80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 4 - ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் ஹனிமூன்! - பூர்ணிமா பாக்யராஜ்

இந்திப் படங்கள்ல ஹீரோயினா நடிப்பதே என் கனவா இருந்துச்சு...
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர். இந்த இதழில், பூர்ணிமா பாக்யராஜ்.
`பயணங்கள் முடிவதில்லை’, ‘ராதா’வை தமிழ் நெஞ்சங்களுக்கு அவ்வளவு பிடித்துப்போனது. 1980-களில் ஹோம்லி கேரக்டர்களில் நடித்து லைக்ஸ் அள்ளியவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகினார். இப்போது ரீ-என்ட்ரி பயணத்தைத் தொடரும் பூர்ணிமா பாக்யராஜ், தன் பயணம் குறித்துப் பகிர்கிறார்.
பாலிவுட் ஹீரோயின் கனவு!

பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும், நான் வளர்ந்தது மும்பையில்தான். டான்ஸரான எங்கம்மாவுக்கு அவருடைய சினிமா கனவு நிறைவேறலை. அப்போ டான்ஸ் க்ளாஸ் போயிட்டிருந்த எனக்கும், சினிமா ஆசை வந்தது. நடிகை ஹேமமாலினியின் அம்மாகிட்ட என்னைப் பத்தி டான்ஸ் மாஸ்டர் சொல்லியிருக்கார். அவங்க என்னை அழைக்க, `தில்லாகி’ (1978) பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். தர்மேந்திராவும் ஹேமமாலினியும் நடிக்கிறதை வியந்து பார்த்தேன். ஹேமமாலினியின் அம்மா, அந்தப் பட இயக்குநர் பாசு சட்டர்ஜிகிட்ட என்னைச் சிபாரிசு பண்ணினாங்க. பாசு சாருக்கு என் டான்ஸ் பிடிச்சுப்போக, அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோல்ல என்னை நடிக்கவெச்சார். ஆனா, இந்திப் படங்கள்ல ஹீரோயினா நடிப்பதே என் கனவா இருந்துச்சு.
கமல் ஜோடி?
டான்ஸ் க்ளாஸ்ல, வாணி கணபதி எனக்கு சீனியர். அவங்க மூலமாகவும் என் மாஸ்டர் மூலமாகவும் என்னைத் தெரிஞ்சுகிட்ட கே.பாலசந்தர் சார், ஒரு டான்ஸ் சப்ஜெக்ட் படத்துக்காக என்னைச் சென்னைக்கு வரச் சொன்னார். டான்ஸ் டெஸ்ட், ஆக்டிங் டெஸ்ட் அனைத்திலும் தேர்வானேன். ஆறு மாத ஒப்பந்தம் போட்டு, அட்வான்ஸ் கொடுத்து, கமல்ஹாசனுக்கு ஜோடியா நடிக்கணும்னு சொன்னார். பயங்கர சந்தோஷம். அப்போ கமல்ஹாசன் சாருக்குக் கால் முறிவு ஏற்பட்டதால, ஷூட்டிங் தள்ளிப்போயிட்டே இருந்துச்சு. என் ஒப்பந்தத்தை ரென்யூவல் செஞ்சுட்டே இருந்தாங்க. இதற்கிடையில் நான் படிச்ச காட்ரேஜ் நிறுவனத்தினரின் ஸ்கூலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் அம்மா மற்றும் மகன் வந்திருந்த நிகழ்ச்சியில் நான் டான்ஸ் ஆடினேன். அந்தச் செய்தி உலகின் பல மீடியாக்களிலும் வெளியாக, எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக வர ஆரம்பித்தன. வினோத் கன்னா, ராஜேஷ் கன்னானு பல பெரிய ஹீரோக்களுக்கு தங்கையா சில இந்திப் படங்கள்ல நடிச்சேன். மாடலிங்கும் பண்ணினேன்.
தோல்வி டு சூப்பர் ஹிட்!
