Published:Updated:

இந்திய இன்ஜினீயரிங், இத்தாலிய டிசைனில் கலக்கும் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக்!

இந்திய இன்ஜினீயரிங், இத்தாலிய டிசைனில் கலக்கும் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக்!
News
இந்திய இன்ஜினீயரிங், இத்தாலிய டிசைனில் கலக்கும் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக்!

ஏரோடைனமிக்கான வடிவமைப்பு - எடை குறைவான பாடி ஆகியவை சேரும்போது, அதிக மைலேஜ் சாத்தியம் என்கிறது மஹிந்திரா!

ந்தியாவில் கமர்ஷியல் வாகனச் சந்தையில், SCV, LCV, ICV, HCV என நான்கு வகைகள் உண்டு. இதில் காய்கறி வகைகள், அசைவ உணவுகள், பால் - பண்ணைப் பொருள்கள், ஸ்பீடு பார்சல் சர்வீஸ், பேக்கர்ஸ் & மூவர்ஸ் போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் டிரக்குகளை `Intermediate Commercial Vehicle - 6.5 டன் முதல் 16 டன்' என வகைப்படுத்துவார்கள். வருடத்துக்கு 1.1 லட்சம் வாகனங்கள் விற்பனையாகும் இந்தப் பிரிவில், முதல் இரண்டு இடங்களை தலா 37% சந்தை மதிப்புடன், டாடா மற்றும் ஐஷர் நிறுவனம் வைத்திருக்கின்றன. பிறகு, அசோக் லேலண்ட் மற்றும் பாரத் பென்ஸ் வருகின்றன. வருடத்துக்கு 17% வளர்ச்சியையும் இந்த செக்மென்ட் அடைகிறது. இதில் யுட்டிலிட்டி வாகனங்களுக்குப் பேர்போன மஹிந்திரா நிறுவனத்திடம் மூன்று சக்கர ஆல்ஃபா முதல் 49 டன் ப்ளாஸோ டிரக் வரையிலான கமர்ஷியல் வாகனங்கள் இருந்தாலும், முன்னே சொன்ன ICV டிரக் மட்டும் மிஸ்ஸிங்!

தவிர, இந்த செக்மென்ட்டில் டிரக்கின் டிரைவர், அதன் உரிமையாளராக இருப்பது 22% என்றளவில் இருக்கிறது. எனவே அந்த இடைவெளியைப் பூர்த்திசெய்யும்விதமாக, ஃப்யூரியோ எனும் புதிய சீரிஸ் டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. இந்த செக்மென்ட்டில் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட் அம்சங்களுடன் இந்த டிரக் டயர் பதித்திருக்கிறது. 180 உதிரிபாக உற்பத்தியாளர்கள் - 500 பொறியாளர்களின் உழைப்பு - 30 வாடிக்கையாளர்களின் நான்கு வருட டெஸ்டிங் (13 லட்சம் கிமீ) - 600 கோடி முதலீட்டில் ஃப்யூரியோ டிரக்குகள் உயிர்பெற்றிருக்கின்றன. மஹிந்திராவின் டிரக் மற்றும் பஸ் பிரிவு, இத்தாலியின் Pininfarina இணைந்து இந்த டிரக்கை டிசைன் செய்திருக்கிறார்கள். மேஜர் சுந்தர்ராஜன்போன்று சொல்வதென்றால், This is a Nice Decision - இது ஒரு நல்ல முடிவுதான்!  

ஃப்யூரியோவைப் பொறுத்தவரை இன்ஜின் - கியர்பாக்ஸ், பாடி மற்றும் கேபின் ஆகியவை எல்லாமே புதுசு என்கிறது மஹிந்திரா. மொத்தம் 21 விதமான டிரக்குகள், இந்த பிராண்டின் கீழே அணிவகுக்க இருக்கின்றன. எனவே, பலவித தேவைகளுக்கு ஏற்றபடியான Modular & Rugged வகை சேஸி, ஃப்யூரியோவில் இடம்பெற்றிருக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் MDi Tech டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், 138bhp பவர் மற்றும் 50kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. என்றாலும் பின்னாளில் மாடலுக்கு ஏற்ப 80bhp-180bhp பவர் மற்றும் 20-85kgm டார்க்கை இது வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. ஃப்யூரியோவில் 5 - 7.5 டன் டிரக்கை LCV பிரிவிலும், 7.5 - 16 டன் டிரக்கை ICV பிரிவிலும், 16-18.2 டன் டிரக்கை MCV பிரிவிலும் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது மஹிந்திரா. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ICV செக்மென்ட்டில் இருக்கும் டாடா, ஐஷர், அசோக் லேலண்ட், பாரத் பென்ஸ் டிரக்குகளை ஒப்பிடும்போது, இந்த டிரக்குகளின் டிசைன் மற்றும் கேபின் அழகாக இருக்கிறது. சூப்பர் கார்களின் டிசைனுக்குப் பேர்போன நிறுவனத்தின் கைவண்ணம் ஆங்காங்கே தெரிகிறது. மற்ற டிரக்குகளைப்போலவே இதுவும் பாக்ஸ்போன்று தோற்றமளித்தாலும், ஸ்டைலான டிசைன் அம்சங்கள் இருப்பது ப்ளஸ். M&M-ன் சக்கன் தொழிற்சாலையில் ஃப்யூரியோ தயாரிக்கப்படும். 

