பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

ல்ல நடிகர் என்ற முகத்துடன் ‘கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் கலைஞன்’ என்ற அடையாளமும் இப்போது பிரகாஷ்ராஜுக்கு. குரல் மட்டும் கொடுக்காமல் சுயேச்சை வேட்பாளராகக் களம் காணவும் தொடங்கிவிட்டார். தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்தவரை பெங்களூரில் சந்தித்தேன்.

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

நடிகர்கள் பிரபலத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது என்று நீங்கள்தானே சொல்லியிருந்தீர்கள்?

“உண்மைதான். நடிகனாக வரக்கூடாது; ஒரு குடிமகனாக வரவேண்டும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நடிகனாகவோ, டாக்டராகவோ வராமல் குடிமகனாக வாருங்கள். நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டு ஒரு குடிமகனாக அரசியலுக்கு வாருங்கள்.”

நீங்கள் மோடியை மட்டும் எதிர்ப்பதாகவே சித்திரிக்கப்படுகிறதே?


“மோடி யாருங்க... என் சித்தப்பாவா, மாமாவா,  எங்களுக்குள் பங்காளி சண்டையா? அவர் நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று சொல்லி வந்தவர், குஜராத்தில் இருந்துவந்த மாடலே இவர்தான் என்று இப்போதுதான் தெரிகிறது. ஊர் ஊராகச் சுற்றுகிறார். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தபோது, கடவுள் கொடுத்த சாபம் என்கிறார். இதையே அவரது தொகுதியில் இப்படி ஒரு விபத்து நடந்தபோது நீலிக்கண்ணீர் விடுகிறார். ஜி.எஸ்.சி, டிமானிடைசேஷன் என்று எந்தக் கேள்வி கேட்டாலும் இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் மௌனமாக இருக்கும் ஒரே தலைவர் மோடி மட்டும்தான். மாட்டை எடுத்துக்கிட்டு மனுஷனை விட்டுட்டவரை எதிர்க்கத்தானே செய்வேன்?”

‘பி.ஜே.பி என்ற அரக்கனை வீழ்த்துவதுதான் என் லட்சியம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுமட்டும் தான் உங்கள் லட்சியமா?

“அதுமட்டும் லட்சியம் இல்லை. பி.ஜே.பி போல் சிந்திக்கும் யாரும் இனி வரக்கூடாது என்பதுதான் என் லட்சியம். இப்போது பி.ஜே.பி ஆட்சியில் இருப்பதை நல்லது என்றே சொல்வேன். அவர்களால்தான் மதவாத சக்திக்கு எதிரானவர்கள் ஒன்றுகூட முடிந்தது. நாம் யோசிக்கவில்லை என்றால் இந்தமாதிரியான அரசியல்வாதிகள்தான் வருவார்கள். சிந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.”

இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் பிரகாஷ்ராஜை ஈர்க்கவில்லையா?


“ஸ்டாலின், மம்தா, சந்திரசேகரராவ் என நிறையபேர் இருக்கிறார்கள். இவர்களிடம் சில குணங்கள் பிடிக்கும். ஒட்டுமொத்தமாக ஒரு தலைவனாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் யாரும் இப்போது இல்லை. காமராஜர் இருந்தார், அவரைப்போல ஒரு தலைவர் உருவாக முடியுமா? கலைஞர் இருந்தார், அவர் ஒரு நூற்றாண்டின் தலைவர். அதுபோன்ற வலிமையான தலைவர்கள் நிகழ்காலத்தில் இல்லை என்பதுதான் நிஜம்.”

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக நிற்கக்  காரணம் என்ன?

“காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டு கட்சிகளும்  இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளை விட்டால் இந்தியாவை ஆள வேறு யாருமே இல்லையா என்ற கேள்விதான் சுயேச்சையாகக் களமிறங்க வைத்தது. இந்த நாட்டில் ஓர் இளைஞன், தன்னுடைய சிந்தனை யால் தலைவனாக முடியாத நிலை உள்ளது.  அரசியலுக்கு வரவேண்டும் என்றால் ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டும், நிறைய பணம் செலவழிக்க வேண்டும். இந்த சாதியாக இருக்க வேண்டும், இன்னாரின் மகனாக இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அரசியல். இந்த அமைப்பை எதிர்த்து இனி ஒருவன் சுயேச்சையாக வந்தால், அதுதான் என் வெற்றி.”

உங்களுக்கு முன்னரே ஜிக்னேஷ் மேவானி ஒரு சுயேச்சையாக இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறாரே?

 “இது மிகப்பெரிய சாதனை. இந்தியாவில் இன்னும் நிறைய ஜிக்னேஷ் மேவானிகள் வரவேண்டும். இயற்கை இப்படித்தான். சமூகத்துக்காகப் போராடியவனைத் தலைவனாக்கும். ஜிக்னேஷ் மேலிருந்து குதித்துவிடவில்லை. இங்கேயே இருந்தவன். இங்கேயே முளைத்தவன். ஒரு மனிதனின் வெற்றி என்பது, அவன் எந்த உயரத்தைத் தொட்டான் என்பதில் இல்லை; அவன் உயர்ந்ததால் எத்தனை பேரை மேலே கொண்டுவந்தான் என்பதில் இருக்கிறது. ஜிக்னேஷின் அரசியல் பயணம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. அவர் இன்னும் பலருக்கு உத்வேகத்தைக் கொடுக்க வேண்டும்.”