இயக்குநர் ஃபாசில் மற்றும் மோகன் லாலின் அறிமுகப்படமான `மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ (1980) படத்துல ஹீரோயின் வாய்ப்பு வந்தது. பாலசந்தர் சாரும் ஒப்பந்தத்துலேருந்து ரிலீஸ் பண்ணிட்டார். காலேஜ் ஃபைனல் இயர் தொடக்கத்துல அந்தப் படத்தில் நடிச்சேன். அப்போ சுத்தமா மலையாளம் தெரியாத எனக்கு, இந்தி தெரிஞ்ச அந்தப் படத்தின் ஒளிப் பதிவாளர் அசோக்குமார் சார்தான் பேச்சுத்துணையா இருந்தார். ஒருமுறை, ‘நான் பெரிய டைரக்டர் பாக்யராஜ்கூட ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்துல வொர்க் பண்ணப்போறேன்’னு அவர் பெருமையா சொன்னார். பாக்யராஜ் யார்னே எனக்கு அப்போ தெரியாதுன் னாலும், ‘அவர் படத்துல எனக்கும் சிபாரிசு பண்ணுங்க’னு சொன்னேன். அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சு, மும்பை போயிட்டேன். படம் ரிலீஸாகி, தோல்வினு ரிசல்ட் சொன்னாங்க. ஆனா, லேட் பிக் அப் ஆகி, படம் பெரிய ஹிட்டாகிடுச்சு. ஒரு விழாவில் அம்பிகா, `நான் பாக்யராஜ் சாரின் `அந்த 7 நாட்கள்’ படத்துல நடிச்சிட்டிருக்கேன்’னு பெருமையா சொல்லிட்டே இருந்தாங்க. நான் பெரிசா எடுத்துக்கலை. படிப்பு முடிஞ்ச அந்நேரம், தொடர்ந்து மலையாளப் படங்கள்ல நடிச்சேன்.
யார் அந்த பாக்யராஜ்?
‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்துக்காக, கேரளா அரசின் சிறந்த நடிகைக்கான விருது எனக்குக் கிடைச்சது. அந்த வெற்றி மூலமா, `நெஞ்சில் ஒரு முள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானேன். அதற்கான ஷூட்டிங் கோவையில் நடந்தப்போ, அங்கே ‘மெளன கீதங்கள்’ படம் பத்தியும், பாக்யராஜ் சாரைப் பத்தியும் பலரும் பெருமையா பேசினாங்க. `யார் அந்த பாக்யராஜ்?’னு ஆர்வமாகி, அந்தப் படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அடுத்ததா நான் நடிச்ச ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் மெகா ஹிட்டாகி எங்க டீமுக்கே புகழைக் கொடுத்தது. ‘அந்த 7 நாட்கள்’ படம் ரிலீஸானதும், ரெண்டு முறை தியேட்டர்ல பார்த்தேன். பாக்யராஜ் சாரின் பெரிய ரசிகையானேன். ‘பாக்யராஜ் சார் படத்துல நடிச்சா பெரிய நடிகையாகிடுவாங்க’னு அப்போ சொல்லுவாங்க. அது எனக்கு நடக்கணும்னு ஆசைப்பட்டேன்.

‘திமிரு பிடிச்சவரா இருப்பாரோ?!’
