொடங்கினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2020-க்குள் திருப்பூர் மாவட்டத்தில் 20,000 மரங்களை வளர்த்துவிட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதில் தற்போதுவரை 18,752 மரங்களை வளர்த்துவிட்டோம்.

என்னதான் மரங்களை வளர்த்தாலும், பெய்யும் மழைநீர் நிலத்துக்கடியில் போக வழியில்லாமல் பூமியில் பிளாஸ்டிக் குவிந்து கிடக்கிறது. எனவே பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். மக்கள் பயன்பாட்டிலிருந்து பிளாஸ்டிக்கை அகற்ற வேண்டும் என்ற திட்டம் உருவானது. எங்களது ஆர்வத்தைத் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் அங்கீகரித்தது. திருப்பூர் மாநகராட்சியுடன் கைகோத்தோம். 2017-ம் ஆண்டு `நெகிழி இல்லா திருப்பூர்' என்ற திட்டம் உதயமானது. ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் பயணமானோம். மாணவர்களை எங்களுடன் ஒருங்கிணைத்தோம். ஊர் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கத் தொடங்கினோம். களப்பணியில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பாராட்டிப் பரிசுகளை வழங்கினோம். திருப்பூரைத் தூய்மையாக்கும் பணியில் இதுவரைக்கும் 96 பள்ளிகள், 8 கல்லூரிகள் எங்களுடன் இணைந்திருக்கின்றன. அவர்கள் மூலம் 32 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களையும் சேகரித்திருக்கிறோம். அதுபோகப் பல கோயில் கும்பாபிஷேகங்கள், திருமண விழாக்களில் பிளாஸ்டிக் பயன்பாடுகளே இல்லாமல் செய்திருக்கிறோம். இதுபோன்ற விழாக்களில் பெரும்பாலும் பிளாஸ்டிக், தண்ணீர் டம்ளர்கள்தான் பயன்பாட்டுக்கு வருகின்றன. எனவே நாங்களே சொந்தமாக 8 ஆயிரம் சில்வர் டம்ளர்களை விலைக்கு வாங்கி, அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு இலவசமாகப் பயன்படுத்த  கொடுக்கிறோம். 

எங்களது ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் எங்களுடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். தற்போது நெகிழி இல்லா திருப்பூர் திட்டத்தில் மட்டும் 142 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். விழிப்புஉணர்வு ஊர்வலம், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்த கண்காட்சி எனத் தொடர்ந்து ஏராளமான நிகழ்வுகளைக் கட்டமைத்து வருகிறோம். என்னதான் சட்டம் இயற்றிப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் உறுதியாக இருந்தால்தான் உண்மையான வெற்றி சாத்தியப்படும். அதை நோக்கியே நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஊருக்காக உழைக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.