Published:Updated:

பிரிவினைதான் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட காரணமா? #RememberingGandhi

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரிவினைதான் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட காரணமா? #RememberingGandhi
பிரிவினைதான் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட காரணமா? #RememberingGandhi

``இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் எனக்கு எதிராக அணிசேர்ந்து இந்துமத சாஸ்திரங்களும், வேதங்களும் தீண்டாமையை ஆதரிப்பதாகச் சொன்னாலும் அந்த சாஸ்திரங்கள், வேதங்கள் அனைத்தும் தவறானவை என்று நான் அறிவிப்பேன்" என்றார் காந்தி.

ஹிம்சையின் உருவமாக, அதற்குச் சான்றாக நின்ற மகாத்மா காந்தி, மதவாதி ஒருவரால் சுடப்பட்டு மாண்ட தினம் இன்று... 

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியத் திருநாட்டை மீட்டெடுத்தவர்களில் முக்கியமானவரான காந்தி என்னும் மாமனிதரின் சடலம் ரத்தம் வழிந்தோடச் சாலையில் வீழ்ந்துகிடந்த காட்சி, நாட்டு மக்கள் அனைவரையுமே நிச்சயம் பதைபதைக்கச் செய்திருக்கும். `தேசப்பிதா இந்த நாட்டுக்காகச் செய்த தியாகங்களுக்கு நாம் திருப்பிக் கொடுத்த நன்றி' என அப்போது மக்கள் மனம் நொந்துபோயிருக்கத்தான் செய்யும். ஆனால், காந்தியைச் சுட்டுக் கொன்ற சம்பவம், சிலருக்கு மகிழ்ச்சியின் குறியீடாக அமைந்திருக்கலாம். 

`அகண்ட பாரதத்தின் பிரிவினைக்குக் காந்தியே காரணம்' என்று கருதி `கோட்சே' என்ற கொடியவன் மதவெறி குண்டுகளால் மகாத்மாவைச் சுட்டுக் கொன்றான். இதுதான் பொதுவெளியில் பெரும்பாலும் செய்யப்படும் பிரசாரம். ஆனால், இந்தியப் பிரிவினை மட்டும்தான், மகாத்மா கொல்லப்படக் காரணமா? இந்து மதத்தைச் சேர்ந்தவர் காந்தி எனில், இந்துமகா சபையில் இருந்த ஒருவரே அவரை ஏன் சுட்டுக் கொன்றார். அதன் பின்னணியை விவரிக்கிறது இக்கட்டுரை...

தன்னை ஓர் இந்து மதப்பற்றாளராகத்தான் காந்தி அடையாளப்படுத்திக் கொண்டார். அவரின் `ராம ராஜ்யம்' கருத்துருவாக்கமும், பசுக்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் அவரைச் சமகால இந்துத்துவாவுக்குமான முகமாகக் கருதும் மனோநிலையைக் கொடுக்கலாம். ஆனால், அவரின் கருத்துகளுக்கும் சமகாலத்திய இந்துத்துவாவுக்குமான வேறுபாடு என்பது, மதத்தினை அன்பின்வழியில் அணுகுவதற்கும், ஆதிக்கத்தின் வழியே அணுகுவதற்கும் உள்ள முரண்பாடாகும். ராமனை ஒரு லட்சிய மனிதராகத்தான் அவர் கருதினாரே தவிர, அயோத்தியில் அவதரித்த வரலாற்று மனிதராக அவர் ஒருபோதும் கருதவில்லை. காந்தியின் `ராம ராஜ்யம்' என்பது `மக்களும் அரசும் நேர்மையாக இருக்கின்ற ஆட்சி' என்பதே அவருடைய கூற்று. அதில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள் என எல்லாத்தரப்பு மக்களும் அவரவர் அடையாளங்களோடு இன்புற்று வாழ வழிவகை செய்யும் மதச்சார்பற்ற அரசாகவே இருக்க வேண்டும் என்று கருதினார். இந்தப் புள்ளிதான் காந்தி கொல்லப்படுவதற்கான தொடக்கமாக அமைகிறது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையில் முக்கியப் பாலமாகத் திகழ்ந்து கொண்டிருந்தார் காந்தி.

மகாத்மா காந்தியைக் கொல்வதற்கான முயற்சி, 1934-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன. அப்போது பிரிவினை என்பதற்கான பேச்சுகளே எழவில்லை. இந்து மத அடிப்படைவாதிகள் சிலர், இஸ்லாமியர்களை எதிரிகளாகச் சித்திரித்து அரசியல் செய்துகொண்டிருந்த நேரத்தில், காந்தியின் அரசியல் இஸ்லாமியர்களை இணைத்துக்கொண்டு `கிலாபத் இயக்க' வடிவில் இருந்தது. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் மத்தியில் பேசும்போது, ராமராஜ்யத்தை `குதாய் ராஜ்யம்’ என்றும், கிறிஸ்தவர்களிடையே பேசும்போது `கிங்டம் ஆஃப் காட்’ (Kingdom of God) என்றும் காந்தி குறிப்பிட்டார்.