‘அம்மா’ பட பிரிவ்யூ காட்சியில் பாக்யராஜ் சாரை முதன்முறையாகப் பார்த்தப்போ இன்ப அதிர்ச்சியானேன். உடனே ஓடிப்போய், ‘சார்! ஐயாம் யுவர் பிக் ஃபேன். ஐயாம் வெரி எக்ஸைட்டட்’னு சொன்னேன். அவர் பதிலுக்கு ஒரு வார்த்தைகூட சொல்லாமப் போயிட்டார். எனக்கு ஒரு மாதிரி அவமானமாகிடுச்சு. `திமிரு பிடிச்சவரா இருப்பாரோ?’னு நினைச்சுக்கிட்டேன். அந்தச் சம்பவத்தை நினைச்சு பலநாள் வருத்தப்பட்டேன். இந்த நிலையில், திடீர்னு ஒருநாள் பாக்யராஜ் சார்கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சு. குழப்பமான மனநிலையில போனேன். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் கதை சொன்னார். ‘சார், இப்போ நல்லா பேசுறீங்க. அன்னிக்கு நீங்க சரியா பேசாததால நான் ரொம்ப அப்செட் ஆகிட்டேன்’னு சொன்னேன். `உன்னைவிட நான் அதிகமா அப்செட் ஆகிட்டேன். நீ பாட்டுக்கு இங்கிலீஷ்லேயே பேசிக்கிட்டு இருந்தே. நான் வாயைத் திறந்திறந்தா, எனக்கு இங்கிலீஷ் தெரியாதுனு உனக்குத் தெரிஞ்சிருக்கும். இமேஜ் போயிடும்னு நினைச்சுதான் கிளம்பிட்டேன்’னு சொல்ல, நான் சிரிச்சுட்டேன். அப்புறம் அவர் 40 நாள்கள் கால்ஷீட் கேட்டார். அஞ்சு நாள்கூட இல்லாத அளவுக்கு அப்போ பிஸியா இருந்தாலும், அவர் படத்தை மிஸ் பண்ண விரும்பாம அந்தப் படத்தில் நடிச்சேன்.
‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ (1982) ஷூட்டிங்கில், முதல் நாளே பாக்யராஜ் சார்கிட்ட திட்டு வாங்கினேன். க்ளைமாக்ஸ் சீன் ஷூட்டிங்ல, அவர் திட்டினதுல அழுதுட்டேன். அதனால் பல நாள்கள் அப்செட்டா இருந்தேன். அதற்கான காரணம் தெரிஞ்சுகிட்டவர், ‘நல்லா நடிச்சா உனக்குதானே பெயர் வரும். இதுக்குப் போய் ஃபீல் பண்ணிட்டு இருக்கியே’னு சமாதானம் செய்தார். ஷூட்டிங் நடுவே, எடிட்டிங் வேலைகளையும் பார்ப்பார். நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி, சரிபடுத்திக்க ஊக்குவித்தார். அந்தப் படத்துல நடிச்சதே, பெரிய அனுபவ பாடமா இருந்துச்சு. பிறகு, `முந்தானை முடிச்சு’ படத்துல அவருடைய முதல் மனைவியா கெஸ்ட் ரோல்ல தயங்காம நடிச்சேன்.
1980-கள்ல ‘விதி’, `தங்க மகன்’, ‘நீங்கள் கேட்டவை’ உட்படத் தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வர, என் கிராஃப் உயர்ந்தது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன்தான் அதிகம் நடிச்சேன்.
பிரவீணா அக்கா... அந்த ஒரு ரூபாய்!
பாக்யராஜ் சாரின் முதல் மனைவி பிரவீணா அக்காவுக்கு என் நடிப்பு பிடிச் சிருந்ததால, அவங்கதான் என்னை சார்கிட்ட `டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்துக்கு சிபாரிசு பண்ணியிருக்காங்க. அந்தப் பட ஷூட்டிங்குக்கு பிரவீணா அக்கா அடிக்கடி வருவாங்க. ஒருகட்டத்துல எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. அப்போ சென்னையில வாடகை வீட்டுல நானும் அம்மாவும் தங்கியிருந்தோம். எங்க வீட்டுச் சமையல் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். `நான் உங்க மூத்த பொண்ணு மாதிரி’னு எங்கம்மாகிட்ட சொல்லுவாங்க. சிங்கப்பூர் பயணத்தில் எனக்காக ஒரு புடவையை ஆசையா வாங்கியிருந்தேன். அந்தப் புடவையைத் தனக்காக எடுத்துக்கிட்ட அக்கா, எனக்கு இன்னொரு புதுப்புடவை வாங்கிக்கொடுத்தாங்க. `நீ எந்தப் படத்தில் புதுசா கமிட்டானாலும், அட்வான்ஸ் பணத்துல எனக்கு ஒரு ரூபாய் தவறாம கொடுக்கணும்’னு சொன்னாங்க. அதற்கான காரணம் தெரியாது என்றாலும், நான் அப்படியே செய்தேன்.
