Published:Updated:

இறப்பதற்கு முன் காந்தியின் சில மணித்துளிகள்... நினைவுதின சிறப்புப் பகிர்வு!

இந்திய மக்களின் தேசப்பிதா, மகாத்மா காந்தி. அவர், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான தினம் இன்று.

இறப்பதற்கு முன் காந்தியின் சில மணித்துளிகள்... நினைவுதின சிறப்புப் பகிர்வு!
இறப்பதற்கு முன் காந்தியின் சில மணித்துளிகள்... நினைவுதின சிறப்புப் பகிர்வு!

ந்திய மக்களின் தேசப்பிதா, மகாத்மா காந்தி. அவர், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான தினம் இன்று. அன்றைய தேதியில், அவருடைய மரணம் நடைபெறுவதற்குச் சிலமணித் துளிகளுக்கு முன்பாக, டெல்லி பிர்லா மாளிகையில் நடந்தது என்ன என்பது பற்றி விவரமாய் எழுதியிருக்கிறார் லூயி ஃபிஷர். அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லூயி ஃபிஷர் எழுதிய காந்தி வாழ்க்கையை, தமிழில் மொழிபெயர்த்தவர் தி.ஜ.ர இவர் மொழிபெயர்த்திருக்கும் `காந்தி வாழ்க்கை’ என்ற நூலில்தான் அந்தக் கடைசிக்கட்ட பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுபற்றிய ஒரு பார்வை இதோ...

டெல்லி பிர்லா மாளிகையில் பின்புறத்தில் இருந்த தன்னுடைய அறையில் சர்தார் வல்லபபாய் படேலுடன் பேசிக்கொண்டிருந்தார் காந்தி. ஜவஹர்லால் நேரு - வல்லபபாய் படேல் இடையிலான மனவருத்தத்துக்கு மருந்திடுவதற்கான பேச்சாக அது இருந்திருக்கிறது. அந்தச் சமயத்தில், காந்திக்கான மாலை உணவை எடுத்துவருகிறார் ஆபா. இவர், காந்தியுடைய பங்காளியின் பேரனான கனு காந்தியின் மனைவி. காலத்தை, வீணாக்குவதைக் காந்தி ஒருபோதும் விரும்பாதவர்; அதை, நன்கறிந்திருந்த ஆபா அந்த நேரத்துக்கான, அவருடைய பணிவிடைகளைச் சரியாகச் செய்துவிடுவார். இதையடுத்து, மாலை 4.30 மணிக்கான அவருடைய உணவுகளைத் தயார்செய்து எடுத்துக்கொண்டு, அவரைப் பார்க்கப் புறப்பட்டார் ஆபா. 

காந்தி - படேல் இடையே, பேச்சு மும்முரமாய் இருந்தது. அதை ஆபா கவனித்தாலும், தன்னுடைய கடமையிலிருந்து விலகாதவராய், அவருடைய வாட்சை எடுத்து அவருக்கு முன் காட்டினார். ஆபாவின் சாதுரியத்தைப் புரிந்துகொண்ட காந்தி, நான், உடனே புறப்பட வேண்டும்’’ என்றபடி படேலிடமிருந்து விடைபெற்றார். இல்லையில்லை, இந்தப் பரந்த உலகத்திலிருந்து விடுபடுவதற்காகவே அவர், அங்கிருந்து சென்றிருக்கிறார். அவரை, ஆபாவும் மனுவும் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களின் தோள்மீது சாய்ந்தபடியே அங்கிருந்த பிரார்த்தனை மைதானத்துக்குச் செல்கிறார். அதைக் காந்தி, ``இவர்கள்தாம் நான் நடக்க உதவும் ஊன்றுகோல்கள்’’ என்று புகழ்கிறார். அத்துடன், ஆபா கொண்டுவந்து கொடுத்த உணவு தொடர்பாகவும் கிண்டலடித்துப் பேசுகிறார். அவருக்கு, கேரட் சூஸைப் பருகக் கொடுத்திருக்கிறார் ஆபா. அதை வைத்துதான் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். 

``எனக்கு மாட்டுத் தீனியைக் கொடுத்துவிட்டாய்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் காந்தி. அதற்கு ஆபா, ``இல்லை... இது, குதிரைத் தீனி என்றல்லவா பா (கஸ்தூரிபாய்) சொல்வார்கள்’’ என்கிறார். அதைக் கேட்டுச் சிரித்த காந்தி, ``வேறு யாருக்கும் பிடிக்காததை, நான் சுவைத்துச் சாப்பிடுவதால் நான் எவ்வளவு பெரியவன்’’ என்று சொல்கிறார். அதற்கு ஆபா, ``பாபு (அப்பா), உங்கள் வாட்ச் அநாதையாகிவிட்டதுபோல் அழுதுகொண்டிருக்கும். அதை, இன்று நீங்கள் பார்க்கவே இல்லை’’ என்று செல்லமாய்க் கேட்கிறார். 
அதற்குக் காந்தி, ``அதை, ஏன் நான் பார்க்க வேண்டும்? நேரத்தைக் கவனித்துக்கொள்ளும் கணக்குப்பிள்ளைகள்தாம் எனக்கு இருக்கிறார்களே’’ என்று சட்டென்று பதிலளிக்கிறார். இதைக் கேட்ட மனு, ``அந்தக் கணக்குப்பிள்ளைகளையும்தாம் நீங்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லையே’’ என்று கேட்கிறார். 

இப்படியான உரையாடல்களுக்கிடையே அந்த மைதானத்துக்குள் நடந்துசென்ற காந்தி, ``இன்று 10 நிமிடம் தாமதமாகிவிட்டது. தாமதம் என்பதே எனக்குப் பிடிக்காது. 5 மணி அடிப்பதற்கு முன் இங்கே வந்திருக்க வேண்டும்’’ என்று உரக்கக் குரல்கொடுத்தபடியே அந்த மைதானத்துக்குள் நடந்துசெல்கிறார். அவரைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்குகிறார்கள். அதில் சிலர், அவர் பாதத்தைத் தொட்டு வணங்குகிறார்கள். பின்னர், ஆபா மற்றும் மனுவின் தோள்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட காந்தி, அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். ஆம், அதுதான் அவருடைய இறுதி வணக்கம். அந்த இடத்துக்கு வந்த கோட்சே, அவரைச் சுட்டுத்தள்ளுகிறார். காந்தியின் உடல் மண்ணில் விழுகிறது. ஆபாவும் மனுவும் அவரைத் தூக்கிச் செல்கின்றனர். செய்திகேட்டு, படேல் ஓடி வருகிறார். நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்த்து உயிர் இருப்பதாக நினைக்கிறார். மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவரும், விரைந்தோடி வருகிறார். அவரைப் பரிசோதித்த டாக்டர், ``உலகத்தில் உள்ள எதுவும் இனி, அவரைப் பிழைக்க வைக்க முடியாது; அவர் இறந்து 10 நிமிடங்கள் ஆகிவிட்டன’’ என்கிறார்.  

அவருடைய இறப்பு குறித்துப் பேசிய நேரு, ``இந்த நாட்டிலே ஒளி செய்த ஜோதி, சாதாரணமானது அல்ல... பல்லாண்டுகளாக ஒளிகொடுத்து வந்த அந்த ஜோதி, இன்னும் பல்லாண்டுகள் ஒளி கொடுக்கும். ஏனென்றால், அது அழியாத சத்தியமாகும்’’ என்றார். ஆம், உண்மைதான்... அது இன்றுவரை அழியாத சக்தியாகத்தான் விளங்குகிறது.