Published:Updated:

“கைதட்டல்கள்தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” - பட்டிமன்றம் ராஜா

“கைதட்டல்கள்தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” - பட்டிமன்றம் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
“கைதட்டல்கள்தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” - பட்டிமன்றம் ராஜா

மனசே மனசே...

``பள்ளிப்பருவ நாள்கள் தொடங்கி சிரமங்கள், நெருக்கடிகள், பணக்கஷ்டம், தோல்விகள், அவமானங்கள் என என் 30 வயதுக்குள் நிறையவே அனுபவித்துவிட்டேன். மதுரை அருகே, வைகை ஆற்றங்கரையிலுள்ள கீழமாத்தூர் கிராமம்தான் சொந்த ஊர்.  

“கைதட்டல்கள்தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” - பட்டிமன்றம் ராஜா

பள்ளிப் படிப்பை என் சொந்த ஊரிலுள்ள தொடக்கப்பள்ளியில் முடித்தேன். அப்பா வாத்தியார் என்பதால், எல்லோர் வீட்டுக்கும் நான் போய் வருவேன். அப்படித்தான் பெரும் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்கும் சென்று விளையாடிவிட்டு வருவேன். மாதா மாதம் 20, 25-ம் தேதிவாக்கில், `இதை அவரிடம் கொடு’ என்று என் தந்தையார் அந்தச் செல்வந்தருக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்துவிடுவார். அதைக் கொடுக்கும்போதெல்லாம் அவர், 10 ரூபாயோ 20 ரூபாயோ கொடுத்துவிடுவார். ஒருநாள் தற்செயலாக அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன்.

‘ஐயா, வரும் என் மகன்வசம் 10 ரூபாய் கொடுக்கவும். சம்பளம் வாங்கியதும் கொடுத்துவிடுகிறேன்’ என்று எழுதியிருந்தது. அதைப் படித்து மிகவும் துயரப்பட்டேன். ‘கடன் கேட்கும் இடத்துக்கு இப்படி ஜாலியாகப் போயிருக்கிறோமே’ என்று கூச்சமாக இருந்தது. அதன் பிறகு நான் அந்த வீட்டுக்குப் போவதைத் தவிர்த்தேன்.  

கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்தேன். அது. அரசுப் பணியைவிட வங்கிப் பணியைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம். பள்ளியிலும் கல்லூரியிலும் நான்தான் படிப்பில் முதல் மாணவன். ஆனால், கல்லூரியில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்கூட அரசுப் பணியிலும், வங்கிப் பணியிலும் சேர்ந்துவிட்டார்கள். எனக்கு வேலை கிடைக்கவில்லை.

பாண்டியன் போக்குவரத்துக்கழகத்தில் கேஷியராக வேலை பார்த்தேன். பெரும்பாலும் நைட் ஷிஃப்ட்தான். நடத்துநர்கள் கொண்டுவரும் கலெக்‌ஷனை வாங்கி, சரிபார்த்து வங்கியில் செலுத்த வேண்டும். அவை, வாழ்வில் மிகவும் மனஅழுத்தம் தந்த நாள்கள். ஒருநாள் நான் படித்த அமெரிக்கன் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் ஜீவராஜைப் பார்க்கப் போயிருந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கைதட்டல்கள்தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” - பட்டிமன்றம் ராஜா‘நீ காலேஜ் முடிச்சதும் சி.ஏ படிப்பை முடிச்சுட்டு, நல்ல ஆடிட்டரா வருவேன்னு எதிர்பார்த்தேன். இப்படி இருக்கியே. இனி என்னை நீ பார்க்கவே வராதே’ என்று திட்டிவிட்டார். என் மேலுள்ள அன்பால் அப்படிக் கடிந்துகொண்டார். அன்று முழுவதும் எனக்குத் தூக்கம் இல்லை. பிறகு, நம்பிக்கையே இல்லாமல் எழுதிய ஒரு வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். `ஓரளவு பரவாயில்லை’ எனும்படியாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் என் வாழ்வை மாற்றும் ஒரு சம்பவம் நடந்தது.

1991, ஜூலை 15-ம் தேதி சாலமன் பாப்பையா தந்த பட்டிமன்ற வாய்ப்பு, என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வாழ்க்கையிலும் மனஅழுத்தம் தரும் நிகழ்வுகள் வந்துபோகும். அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பட்டிமன்ற நிகழ்வுகளே எனக்குத் தந்தன.

 ஒருமுறை காரைக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிவிட்டு  விமானம் மூலம் சென்னை செல்வதற்காக காரில் மதுரைக்குச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், மதுரை நகருக்குள் நுழைய முடியாத அளவுக்கு டிராஃபிக் ஜாம். அன்றைக்கு ‘மீனாட்சி அம்மன் திக்விஜயம்’ என்பதால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

உடனே நான் யூட்யூபில் பாடல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டேன். ஓட்டுநர்கூட ‘என்ன சார் இப்படி பாட்டு கேட்டுக்கிட்டு வர்றீங்க?’ என்று கேட்டார்.
 
`வேறு என்ன செய்ய முடியும்? எனக்கு எப்போது பிரச்னை என்றாலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ‘குறையொன்றுமில்லை’ பாடலைக் கேட்பேன். அதேபோல் டி.ஆர்.மகாலிங்கம் ‘திருவிளையாடல்’ படத்தில் பாடிய ‘இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை...’ பாடலையும் விரும்பிக் கேட்பேன்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களை விரும்பிக் கேட்பேன். அவரின், ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...’ பாடல் எனக்குப் பிடிக்கும். ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, `காதலிக்க நேரமில்லை’ `திருவிளையாடல்’ இந்த நான்கு படங்களும் எப்போதும் என்னிடம் இருக்கும். அவற்றைப் போட்டுப் பார்த்தாலே மனம் லேசாகிவிடும். இவை தவிர புத்தகங்கள் வாசிப்பேன். குறிப்பாகப் பெரியவர்களின் சிந்தனைகள், வாழ்வியல் சார்ந்த புத்தகங்களை அதிகம் வாசிப்பேன். இவற்றையெல்லாம்விட இறைவன் கொடுத்த வரமாக மேடையில் ஏறிப் பேசும்போது கிடைக்கும் கைதட்டல்கள்தான் எனக்கு மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்!’’

எஸ்.கதிரேசன் - படங்கள்: குமரகுருபரன்