இந்த நிலையில் பிரவீணா அக்கா இறந்துட்டாங்க. இதனால் அவர் ரொம்பவே வருத்தத்தில் இருந்தார். அப்போ பாரீஸ்ல ஒரு பட ஷூட்டிங்குக்குக் கிளம்பும் முன்பு, மும்பையிலுள்ள எங்க வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவரும் மும்பையில் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவரை மரியாதை நிமித்தமா எங்க வீட்டுக்கு வாங்கனு சொன்னேன். அவர் வரமாட்டார்னு நினைச் சேன். ஆனா, திடீர்னு எங்க வீட்டுக்கு வந்துட்டார். வீட்டுல சமைக்கக்கூட இல்லை. ஃபார்மாலிட்டிக்கு `சாப்பிடுங்க'னு சொல்ல, `சரி'ன்னு சொல்லிட்டார். கடையில வாங்கிட்டு வந்த உணவைச் சாப்பிட்டார். கிளம்புறப்போ, பாரீஸ் போனதும் போன் பண்ணச் சொன்னார். ட்ரங்க் கால்ல பேசிக்க நிறைய மெனக்கெட்டோம். `ஷூட்டிங் எப்படிப் போகுது? உடல்நிலை நல்லா இருக்கா?’னு மட்டுமே கேட்டார். எனக்குக் குழப்பமாவே இருந்துச்சு. அங்க ஒரு சர்ச்சுக்குப் போனப்போ, மெழுகுவத்தி ஏற்றிவெச்சு வழிபட்டால் நினைச்சது நடக்கும்னு சொன்னாங்க. `வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயின்ட் வர்ற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது. அது சரியானதாக இருக்கும்பட்சத்தில் நிறைவேறணும்’னு மெழுகுவத்தி ஏற்றிவெச்சு வழிபட்டேன். நான் இந்தியா திரும்பிய பிறகு, `என்னைக் கல்யாணம் செய்துக்கிறியா?’னு கேட்டார். முடிவெடுக்க டைம் எடுத்துக்கிட்டேன். பிறகு, கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்.
தேதி குறித்த எம்.ஜி.ஆர்... திடீர் கல்யாணம்!
மூணு வருஷங்கள் கழிச்சுதான் கல்யாணம்னு இருவரும் முடிவெடுத்திருந்தோம். ஆனா, ஜோதிடக் காரணங்களால் அந்த முடிவை அவர் மாற்றிக்கிட்டார். அப்போ முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், கல்யாணத்தை நடத்தி வைப்பதாகச் சொல்லி தேதியையும் குறிச்சுட் டார். அப்போ 25 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியது உட்பட, 30 படங்கள் என் கைவசம் இருந்தன. அதையெல்லாம் கேன்சல் பண்ணினேன். கல்யாணத்துக்கு மூணு நாள்கள் முன்புவரை நடிச்சேன். கடைசி நாள் அவரே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என்னைக் கூட்டிட்டுப்போனார்.
1984-ம் ஆண்டு எங்க கல்யாணம் நடந்துச்சு. புகழுடன் இருக்கும்போதே கல்யாணம் செய்துகிட்டு, ஃபீல்டுல இருந்து விலகிடணும்னு நினைச்சிருந்தேன். அதன்படியே நடக்க, குடும்ப நிர்வாகியா என் அடுத்த அத்தியாயம் ஆரம்பமானது.
ஹீரோயினா நடிச்ச நாலு வருஷங்களில், 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு அவர் படங்கள்ல காஸ்ட்யூம் டிசைனர், தயாரிப்புனு ஏதாவதொரு வகையில வொர்க் பண்ணினேன். தொடர்ந்து அவர் நிறைய நல்ல படங்களை இயக்கினார்; நடிச்சார். அவர் படங்கள் பல மொழிகள்லயும் ரீமேக் செய்யப்பட்டன. இந்தி தெரியாது என்றாலும், அமிதாப்பச்சன் சாரை வெச்சு டைரக்ட் பண்ணி பாலிவுட்டிலும் ஹிட் கொடுத்தார். பெரிய புகழ் பெற்றார்.