ஒரு சுயேச்சையாக, பெரும்பான்மையை எதிர்த்துத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?

“ஏன் முடியாது? தனி ஒருவனால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஒருவர்தானே மகாத்மா - அவர் தொடங்கவில்லையா ஒரு இயக்கத்தை. இதுவும் ஒரு இயக்கமாக மாற வேண்டும். காங்கிரஸ், பி.ஜே.பி மட்டுமல்ல, சுயேச்சையாகவும் பல தலைவர்களைக் கொடுக்க முடியும் என்பதைக் காட்டவேண்டும். சுயேச்சைகள் ஒன்றிணைந்து மாற்றத்தைக் கொடுக்க முடியும். அதற்கான வழி தெளிவாகவே தெரிகிறது.”

மதவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது சரி, மேக்கேதாட்டூ விஷயத்தில் பிரகாஷ்ராஜ் அமைதியாக இருக்கிறாரே?

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

“நான் என்ன ஸ்பெஷலிஸ்ட்டா? இது மொழிப் பிரச்னை இல்லை. அறிவியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய  விஷயத்தை, இருமாநிலப் பிரச்னையாக்கிவிடுகிறார்கள். இதற்கான தீர்வை சம்பந்தப்பட்டவர்கள் அறிவியல் ரீதியாக அணுக வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், எந்த மாநிலத்தில் தனக்கு ஓட்டு அதிகமாக இருக்கிறதோ அதற்குத்  தோதாக நடந்து கொள்கிறார்கள். இதுதான் அரசியல். இதற்குத் தீர்வு என்பது நிபுணர்களால் சொல்லப்பட வேண்டும். இதைக் கொஞ்சம் பொறுப்போடு அணுக வேண்டும்.”

கலைஞர், ஜெயலலிதா இல்லாத தமிழ்நாடு இப்போது எப்படி இருக்கிறது?


“அநாதையாக இருக்கிறது. இனி தமிழகத்தில் பல புதிய தலைவர்கள் வருவதற்கான இடம் இருக்கிறது. ஸ்டாலின் இருக்கிறார், கமல் வந்திருக்கிறார். பார்ப்போம். ஒரு தலைவன் உருவாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதற்கான களம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.”

பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறதே?

“தமிழகம் பெரியார் மண். மதவாதத்தைத் திணிக்கப் பார்க்கும் யாரையும் பெரியார்மண் தூக்கியெறியும்.”

தேர்தலுக்காக மக்களைச் சந்தித்துவருகிறீர்கள். எப்படி இருக்கிறது இந்த அனுபவம்?

“நிம்மதியாக வாழ்வதற்காக மக்கள் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அதற்கான ஆதரவைத் தான் மக்கள் அரசிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் அறிக்கை தயாரிக்க தொகுதிக்குச் சென்றிருந்தபோது, ‘பிரியாணி செய்திருக்கிறேன் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்’ என்கிறார் ஒரு சகோதரி. இன்னொருவர், என்னிடம் ஏதோ ஒரு பேப்பரைக் காட்ட வேண்டும் என்று அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். குருவிக்கூடு போல் அழகாய் இருந்தது அவரின் வீடு. அங்கிருந்த ப்ரிட்ஜைத் திறந்து, அந்தப் பேப்பரை எடுத்துக் கொடுத்தார். ப்ரிட்ஜ் அவருக்குப் பீரோவாகி யிருந்தது. இங்கேதான் எனக்கு வாழ்க்கை தெரிகிறது.

பெங்களூரு நாடாளுமன்ற மத்தியத் தொகுதியில் தினக்கூலிகளாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்களில் பாதிப்பேருக்கு ஓட்டு இல்லை. ஆனால் அவர்கள் இல்லாமல் இந்த பெங்களூரு நகரமே ஒருநாள் கூட இயங்காது. சாக்கடை அள்ளுவது முதல் பெரிய நிறுவனங்களுக்குக் கூலிகளாக வேலைக்குச் செல்வது வரை பல வேலைகள். சொந்த ஊருக் குள்ளேயே அகதிகளாக இருக்கிறார்கள். அவன் உழைத்தால்தான் அவன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். அப்படியிருக்கையில் எந்த உரிமைக்காக அவன் போராடுவான்? கர்நாடகாவில் 17,000 குழந்தைகள் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் கூலிகளாகச் செல்கிறார்கள். இது யாருடைய தவறு? எட்டாம் வகுப்பு படித்திருந்தால் தான் லைசன்ஸ் கொடுப்போம் என்று சொல்லும் அரசு, இப்படிப் பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகளுக்கு என்ன செய்தது?”

எந்தக் கேள்வி கேட்டாலும் எல்லா பதில் களிலும் நீதிக்கான வெப்பம் நிறைந்திருக்கிறது.

