Published:Updated:

' தெய்வம்னா திருப்பதி... குருன்னா  ஷீரடி சாய்...!' - நடிகை சீதா நெகிழ்ச்சி!  #WhatSpiritualityMeansToMe

' தெய்வம்னா திருப்பதி... குருன்னா  ஷீரடி சாய்...!' - நடிகை சீதா நெகிழ்ச்சி!  #WhatSpiritualityMeansToMe
' தெய்வம்னா திருப்பதி... குருன்னா  ஷீரடி சாய்...!' - நடிகை சீதா நெகிழ்ச்சி!  #WhatSpiritualityMeansToMe

``தெய்வம்னா எனக்குத் திருப்பதி வேங்கடேசப் பெருமாள்தான். சின்னவயசுல இருந்தே அவரைக் கும்பிட்டுக்கிட்டு வர்றேன். எங்க குடும்பத்துக்கு அவர்தான் குலதெய்வம்." என்று நெகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் நடிகை சீதா. 
``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுப்பேட்டை பழைய சித்ரா தியேட்டருக்குப் பின்புறம் இருந்த வீட்டுலதான். புரட்டாசி மாசம் பொறந்துடுச்சுனா, அம்மா ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்குத் தளிகை போடுவாங்க. அப்போ, நான் என் அண்ணன்கள் 'பாண்டு', 'ராஜூ' இவங்கள்லாம் சின்னப் பிள்ளைகள்...

காலையிலேயே எழுந்து குளிச்சிட்டு எங்க தெருவிலே இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலயும் போய்நின்னு `கோவிந்தா, கோவிந்தா' னு கூப்பிடுவோம். எனக்குக் கொஞ்சம் கூச்சமா இருக்கும். நான் மட்டும் சன்னமான குரல்ல சத்தம் போடுவேன்.
உண்மையைச் சொல்லனும்னா, அந்த வயசுல அதோட தாத்பர்யம் தெரியலே. நம்ம மனசுக்குள்ள இருக்கிற ஈகோவை உடைக்கிறதுக்காகத்தான் இந்த மாதிரி `கோவிந்தா' னு கோஷம் போட்டுக் காணிக்கை வாங்குகிறது. ஈகோ உடைஞ்சிடுச்சினாலே, மனுஷன் இறைவனைத் தேட ஆரம்பிச்சிடுவான், இல்லையா. அதுக்காகத்தான் இப்படி ஒரு சம்பிரதாயத்தை வெச்சிருக்காங்க. 
`கோவிந்தா'னு சொன்னாலே பிறவிங்கிற துன்பம் எனக்குத் திரும்ப வரக்கூடாது. உன் காலடியைப் பிடிச்சிக்கிட்டு நான் கிடந்தா, அதுவே எனக்குப் போதும்னு அர்த்தம். 


நாங்க `கோவிந்தா' போட்டு வாங்கிவரும் அரிசி காய்கறிகள் காணிக்கைகள், அப்புறம் எங்க வீட்டுல இருக்கிற பொருள்களையும் சேர்த்து அம்மா சமையல் செய்வாங்க. வடை, பாயசம், அப்பளத்தோட அன்னிக்கு நூறு பேருக்கு மேல சாப்பிடுவாங்க. உறவுக்காரங்க, நண்பர்கள், சாமியார்கள் இவங்களுக்கெல்லாம் தளிகைப் போட்டு படைச்ச பிரசாத உணவைப் பரிமாறுவாங்க. அப்போ எல்லாரும் `கோவிந்தா... கோவிந்தா'ங்கிற கோஷம் முழங்க வீடே ஒரு பக்திமயமான சூழலுக்குப் போயிடும். 

அந்தக் காலத்திலிருந்தே என் மனசுக்கு மிகவும் நெருக்கமான தெய்வம் திருப்பதி பெருமாள்தான். எனக்குத் திருமணமாகி என் பசங்களையும் சின்ன வயசுல அப்படி கோவிந்தா போட அனுப்பியிருக்கேன் " என்று சொன்னவரிடம் அவரின் திருப்பதி பயண அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.

