Published:Updated:

`இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவதை வெறுக்கிறார்கள்!’ - நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னெர்

`இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவதை வெறுக்கிறார்கள்!’ - நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னெர்
`இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவதை வெறுக்கிறார்கள்!’ - நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னெர்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் தவான், ரோகித் ஷர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மிரட்டி வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் சவாலாகவே உள்ளது. கனே வில்லியம்ஸன், ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டாலும் அவர்களுக்கு நல்ல இணை இல்லாததால் பெரிய அளவில் ரன்குவிப்பில் அவர்களால் ஈடுபடமுடியவில்லை. 

இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்து ஆல் ரவுண்டர் மிட்செல் சாண்ட்னெர், இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சிறந்த திட்டத்துடன் களமிறங்கினோம். ஆனால், அவற்றைச் செயல்படுத்த தவறிவிட்டோம். இந்திய அணியில் விராட்கோலி, ரோகித் ஷர்மா, தவான் ஆகியோர் முதல் மூன்று ஆட்டங்களிலும் பெரிய அளவில் ரன்களை குவித்தனர். இறுதியில் வந்த தோனி, அம்பாத்தி ராயுடு ஆகியோர் அதிரடியில் களமிறங்கிய இந்திய அணி பெரிய ஸ்கோரை எடுத்துவிட்டது. அவர்கள் விக்கெட்டாகி வெளியேறுவதை விரும்பவில்லை. நாங்கள் அவர்களை வீழ்த்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.

இந்த விஷயத்தில் எங்கள் பேட்ஸ்மேன்கள் தவறு செய்துவிட்டனர். கடந்த ஆட்டங்களில் எங்களுக்குச் சிறப்பான தொடக்கம் அமையாமல் போய்விட்டது. உண்மையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுகின்றனர். இதை எதிர்கொள்ளமுடியாமல் எங்கள் பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். இதன்காரணமாக பின்வரிசையில் களமிறங்க வேண்டிய வீரர்கள் விரைவாக விளையாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இந்தியாவின் முதல் 10 ஒவர்களை சமாளித்துவிட்டால் போதும். எங்கள் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவுவார்கள். பேட்டிங்கில் சிறப்பான பார்ட்டனர் ஷிப்பை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவது போட்டியில், ராஸ் டெய்லர் - டாம் லாம் ஆகியோர் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தனர் என்றார்.


இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் மூன்றோ ஆகியோர் விரைவிலே வெளியேற்றப்பட்டனர். அந்த அணி மூன்று போட்டிகளிலும் முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் கனே வில்லியம்ஸன், ராஸ் டெய்லர் ஆகியோரால் ரன்குவிப்பில் ஈடுபடமுடியவில்லை. விக்கெட்டை காப்பாற்றுவதற்கே இவர்கள் போராட வேண்டியிருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையான நான்காவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரோகித் ஷர்மா அணியை வழிநடத்த உள்ளார்.