Published:Updated:

``800 மாணவர்களை உருவாக்கியிருக்கிறேன்’’ பரத ஆசிரியர் சந்தியா பெருமிதம்

``800 மாணவர்களை உருவாக்கியிருக்கிறேன்’’ பரத ஆசிரியர் சந்தியா பெருமிதம்
``800 மாணவர்களை உருவாக்கியிருக்கிறேன்’’ பரத ஆசிரியர் சந்தியா பெருமிதம்

"800 மாணவர்கள் என்கிட்ட பரதம் கத்துட்டு போயிருக்காங்கனு நினைக்கிறப்ப ரொம்ப பெருமையா இருக்கு. முழு மூச்சா, கலையில கவனம் செலுத்தணும் என்பதால, குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதனால் என்ன.. என்கிட்ட கலை கத்துக்க வருகிற ஒவ்வொருவரும் என் குழந்தைதான்."

தான் உருவாக்கிய மாணவிகள் மூன்று பேர் மாநில அரசின் விருது பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தார் சந்தியா சங்கர். பரதநாட்டியத்தை நேசித்து, பழகியவர் சந்தியா. தன்னைப் போலவே, தன் மாணவர்களையும் உருவாக்கி வருவதில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருபவர். சாப்ட்வேர் வேலையிலிருந்து விலகி, முழு நேரம் பரதக் கலையோடு வாழ முடிவெடுத்தவர் என்ற செய்தி நம்மை ஆச்சர்யப்படுத்தியது. அவரைச் சந்தித்தோம்.  

"நான் பிறந்தது மும்பையிலதான். பி.எஸ்.ஸி படிச்சிட்டு, சாப்ட்சேர் ஃப்ரிலான்ஸராக இருந்தேன். க்ளையன்ட்ஸ்க்கு சாப்ட்வேர் டெவலப் பண்ணிக்கொடுப்பதுதான் என் வேலை. முழுநேர வேலையாக இல்லாம, ஃப்ரீலான்ஸராக இருந்ததே, அஞ்சு வயசிலிருந்து கத்துகிட்டு வர்ற டான்ஸ்க்கு அதிக நேரம் கொடுக்கணும் என்பதற்குத்தான்" என்கிறார். 

"பரத நாட்டியம்தான் முழுநேரம் என்று எப்போது முடிவெடுத்தீர்கள்?" 

"எனக்குக் கல்யாண ஏற்பாடு நடந்தப்ப, வருங்கால கணவரிடம் வெச்ச ஒரே கோரிக்கை, 'எனக்கு 9 மணிக்குப் போய்ட்டு 5 மணிக்கு வர்ற வேலையெல்லாம் ஒத்துவராது. பரதநாட்டியத்தை முழுசா கத்துக்கணும். அதையே என் புரபெஷனலா தொடரணும்' என்பதுதான். அவரும் 'ஓகே'னு சொல்லிட்டார். அப்போ, மும்பையில இருந்தோம். சில மாதங்கள் கழிச்சி, சென்னைக்கு வந்தோம். அங்கே சென்னைப் பல்கலைக்கழகத்தில எம்.ஏ. பரதநாட்டியம் கோர்ஸ் இருப்பதாக விளம்பரம் பார்த்தேன். கணவரோட சம்மதத்துடன் அதில் சேர்ந்தேன். ஆனா, அவர் கார்மெண்ட்ஸ் வேலையா திருப்பூருக்கு ஷிஃப்டாக வேண்டிய சூழ்நிலை. இருந்தாலும், என்னை சென்னையிலேயே தங்கி படிக்க வெச்சார்." 

"பரத நாட்டிய வகுப்புகள் எடுக்கத் தொடங்கியது எப்போது?"