அவருடைய வேலையில நான் தலையிட மாட்டேன். அவருக்கு முதலில் தொழில்; அடுத்துதான் குடும்பம். அப்போ, எந்நேரமும் வேலையிலேயே கவனம் செலுத்துவார். அதனால் அடிக்கடி அவரிடம் செல்லமா சண்டை போடுவேன். கல்யாணமாகி, ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் நாங்க ஹனிமூன் போனோம். எங்களோடு எங்க ரெண்டு குழந்தைகள், என் அம்மா மற்றும் தம்பி, அவர் ஃப்ரெண்டுனு ஐந்து பேர் வந்தாங்க. இப்படி ஒரு ஹனிமூன் யாரும் போயிருக்க வாய்ப்பில்லை. அந்த ரெண்டு மாதப் பயணத்தில், நிறைய வெளிநாடுகளுக்குப் போனோம். அந்த பாரீஸ் சர்ச்சுக்கும் குடும்பமாகப் போனோம்!
‘பிஸியா இரு, நல்லது!’
குழந்தைகளின் படிப்பு, பேரன்ட்ஸ் மீட்டிங்னு அவங்களை முன்னிறுத்தி என் உலகம் சுழல ஆரம்பிச்சது. இதற்கிடையே ஃபேஷன் டிசைனிங்லயும் கவனம் செலுத்தினேன். பையன் சாந்தனுவுக்குச் சின்ன வயசுல இருந்து சினிமா ஆசை உண்டு. பொண்ணு சரண்யா நடிக்க வருவானு நினைக்கலை. ஆனா, இருவரும் நடிக்க வந்த போது ரொம்பச் சந்தோஷப்பட்டேன். இப்போ மருமகள் கீர்த்தியும் மீடியாவில் வேலை செய்றா. குடும்பம், குழந்தைகள்னு இருப்பதில் நிறைவா இருக்கு. என்றாலும், ‘வாய்ப்பு கிடைக்காம பலரும் சிரமப்படுற வேளையில், அத்தனை படங்களையும் தவிர்த்துட்டோம். 30 வருஷங்களா நடிக்காம இருக்கிறோமே’னு அப்பப்போ வருத்தப்பட்டதுண்டு. ‘நீ ஆக்டிங்ல பிஸியா இரு. அது நல்லதுதான்’னு கணவர் சொன்னார். 2013-ல் மீண்டும் ரீ-என்ட்ரியைத் தொடங்கினேன். சினிமா, சின்னத்திரைனு நடிக்கிறது மகிழ்ச்சியா இருக்கு!
- நாயகிகள் பேசுவார்கள்!
-கு.ஆனந்தராஜ்
படங்கள் : பா.காளிமுத்து
`புன்னகை மன்னன்’தான் அந்தப் படம்!
‘பயணங்கள் முடிவதில்லை’, ‘ஓலங்கள்’னு ஒரே வருஷத்துல எனக்கு ரெண்டு படங்களுக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருது’ கிடைச்சது. அதை கே.பாலசந்தர் சார் கையால வாங்கினப்போ, ‘நான் அறிமுகப்படுத்த வேண்டிய பொண்ணு. மிஸ் ஆனாலும், நல்ல நிலைக்கு வந்திடுச்சு’னு அவர் சொன்னப்போ, ரொம்பப் பெருமையா இருந்தது. மேலும், `நாம நிச்சயம் வொர்க் பண்ணுவோம்’னு அவர் சொன்னார். ஆனா, அதுக்குள்ள நான் கல்யாணம் பண்ணிகிட்டு, சினிமாவுல இருந்து பிரேக் எடுத்துட்டேன். பிறகு வெளியான `புன்னகை மன்னன்’ ரேவதி ரோல்தான் பாலசந்தர் சார் இயக்கத்துல நான் நடிக்க இருந்த கேரக்டர்னு நினைக்கிறேன்.