ராமராஜ்யம் என்பதில் `ராம்' என்பது `குதா', `காட்' என்பனவற்றின் இன்னொரு பெயர்தான் என்றார் காந்தி. அந்தவகையில், இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக முன்னிறுத்தியதன் மூலம், சிலர் தாங்கள் அமைக்க எண்ணிய `இந்து ராஷ்டிரத்திற்கு' மக்கள் செல்வாக்கைப் பெற்ற காந்தி, மிகப் பெரும் தடையாக இருந்தார் என்று கருதியதுதான் முக்கியக் காரணமாக இருந்திருக்கும். மேலும் ``பிரிவினை என்பது ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்வதாகத்தான் அமையும்" என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது.

பொதுக்கூட்டம் ஒன்றில் காந்தி பேசும்போது, ``இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் எனக்கு எதிராக அணிசேர்ந்து இந்துமத சாஸ்திரங்களும், வேதங்களும் தீண்டாமையை ஆதரிப்பதாகச் சொன்னாலும் அந்த சாஸ்திரங்கள், வேதங்கள் அனைத்தும் தவறானவை என்று நான் அறிவிப்பேன்" என்றார். காந்தியின் இதுபோன்றச் செயல்பாடுகளால் அவருடைய வருகையை இந்துக்களில் ஒருசாரார் எதிர்த்தனர். இந்து மதத்திற்குள் இருந்த கலகக்குரலாகத்தான் காந்தியின் சொற்கள் ஒலித்துக்கொண்டிருந்ததாக அவர்கள் கருதினார்கள்.

சுதந்திரத்திற்குப் பின்னர் ராஷ்ட்ரிய சேவா சங்கக் கூட்டம் ஒன்றில், ``தீண்டாமை என்ற விஷயம் இந்து மதத்தில் புகுந்துவிட்டபோதே அதற்குச் சரிவும் ஆரம்பமாகி விட்டது என்றுதான் அர்த்தம். இந்தியாவில் இந்துக்களைத் தவிர, வேறு யாருக்கும் இடமில்லை என்று நினைப்பதாக இருந்தால், இந்துக்கள் அல்லாதவர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் இங்கே வாழ விரும்பினால் இந்துக்களின் அடிமைகளாகத்தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் இந்து மதத்தை இந்துக்களே கொன்றுவிடுகிறார்கள் என்பதாகும்" என இந்து மத அடிப்படைக் கருத்தாக்கம் கொண்டவர்களிடையே உரையாற்றினார்.

எனவே, ``காந்தியின் கொலை என்பது ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரின் ஆதிக்கத்திற்காக, நிகழ்த்தப்பட்டது என்பதே நிச்சயமான உண்மை" என்பதை பெரும்பாலான காந்தியவாதிகள் உணர்ந்திருந்தனர். காந்தி கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்த பலர் எளிதாகத் தப்பிவிட்டனர். தான் கொல்லப்படுவோம் என்பதைக் காந்தி முன்கூட்டியே அறிந்திருந்தார். பிரிவினையின்போது நிகழ்ந்த மதரீதியான வன்முறைகள் அவரைப் பெருமளவில் உலுக்கியிருந்தன.

``ராம ராஜ்யம் வெறும் கனவாகிப் போய்விட்டது. தற்போது நாட்டில் எந்தவிதமான அரசும் இல்லை. இந்த நிலை மாறவில்லையென்றால், உடனே என்னை எடுத்துக்கொள்ளும்படி என் இதயம் கடவுளை நோக்கி அழுது பிரார்த்திக்கிறது. இந்த நிகழ்வுகளைப் பார்ப்பதற்காக நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?” என மனம் நொந்தார். `காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று தெரிந்தும் தக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தராத, சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசை நொந்து கொள்வதைவிட நாம் வேறென்ன செய்ய இயலும்? 

உயிருடன் இருந்தபோதும், இறந்த பின்னரும் மதவெறி எனும் கொடிய மிருகத்தினைக் கட்டியிருந்த பெரும் அஹிம்சை சங்கிலியாகக் காந்தி இருந்தார். ஆனால், வலதுசாரி சக்திகளின் வன்முறைச் செயல்பாடுகள் அதிகரித்திருக்கும் தற்போதைய சூழலில் காந்தியத்தின் தேவையென்பது முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மொழியில், உணவில், கல்வியில், கருத்துரிமையில் என எங்கும் மத அடிப்படைவாத கருத்தாக்கங்கள் அவ்வப்போது திணிக்கப்படும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்துப் போராடுவதே மகாத்மா காந்தியின் உயிர்த் தியாகத்திற்கு நாம் செலுத்தும் கைம்மாறு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு