
கூடற்கலை - 4
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம்
- கவிஞர் வாலி
வழக்கமாக பாலியல் தொடர்பான ஆலோசனை, சிகிச்சைபெற ஆண்களே தயக்கம் காட்டுவார்கள். அப்படியே வந்தாலும் மென்று விழுங்குவார்கள். அவர்களிடம் விஷயத்தைக் கேட்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். நிலைமை இப்படியிருக்க, என்னை வியக்கவைத்தார் ஒரு பெண். சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். தன் கணவரையும் அழைத்து வந்திருந்தார். என் முகத்தைப் பார்க்கவே தயங்கினார் அவருடைய கணவர். மொபைல் பார்ப்பதுபோல், தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அந்தப் பெண்ணே ஆரம்பித்தார். ``கல்யாணமாகி மூணு வருஷம் ஆகுது டாக்டர். முதல் ரெண்டு வருஷம் வேலை, செட்டில்மென்ட்டுக்காக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட்டோம். தயாரான பிறகு, வயித்துல கரு உண்டாகலை. என்கிட்டதான் குறை இருக்கும்னு நினைச்சேன். அப்புறம்தான் இவருக்கு விரைப்புத் தன்மை குறைவா (Erectile Dysfunction) இருக்குறதைக் கண்டுபிடிச்சேன். இவர், தனக்கு ஆண்மைக் குறைபாடு வந்ததாக நினைச்சு, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, என்கிட்ட பேசுறதையே தவிர்க்கிறார். அதனால சண்டையும் வருது...’’
‘விரைப்புத் தன்மை குறைவாக இருப்பது ஆண்மைக் குறைபாடு அல்ல’ என்பதை அந்தப் பெண்ணின் கணவருக்குப் புரியவைத்தேன். ஆறு மாத சிகிச்சைக்குப் பின்னர், குறைபாடு சரியானது. இப்போது, அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி. தாம்பத்ய உறவில் நான்கு நிலைகள் உள்ளன. உணர்ச்சி உண்டாகுதல் (Mood), உடல் உறவுகொள்ளுதல் (Sexual Intercourse), உச்சநிலை (விந்து வெளியேற்றம்), திருப்தியடைதல் என நான்கு நிலைகளைக் கடந்தால்தான் தாம்பத்ய உறவு முழுமையடையும். சங்கிலித் தொடர் போன்ற இவற்றில் ஒன்று விடுபட்டாலும், நிறைவிருக்காது.
பொதுவாகவே, ஆண்களுக்கு விரைவில் உணர்ச்சி உண்டாகி, விரைப்பு ஏற்பட்டுவிடும். மோகமும் விரைவாகத் தீர்ந்துவிடும். பெண்கள் நிலையோ அப்படியே தலைகீழ். தாமதமாக உணர்ச்சி தூண்டப்படும்; உச்சமும் தாமதப்படும். இதைச் சமன் செய்ய, செக்ஸ் முன் விளையாட்டுகள் (Foreplays) அவசியம். விரைப்புத் தன்மை குறைவால், உச்சம் தொடுவதற்கு முன்னரே ஆண் செயல்படாமல், உறவு பாதியில் தடைப்பட்டால் தாம்பத்யம் கசந்துவிடும்.
உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என இரு காரணங்களால் விரைப்புத் தன்மை குறைபாடு உண்டாகலாம். தகுந்த பரிசோதனைகள் மூலம் அதைக் கண்டறிந்து, சிகிச்சையளித்தால் குணப்படுத்திவிடலாம். செல்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதைச் சரிசெய்யலாம்.

அளவுக்கு மீறிய மது, புகைபிடித்தல், டெஸ்டோஸ்டீரான் குறைபாடுகள், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களாலும், அவற்றுக்காகச் சாப்பிடும் மருந்துகளாலும் விரைப்புக் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
உறக்கமின்மை, மனஅழுத்தம், பயம், குழப்பமான மனநிலை, எந்த நேரத்திலும் எதையாவது எண்ணி பயந்துகொண்டே இருப்பது போன்ற உளவியல் சிக்கல்களும் காரணமாக இருக்கலாம். கவுன்சலிங் கொடுத்து இவற்றைச் சரிசெய்யலாம். ஒரு சினிமாவை முதல் நாளே அல்லது அடுத்த நாளாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏன் ஏற்படுகிறது.
காரணம், படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை உங்களுக்கு ஏற்படுத்தியதுதான். இது, உடலுறவுக்கும் பொருந்தும். செக்ஸுக்கு முன்னர் அதைப் பற்றி துணையுடன் பேச வேண்டும்; அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும். மனதில் அந்த ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டால், விரைப்புத் தன்மை குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கச்செய்யும் கொலஸ்ட்ரால் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்; ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை அதிகரிக்கும் புரத உணவுகளைக் குறைவாகச் சாப்பிடலாம். வாக்கிங், ஜாகிங் தவிர, பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்தும், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை அதிகரிக்கலாம். சிகிச்சை, வாழ்வியல்முறை மாற்றங்களால் விரைப்புத் தன்மை குறைபாட்டை எளிதில் குணப்படுத்தலாம். அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.
- கற்போம்...