பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அதை ஆராய விரும்பவில்லை!”

“அதை ஆராய விரும்பவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அதை ஆராய விரும்பவில்லை!”

“அதை ஆராய விரும்பவில்லை!”

ரபரப்பும் விறுவிறுப்புமாகத் தான் செய்திகளில்அடிபட்டுக்கொண்டிருந்தார் திருநாவுக்கரசர். ஆனால் திடீரென்று வந்த ‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாற்றம்’ என்று வந்த செய்தி பலரையும் ஆச்சர்யத் தில் ஆழ்த்த, திருநாவுக்கரசரைச் சந்தித்தேன்.

“அதை ஆராய விரும்பவில்லை!”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி, உங்களிடமிருந்து  திடீரெனப் பறிக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன?

“இந்த ஆராய்ச்சியை நான் செய்ய விரும்பவில்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. ராகுல் காந்திதான் என்னைத் தலைவராக்கினார். இப்போது அவர்தான் மாற்றியிருக்கிறார். இது அவருடைய முடிவு.  என்னைத் தலைவராக நியமித்த போது, எதுவும் கேட்கவில்லை, இப்போது மாற்றிய பிறகு எதற்காக என்று கேள்வி கேட்க விருப்பமில்லை. கட்சி வளர்ச்சிக்காகவும் ராகுல் காந்தி பிரதமராவதற்காகவும் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.  என்னை மாற்றப்போவது பற்றி, ஏற்கெனவே தலைமையிலிருந்து எனக்குத் தகவல் தரப்பட்டது.”

தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட பிறகு ராகுலைச் சந்தித்தீர்களே... அவர் என்ன சொன்னார்?


“தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, இரண்டரை ஆண்டுக்காலம், என்னை அமரவைத்தது அவர் தான். அதற்காக நேரில் சந்தித்து நன்றி கூறினேன். மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்.”

பிரியங்கா காந்தி திடீரென தீவிர அரசியலுக்கு வந்ததன் பின்னணி என்ன?

“பிரியங்கா காந்தி, கடந்த முப்பது வருடங்களாகக் காங்கிரஸ் கட்சிக்காகப் பல பிரசாரங்களை மேற்கொண்டி ருக்கிறார். சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் பக்கபலமாக இருக்கிறார். அதைவிட மக்களுக்குப் பிரியங்கா காந்தியை அதிகம் பிடித்திருக்கிறது. பார்ப்பதற்கு இந்திரா காந்தி போலவே இருப்பதால், அவர் செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.”

காங்கிரஸ்மீதான `குடும்பக்கட்சி’ குற்றச்சாட்டு இன்னும் வலுவாகுமே..?

“இது இந்தியாவுக்குப் புதிதல்ல.  பிரியங்கா, காங்கிரஸ் கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்துவருபவர். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், வேறு கட்சிக்கா செல்வார்கள்?”

“அதை ஆராய விரும்பவில்லை!”

ராகுல் காந்தியின் தேர்தல் வியூகம் எப்படியிருக்கப் போகிறது?

“மாநிலப் பிரச்னைகளை மாநில மக்களிடம் எடுத்துச் சொல்லிவருகிறார். அதற்கான தீர்வுகளையும் பொதுக் கூட்டத்தில் எடுத்துரைத்துத் தன் பிரசாரத்தை ராகுல்காந்தி ஏற்கெனவே  தொடங்கி விட்டார். ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சிறப்பாகத் தயாராகி வருகிறது. அதில் ராகுல் காந்தியின் செயல்திட்டங்கள் விவரிக்கப் பட்டிருக்கும்.”

மேக்கேதாட்டூ வேண்டும் என்று கர்நாடகாவிலும், வேண்டாம் என்று தமிழகத்திலும் சொல்லும் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி வைப்பது முரணாக இருக்காதா?


“காங்கிரஸ் மட்டுமல்ல, பி.ஜே.பி-யும் அதே நிலைப் பாட்டில்தான் உள்ளது. மாநில நலனை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. சபரிமலை, இட ஒதுக்கீடு, மேக்கேதாட்டூ, காவிரி நதிநீர்ப் பிரச்னை என மாநிலத்துக்கு மாநிலம் கள நிலவரம் மாறுபடும். தமிழகத்தில் எங்கள் நிலை என்னவென்பதைத் தெரிந்து தான் தி.மு.க எங்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இரு மாநிலங்களுக்கும் பொதுவான சுமுக முடிவு எடுக்கப்படும்.”

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா தேர்தல்  உத்தி என்று சொல்லும் நீங்கள், உங்களது ஆட்சிக்காலத்தில் ஏன் அதைக் கொண்டு வர முயலவில்லை?


“எய்ம்ஸ் மருத்துவமனை வருவதைக் குறைகூறவில்லை. தேர்தல் நேரத்தில் அவசரமாக அடிக்கல் நாட்டுவதைத்தான் குற்றம் சொல்கிறோம். நான்கரை ஆண்டுகளாக இடம் தேர்வு செய்யவில்லை; நிதி ஒதுக்கவில்லை. இடையில் வந்த கஜா, ஒகி எனத் தமிழகம் இயற்கையால் சீரழிந்தபோதும், தமிழகத்தின் முதல்வர் ஒருவர் 75 நாள்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் வராத பிரதமர் இப்போது வருவது தேர்தலுக்காகத்தான்.”