"எம்.ஏ படிப்பு முடிஞ்சு நானும் திருப்பூர் வந்ததும், எங்க பகுதியில நல்ல டான்ஸ் கிளாஸ் ஏதும் இல்லைனு கேள்விப்பட்டேன். என்னுடைய எம்.ஏ ஆசிரியர் டாக்டர் லட்சுமி ராமசாமி, 'நீ கத்துகிட்ட வித்தையை மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடு' எனச் சொல்லி தைரியம் கொடுத்ததும்தான், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் உருவானது. பொழுதுபோக்குகாக மட்டுமில்லாம, பரதநாட்டிய எக்ஸாம்க்கு ரெடி பண்ணும் விதமாகவும் என்னுடைய கிளாஸை அமைச்சிகிட்டேன். அதனால், என் மாணவர்கள் எதிர்காலத்தில ஏதேனும் வேலைக்குப் போகக்கூட உதவியாக இருக்கும் இல்லையா. தொடங்கி, பத்து வருஷமாச்சு. 800 மாணவர்கள் என்கிட்ட பரதம் கத்துட்டு போயிருக்காங்கனு நினைக்கிறப்ப ரொம்ப பெருமையா இருக்கு. முழு மூச்சா, கலையில கவனம் செலுத்தணும் என்பதால, குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதனால் என்ன.. என்கிட்ட கலை கத்துக்க வருகிற ஒவ்வொருவரும் என் குழந்தைதான். நானும் பரதக் கலை தொடர்பாக பி.ஹெச்.டி பண்ணிட்டு இருக்கேன்" எனச் சொல்லும் சந்தியாவின் குரலில் பெருமிதமும் நம்பிக்கையும் வழிந்தோடுகின்றன.

"உங்கள் நடன பாணி எந்த வகை?"

"நான் ஆடுவதற்கு கத்துகிட்டது தஞ்சாவூர் பாணி. ஆனா, எம்ஏ படிக்கும் போது மற்ற பாணி நடனங்களையும் பழகினேன். அது எனக்கு கிளாஸ் எடுக்கும்போது ரொம்பவே உதவியாக இருக்கு."

"உங்களுக்குக் கிடைத்த விருதுகள், பாராட்டுகள் பற்றிச் சொல்லுங்களேன்?"

"மகாராஷ்டிரா அரசு நடத்தின தேர்வு எழுதி, ரித்ய விஷாரத்' பட்டம் வாங்கினேன். கலாசார தூதுரவாக ஆஸ்திரேலியா சென்றேன். திருப்பதியில், 'கலைவாணி நாட்டிய கலாரத்னா', 'கல்ப ஶ்ரீ கலாநிதி உள்ளிட்ட பல விருதுகள் கிடைச்சிருக்கு. 2017 ஆம் வருஷம், 50 பேர் சேர்ந்து, பின்னல் கோலாட்டம் நடத்தினேன். அது இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ல இடம் பிடிச்சிருக்கு. என் மாணவர்கள் சுஜிதா, ஹர்ஷினி,  சக்திப்ரியா ஆகியோருக்குத் தமிழக அரசின் இளம் தளிர் விருது கிடைச்சிருக்கு. இவை எல்லாத்தையும் விட, நாங்க நிகழ்ச்சி முடிந்ததும், ரசிகர்கள் வந்து பாராட்டுவதைத்தான் ரொம்ப முக்கியமானதுனு நினைக்கிறேன்."

"பொதுவாக, பரதம் என்பது இந்து மதத்தினர் கற்றுக்கொள்வது என்பதாகப் பேச்சு இருக்கிறதே?"

"என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது, மதங்களுக்கு அப்பாற்பட்டதுதான் கலை. என்கிட்ட ஆதம் பாஷா எனும் வெஸ்ட்ரன் டான்ஸர், பரதம் கத்துக்க வந்தார். ரொம்ப ஆர்வத்துடன் முழுமையாகப் பயிற்சி பெற்று, ஷீரடி கோயில் உள்பட பல கோயில்கள்ல நிகழ்ச்சி பண்ணியிருக்கிறார். அவர் மூலமா நிறைய பேர் என்கிட்ட பரதம் கத்துக்க வந்தாங்க."

சந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும் சங்கரிடம் பேசியபோது, "நான் டெக்ஸ்டைல் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். எனக்கும் சின்ன வயசிலேருந்து கலைகள் மீது ஆர்வம். அதனால, சந்தியா என் மனைவியா கிடைச்சது பெரிய வரம். சந்தியாவின் திறமைகள் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். சந்தியாவுக்கு ஆறு மொழிகள் தெரியும். பரதம்னா உயிரு. இதைத் தெரிஞ்சதும் என்னால் முடிஞ்ச சப்போர்ட் பண்ணினேன்" என்கிறார் மகிழ்ச்சியோடு.   

இளம் தளிர் 2018 விருது பெற்ற, சுஜிதா, ஹர்ஷினி, சக்திப்ரியா ஆகியோர் ஒரே குரலில், "எங்க மேடம்தான் டான்ஸில் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்காங்க. கண்டிப்பா, அவங்களவிட பெரிய டான்ஸர் ஆவோம். அதான் எங்க மேடத்தின் ஆசையும்கூட" என்றதும், 'ஆமாம்' என்பதாகத் தலையசைக்கிறார் சந்தியா சங்கர். 

அடுத்த கட்டுரைக்கு