Pininfarina-வின் உதவியுடன், குறைவான Drag co-efficient இருப்பதற்காக, ஃப்யூரியோவை Wind Tunnel-ல் டெஸ்ட் செய்திருக்கிறது மஹிந்திரா. மேலும், போட்டி டிரக்குகளுடன் ஒப்பிடும்போது 500 கிலோ வரை இதன் எடை குறைவாக இருக்கிறது. எனவே, டிரக்கின் PayLoad 1.2 டன் வரை அதிகரித்திருக்கிறது. ஆக, ஏரோடைனமிக்கான வடிவமைப்பு - எடை குறைவான பாடி ஆகியவை சேரும்போது, அதிக மைலேஜ் சாத்தியம் என்கிறது மஹிந்திரா. ஃப்யூரியோவின் வெளிப்புற டிசைன்போலவே, உட்புறமும் கவர்ச்சியாக இருக்கிறது. கேபினில் 8 ஏர்வென்ட்களைப் பார்க்க முடிந்தது. இதில் 4 ஏசி ப்ளோயருக்காகவும், 4 வெளிக்காற்றை உள்ளே செலுத்தும்விதத்தில் இருக்கின்றன. டிரைவர் மட்டுமல்லாது Co-டிரைவருக்கும் படுக்கை வசதி இருக்கும் அளவுக்கு இடவசதி அதிகம் இருக்கிறது. தவிர, க்ளோவ் பாக்ஸ், கப் ஹோல்டர், சன் கிளாஸ் ஹோல்டர், டிரக்கின் ஆவணங்கள் வைக்க இடம் என, கேபினில் ஸ்டோரேஜ் ஸ்பேஸுக்கும் பஞ்சமில்லை. 

மற்ற டிரக்குகளுடன் ஒப்பிட்டால், ஃப்யூரியோவின் முன்பக்கம் ஃபிளாட்டாக இருந்தது. இதுகுறித்து மஹிந்திராவின் டிரக் மற்றும் பஸ் & Construction Equipment பிரிவின் CEO வினோத் சாஹேவிடம் கேட்டபோது, ``ஃப்யூரியோவின் Rake Angle, மற்ற டிரக்குகளைவிடக் குறைவு. அதனால் டிரைவர் சீட்டிலிருந்து வழக்கத்தைவிட வெளிச்சாலை தெளிவாகத் தெரியும். மேலும், கேபினுக்குள்ளே குறைவான SunRays நுழைவதால், 5 டிகிரி வரை கேபினின் வெப்பம் குறையும். டிரக்கின் விண்ட் ஷீல்டு பக்கவாட்டுப் பகுதியில் கொஞ்சம் வளைந்திருப்பதுடன், முன்பக்கத்தில் ஏர்வென்ட்டைப் பார்க்க முடியும். இதனால் ஃப்யூரியோவின் முன்பக்கத்தில் மோதும் எதிர்காற்று, வென்ட்களைத் தாண்டி விண்ட் ஷீல்டுக்குச் செல்லும்போது, அது டிரக்கின் பக்கவாட்டுப் பகுதிக்கு அனுப்பப்படும். இங்குதான் விண்ட் டனல் டெஸ்ட் கைகொடுத்தது" என்றார். 

இதன் சர்வீஸ் பற்றிக் கேட்டபோது, ``சிறப்பான பொறியியல் திறனைக்கொண்டு, தரமானவிதத்தில் ஃப்யூரியோவைக் கட்டமைத்துள்ளோம். சர்வீஸ் சென்டர்களில் Best In Class ஆயில் மற்றும் கிரீஸ் வகை பொருள்களையே பயன்படுத்துகிறோம். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒவ்வொரு 1 லட்சம் கிமீ-யின் போதும், Breakdown என்ற சொல்லுக்கான தேவையே இல்லாமல் போகலாம்'' எனக் கூறினார்.

``BS-6 டிரக்குகளின் உற்பத்தி எப்போது தொடங்கும்?'' என்ற கேள்விக்கு,

``ஜனவரி 2020-ல் BS-6 டிரக்குகளைத் தயாரிக்கத் தொடங்கும் எண்ணத்தில் உள்ளோம். பிப்ரவரி 2020-க்குள்ளாக BS-4 டிரக்குகளின் உற்பத்தி நிறுத்தப்படும். கமர்ஷியல் வாகனப் பிரிவில் 3 வீலர் முதல் 49 டன் டிரக் வரை என அனைத்துவிதமான வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உலகளவில் சிறந்து விளங்குவது நாங்கள் மட்டுமே'' என மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பவன் கோயங்கா பதிலளித்திருக்கிறார். பிப்ரவரி 14-ல் XUV 3OO வருகிறது...