தி.மு.க-வைத் தவிர மற்ற கட்சிகள் ராகுலைப் பிரதமர் வேட்பாளராக  ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கிறதே..?

“ஸ்டாலின், தேவகவுடா ஆகியோர் சொல்லியிருக் கிறார்கள். சந்திரபாபு நாயுடுவும் இதே அணியில் இருக்கிறார்.  தேர்தலுக்கு முன்பு சிலர் சொல்கிறார்கள், சிலர் தேர்தலுக்குப் பின்பு சொல்லலாம். இது அந்தந்தக் கட்சிகளின் நிலைப்பாடு. வேறு யாரையும் யாரும் இதுவரை முன்மொழியவில்லை.  ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்.”

முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட, தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் இலங்கை மீனவர்களால் கொல்லப்படும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை பெருவாரியாகக்  குறைந்திருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து கூறிவருகிறதே?

“ஒகி புயலின்போதே, மீனவர்கள்மீது அவர்களுக் குள்ள அக்கறையின் லட்சணம் வீதிக்கு வந்து விட்டது. ஒருவர் கொல்லப் பட்டாலும் இறப்பு இறப்புதான். அதை மாற்ற முடியாது. ஆனால், தற்போது இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப் படும் படகுகள், வருடக் கணக்கில் இலங்கை யிலேயே இருக்கின்றன. கிட்டத் தட்ட ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்து தங்கள் வாழ்வாதாரமே இல்லாமல் இருக்கிறார்கள் மீனவர்கள். இதற்குக் காரணம் ஆளும் பா.ஜ.க. மீனவர்களுக்குத் தனி அமைச்சர் என்று வாக்குறுதி மட்டும்தான் அவர்களால் கொடுக்க முடியும். எதையும் செயல்படுத்த முடியாது.”

உங்களது கூட்டணிக்கு எதிராக, ஈழப்பிரச்னையை பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும்  கையில் எடுக்க வாய்ப்புள்ளதே..?

“அதை ஆராய விரும்பவில்லை!”“இது சர்வதேசப் பிரச்னை. ராஜபக்‌சேவைப் போர்க்குற்றவாளி என்று பலமுறை சொல்லியிருக்கிறோம். சர்வதேச விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இந்திய உதவியுடன்தான் இந்தப்போர் நடந்து முடிந்தது என்று ராஜபக்‌சே சொன்னதெல்லாம், அவர் தப்பிப்பதற்காகச் சொல்லிக்கொண்டது. இதற்காக அவரைத் தூக்கிலா போட முடியும்? சர்வதேச விசாரணைதான் நடத்த முடியும்.”

ஜி.எஸ்.டி, நீட் - இந்தத் திட்டங்களையெல்லாம் காங்கிரஸ்தான் கொண்டுவந்தது. அதை நடைமுறைப்படுத்தியதுதான் பா.ஜ.க. ஆனால் அதையும் காங்கிரஸ் எதிர்க்கிறதே?


“நடைமுறைப்படுத்தியதில் தான் சிக்கலே. ஜி.எஸ்.டி கொண்டு வந்ததில், பொருள்களுக்கு 28% வரி விதிப்பது கந்துவட்டிக்குச் சமமானது. இதை நாங்கள் எதிர்க்கிறோம். ஒவ்வொரு மாநிலத் தேர்தல் வரும்போதும் திட்டமிட்டே ஜி.எஸ்.டி-க்கான வரி குறைக்கப்படுகிறது. இதுவும் காங்கிரஸ் தரும் அழுத்தத்தினால்தான் நடக்கிறது. பா.ஜ.க-விடம் சரியான திட்டமிடல் இல்லை.”

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தருமா?

“மாநில அரசு கேட்டால், தமிழகத்துக்கு விதிவிலக்கு கொடுக்கலாம். அப்போது இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்.”

தி.மு.க கூட்டணியில் ஜி.கே.வாசனும் இடம்பெற்றால்..?

“இதுவரை அப்படி எந்தத் தகவலும் இல்லை. எங்கள் கூட்டணிக்கு வந்தால், அதன்பிறகு பதில் சொல்கிறேன். நாங்கள் தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறோம். அதனால் இதுகுறித்துத் தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.”

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எப்படி இருக்கப்போகிறது வரும் நாள்கள்?

“அது மட்டுமல்ல. அவர்களின் இறப்புக்குப் பின் பல கட்சிகள் உருவாகியுள்ளன. இன்னும் சில கட்சிகள் வரலாம். இருமுனைப் போட்டி இருந்த நிலை மாறி, நான்குமுனை ஐந்துமுனைப் போட்டிகூட உருவாகலாம்.  தமிழக அரசியல் சூழல் வேறு வித்தியாசமாக உள்ளது.”

இ.லோகேஷ்வரி - படம்: பா.காளிமுத்து, ஓவியம்: ஹாசிப்கான்