Published:Updated:

”நான் ஒரு சுதந்திரப் போராளி!” - பாலஸ்தீன போராளி அஹெத் தமிமி பிறந்த நாள் பகிர்வு

”நான் ஒரு சுதந்திரப் போராளி!” - பாலஸ்தீன போராளி அஹெத் தமிமி பிறந்த நாள் பகிர்வு
”நான் ஒரு சுதந்திரப் போராளி!” - பாலஸ்தீன போராளி அஹெத் தமிமி பிறந்த நாள் பகிர்வு

`நான் இந்த ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவள் அல்ல, எனக்குச் சரி, தவற்றை வேறுபடுத்திப் பார்த்துக்கொள்ள தெரிகிறது. இங்கு கையில் துப்பாக்கியுடன் நடமாடும் யூத சிறுவன்தான் பாதிக்கப்பட்டவன். அவனுடைய இதயம் பாலஸ்தீனியர்களின் மீது வெறுப்புஉணர்வால் நிரப்பப்பட்டிருக்கிறது. அவன்தான் பாதிக்கப்பட்டவன். நான் ஒரு சுதந்திரப் போராளி. என் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறவள்’ இஸ்ரேலிய இராணுவ வீரரைத் தாக்கியதற்காக எட்டு மாதங்கள் சிறையில் கழித்து விட்டு 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியே வந்த பாலஸ்தீனத்தின் அஹெத் தமிமி கூறிய வரிகள் இவை. 

16 வயதில் இஸ்ரேலியச் சிறைகளைக் கண்ட இளம் போராளியின் லட்சியம் சர்வதேச வழக்கறிஞராவது. ``சிறையிலிருந்த காலத்தில் நான் சட்டத்தையும், மனித உரிமைகளையும் படித்தேன். வழக்கறிஞராகி இஸ்ரேலைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி எங்கள் மக்களுக்கு இழந்த உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும்” எனக் கூறினார்

இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் மேற்குக் கரை பகுதியின் நபி சாலிஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் அஹெத் தமிமி. பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. 1967-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு, இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனியப் பகுதிகளில் தமிமியின் கிராமமும் அடங்கும். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான வீடியோ ஒன்றில் தன்னுடைய சகோதரனைத் தாக்கியதற்காக இஸ்ரேல் இராணுவ வீரரை அறைந்ததன் மூலம் பிரபலமானவர் அஹெத் தமிமி. அதற்காக எட்டு மாத காலம் சிறைத்தண்டனையும் பெற்றிருந்தார்.

இஸ்ரேலியச் சிறைகளில் தற்போதும்கூட 300 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். அதில் அஹெத் தமிமியின் சகோதரர் வாயித் தமிமியும் அடங்கும். இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, நபி சாலிஹ் கிராமம் இஸ்ரேல் எதிர்ப்பின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது. இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களும் இங்கு நடைபெறும். அதை அஹெத் தமிமியின் குடும்பம்தான் முன்னின்று நடத்துகின்றது. 

2017 டிசம்பரில் நடைபெற்ற சம்பவம் அஹெத்திற்கு சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தந்திருந்தாலும் 2012-ம் ஆண்டு முதலே அஹெத்தின் போராட்டம் தொடங்கியுள்ளது. 2012-ம் ஆண்டு 12 வயதுச் சிறுமியாக இராணுவ அதிகாரிகளை அஹெத் எதிர்த்து நிற்கின்ற புகைப்படங்கள் பிரபலமாகி இருந்தன. தனக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் புகழை விடவும் பொறுப்பையே அதிகமாக்கியிருக்கிறது எனச் சொல்கிறார் அஹெத், ``பாலஸ்தீனியப் போராட்டத்தின் அடையாளமாக பாலஸ்தீனியரின் குரலை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பது பெருமையாகவே உள்ளது. ஒரு 17 வயதுச் சிறுமிக்கு இது மிகப்பெரிய சுமைதான். ஆனால், இது மிகப்பெரிய பொறுப்பு. அதை ஏற்று நிறைவேற்றுவதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்” என்பதே அவரின் பதில். 

``பலரும் என்னிடம் சிறை சென்று வந்ததற்காக வருந்துகிறீர்களா எனக் கேட்கிறார்கள். நான் ஏன் வருத்தப்பட வேண்டும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள், நாங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்கிறார் துணிச்சலோடு. சிறைத் தண்டனை முடிந்து வெளிவந்த போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், ``நாங்கள் அனைவரும் எல்லைகள் இல்லாமல், ஆக்கிரமிப்புகள் இல்லாமல் எல்லோரும் சமமென அமைதியுடன் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆக்கிரமிப்பு உள்ளவரை எதிர்ப்பு என்பது தொடரும்” என நம்பிக்கையையும் கைவிடாதவாறு உறுதியை வெளிப்படுத்துகிறார். 


சிறையிலிருந்து வெளியே வந்த அஹெத் தமிமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய இஸ்ரேல் தடைவிதித்தது, ``அவர்கள் உண்மையைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள், அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் அச்சம் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. நான் உலகுக்கு உண்மையைச் சொல்ல விழைகிறேன். அது அவர்களுக்கு எப்போதும் அச்சத்தையே விளைவிக்கும்” என்றார் அஹெத் 

தடையையும் மீறி அஹெத் கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ் சென்று விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது, ``நான் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இதைச் சொல்ல விரும்புகிறேன் `ஜெருசலேம்தான் பாலஸ்தீனத்தின் தலைநகராக இருக்கும். பாலஸ்தீனிய அகதிகளுக்கு அமெரிக்காவின் பணம் தேவையில்லை, நாங்கள் இழந்த எங்களுடைய நிலமே தேவை” என்றார். இன்றோடு பதினெட்டு வயதை நிறைவு செய்யும் அஹெத் கடந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க இஸ்லாமியர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் ஒடுக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீன உரிமையின் இன்றைய தலைமுறை முகமாகத் திகழ்ந்து வருகிறார் அஹெத்.