கனரக டிரக்கான ப்ளாஸோ போலவே, ஃப்யூரியோவிலும் மஹிந்திராவின் டிரேட்மார்க் Fuel Smart தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிரக்கில் ஏற்றப்பட்டிருக்கும் லோடுக்கு ஏற்றபடி டிரைவிங் மோடுகளைத் (Heavy, Light, Turbo) தேர்ந்தெடுக்க முடியும். வழக்கத்தைவிட 70மிமீ அதிக ஹெட்ரூம் வழங்கப்பட்டிருப்பதால், ஸ்பீடு பிரேக்கரில் டிரக் ஏறும்போது அதற்குள்ளே இருப்பவர்களின் தலை ரூஃபை இடிக்கும் என்கிற பேச்சுக்கே இடமில்லை! போட்டி டிரக்குகளுடன் ஒப்பிட்டால், 60% குறைவான வெளிச்சத்தம் மற்றும் 40% குறைவான அதிர்வுகள் கேபினுக்குள் எதிரொலிக்கும் என்கிறது மஹிந்திரா. மேலும், ஓட்டுதல் அனுபவத்தைச் சிறப்பாக்கும் விதமாக ஆன்ட்டி ரோல் பார் உடனான Heavy Duty சஸ்பென்ஷன், Fog & Cornering Lamp உடன்கூடிய Dual Chamber ஹெட்லைட்ஸ், 362மிமீ க்ளட்ச் ப்ளேட், மியூசிக் சிஸ்டம் ஆகிய வசதிகள் இருக்கின்றன. போட்டி டிரக்குகளில் Bias Ply டயர்கள் மற்றும் 8 Bar பிரேக் சிஸ்டம் (360X140மிமீ) இருந்தால், ஃப்யூரியோவில் ரேடியல் டயர்கள் மற்றும் 10 Bar பிரேக் சிஸ்டம் (360X170மிமீ) இருப்பது வாவ் ரகம்! 1750மிமீ நீளம் மற்றும் 550மிமீ அகலத்தில் இருக்கும் கேபின், இந்திய விதிமுறைகளின்படியான க்ராஷ் டெஸ்டில் பாஸாகியிருக்கிறது!

எனவே, வேகமான இரவு நேரப் பயணங்கள், டிரக் மற்றும் டிரைவருக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என நம்பலாம். ப்ளாஸோவில் Mileage Guarentee போல, `Get More Profit or Give the Truck Back' எனும் கோட்பாட்டை ஃப்யூரியோவில் பயன்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. Total Cost of Ownership குறைவு எனலாம். முதற்கட்டமாக Furio 12 19 Ft HSD மற்றும் Furio 14 19 Ft HSD எனும் இரண்டு மாடல்கள், 4 Body Style-ல் வெளிவந்திருக்கின்றன. இவற்றின் புனே எக்ஸ்ஷோரூம் விலைகள், முறையே 17.45 லட்சம் மற்றும் 18.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. வரும் நாள்களில் ஃப்யூரியோ சீரிஸில் மூன்று மாடல்களைக் கொண்டுவரும் முடிவில் மஹிந்திரா இருக்கிறது. மீதம் இருக்கும் 16 மாடல்கள், BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி டிரக்குகளில் மூன்று ஆண்டுகள்/Unlimited கிமீ வாரன்ட்டி அளிக்கப்படும் நிலையில், ஐந்து ஆண்டுகள்/ஐந்து லட்சம் கிமீ/5 Year Free AMC என அசத்தலான பேக்கேஜில் வந்திருக்கிறது ஃப்யூரியோ.

எனவே, போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது (அசோக் லேலண்ட் 12 டன் Boss - 13 லட்சம் மற்றும் Ecomet 13 டன் - 14.10 லட்சம், ஐஷர் 12.97 டன் - 14.90 லட்சம், டாடா 12 டன் Tipper - 15.30 லட்சம்) இதன் விலை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், பாதுகாப்பான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை ஃப்யூரியோ வழங்கலாம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் மஹிந்திராவின் டிரக் மற்றும் பஸ் பிரிவுக்குச் சொந்தமாக 100 டீலர்கள் - 37 உதிரிபாக நிலையங்கள் - 184 சர்வீஸ் சென்டர்கள் - 1600 உதிரிபாக விற்பனையாளர்கள் - 2900 RSA மையம் இருக்கின்றன. சர்வீஸ் சென்டரில் டிரக்கை சர்வீஸ் விட்ட பிறகு, 36 மணி நேரத்தில் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், உதிரிபாகங்களுக்கான வாரன்ட்டியும் வழங்கப்படும் என Service Challenge குறித்து தகவல்கள் வந்திருக்கின்றன. ஆகமொத்தத்தில், மஹிந்திரா தனது இருப்பை கெத்தாகக் காட்டியிருக்கிறது.