இ.லோகேஷ்வரி - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

விகடன் சமூக ஊடகப் பக்கங்களில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரகாஷ் ராஜின் பதில்கள்...

twitter.com/iMannankkatti: உங்களின் விவசாய ஆர்வம் பற்றித் தெரியும். எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

“விவசாயம் செய்யும்போது, மண்ணோடு ஏற்பட்ட தொடர்பு என்னை நிறைய வழிகளில் மாற்றியிருக்கிறது. விவசாயம் சார்ந்த நிறைய பிரச்னைகளைப் பற்றிப் பேசவேண்டும். எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும்.”

twitter.com/mekalapugazh:
அடுத்தமுறை ஒரு மிருகபலத்துடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால் உங்கள் நிலை குறித்த அச்சம் உங்களுக்கில்லையா?

“இன்னும் தீவிரமாகப் போராட வேண்டிய கட்டாயம் வரும். பொய் நிலைக்காது. பா.ஜ.க இந்த மக்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும். வெற்றி தோல்வி தாண்டி, எதிர்த்து நிற்பதும் இப்போதைய தேவைதான். மீண்டும் பா.ஜ.க வந்தால், அது ஆறாத வடுவாக மாறும். ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் என்பதை நாம்தாம் புரிந்து கொள்ள வேண்டும்.”

twitter.com/navan1981: வேட்பாளர் நல்லவரா என்று மட்டுமே பார்க்கவேண்டும் என்ற நிலையிலிருந்து தற்போது மாறி, மண்ணின் மைந்தனே வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற மன மாற்றம் ஏன்?

“மண்ணின் மைந்தன் வந்தால் அவன் சார்ந்த பிரச்னைகள் தெரிந்தவனாக இருப்பான். அடுத்த தலைமுறைக்கு ஒரு தலைவன் கிடைப்பான்.  உள்ளிருந்து பார்ப்பதற்கும் வெளியிருந்து பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் நிறையவே இருக்கின்றன. நான் இனவெறியோடு சொல்லவில்லை. சொந்தமண்ணில் இருந்து ஒருவன் தலைவனாக உருவானால் அந்த மண் இன்னும் வளர்ச்சியடையும்.”

twitter.com/ramk8060: நீங்கள் வெற்றிபெற்றால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிடுவீர்களா?

“இல்லை... நிச்சயமாகச் சேரமாட்டேன்.”

twitter.com/YuvarajDuraisa2: தீவிரவாத ஒழிப்பு, நிர்வாகத் திறன், ஊழல், வெளியுறவுக்கொள்கை, கறுப்புப் பணம் ஒழிப்பு இவற்றில் காங்கிரஸ் தலைமையிலான அரசைவிட பா.ஜ.க அரசு சிறப்பாகச் செயல்பட்டது  என நான் கருதுகிறேன். உங்கள் கருத்து என்ன?

“உங்கள் கருத்து அது.  இருவரும் திருடர்கள்தான். இரண்டு பேரையும் நம்பாதீர்கள்.”

twitter.com/I_SriSuresh: உங்கள் எதிர்ப்பு அரசியல் எல்லாம் பி.ஜே.பி எதிர்ப்பு அல்லது மோடி எதிர்ப்பு மட்டும் தான். நாளை அவர்கள் தோற்றுவிட்டால் உங்களின் அரசியல் வருகையின் நோக்கமும் முடிந்துவிடும் அப்படித்தானே?

“அப்படி இல்லை. என்னுடைய அரசியல் என்பது மக்களுக்கானது.”

twitter.com/Satheshbharath1: ரஜினி,கமல் இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு?

“இரண்டு பேருக்கும்தான். இரண்டு பேருமே நல்ல திட்டங்கள் வைத்திருப்பார்கள். வரட்டும் பார்ப்போம். நடிகர் என்ற காரணத்துக்காகப் படம் பார்க்கலாம். ஆனால், அரசியலில் நடிகர் என்று பார்க்கக்கூடாது. பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து இருவரும் எப்படிப் பேசுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.”

twitter.com/drmashok123: அரசின் மீதான உங்களின் விமர்சனங்கள் உங்கள் நண்பர் கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்தான் தீவிரமாக உள்ளது. இது ஒருவகையில் பழிவாங்கும் செயல் என ஏன் எண்ணக்கூடாது?

“எண்ணலாம். உங்கள் கேள்வி தவறில்லை. இன்னொரு கெளரி கொல்லப்பட்டுவிடக்கூடாது என்றுதான் போராடிவருகிறேன்.”

facebook.com/Ravi-Chandran:
கலைஞர் இருந்திருந்தால் இன்றைய தமிழக மற்றும் இந்திய அரசியல் எப்படி இருந்திருக்கும், உங்கள் பார்வையில்..?

“அநாதையாக உணர்ந்திருக்க மாட்டோம். அவருடைய தேவை இப்போது இன்னும் அதிக மாகத் தேவைப்படுகிறது. கலைஞர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்லர். இந்த நாட்டின் தலைவர்.”