``எனக்கு எந்தப் பிரச்னைனாலும், மனசு சரியில்லைனாலும் திருப்பதிக்குக் கிளம்பிப் போயிடுவோம். ஆனா, எப்போ போனாலும் பெரிதா  சாமி பார்க்கக் கஷ்டப்பட்டதெல்லாம் கிடையாது. 

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி போனபோதுகூட அரை மணி நேரம், இல்லைன்னா முக்கால் மணி நேரத்துல சாமி பார்த்திடுவோம். இப்போகூட ரெண்டு மாசத்துகொருமுறை கிளம்பிப்போயிடுவேன். இப்போ பெரிய பொண்ணு கல்யாண பத்திரிகை வைக்கிறதுக்காகப் போயிட்டு வந்தேன். பத்துநாளைக்கு ஒருமுறை யாராவது `திருப்பதி போயிருந்தேன்'னு லட்டு பிரசாதம் கொண்டுவந்து தந்திடுவாங்க.

இதுக்கு முன்னாளெல்லாம் சாமிகிட்ட, `எனக்கு இது வேணும், அது வேணும்'னு கேட்டுப் பிரார்த்தனை செய்வேன். நாம கேட்கிறது நல்லதாவும் இருக்கலாம், தப்பாகவும் இருக்கலாம்ங்கிறதைப் புரிஞ்சிக்கிட்டேன். அதனால இப்போல்லாம், `நீ என்ன கொடுக்கிறியோ அதைக் கொடு. நீ கொடுக்கிறது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் அதைத் தாங்கிக்கிற மனபலத்தையும் உடல் நலத்தையும் கொடு'னு மட்டும்தான் வேண்டுவேன்"  

``சாய்பாபாவின் தீவிர பக்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஷீரடிபாபா மீதான பக்தி அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்கள்" 
``தெய்வம்னா திருப்பதிங்கிற மாதிரி நான் வணங்குற குருன்னா அது ஷீரடி சாய்பாபாதான். பாபாவோட அற்புதங்கள் அவர் பலரின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அதிசயங்கள் பத்திக் கேள்விப்பட்டதும் ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு.

எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் ஒருத்தர் பாபாவோட பக்தர். அவரிடம் `பாபாவோட சிலை ஒண்ணு வாங்கிட்டு வாங்க'னு சொல்லியிருந்தேன். இத்தனைக்கும் அவர் அடிக்கடி ஷீரடி போயிட்டு வர்றவர். அப்பவும் அவர், `நான் அங்கிருந்து பாம்பே போயிட்டேன். ஸாரி'னு சொல்லுவார். எனக்கோ ரொம்பவும் வருத்தமா இருக்கும். 

ஆனா, பாபாவோட அற்புதம் பாருங்க. எங்களுடைய குடும்ப நண்பர் ஒருவர்... அவரைப் பார்த்தே பதினைந்து வருஷம் இருக்கும். அவர் ஒரு பெரிய அட்டைப்பெட்டி பார்சலோட வந்தார். அந்தப் பெட்டியைப் பிரிச்சா பாபாவோட சிலை, பாபாவோட காலண்டர், பாபாவோட படம்னு எல்லாம் இருந்துச்சு. எனக்கு ஆச்சர்யத்துல கண் கலங்கிடுச்சு. 

பொதுவாச் சொல்லுவாங்க. `பாபா தன் வீட்டுக்கு வரணும்னு ஒருத்தர் நெனைச்சாலே போதும்... எதோ ஒரு ரூபத்துல வந்திடுவார்'னு. தொடக்கத்துல இதை நான் நம்பவே இல்லை. என் விஷயத்துல நடந்ததுக்குப் பிறகுதான் நான் நம்ப ஆரம்பிச்சேன். அதிலிருந்து பாபாவோட பக்தையாயிட்டேன். இன்றைய வரைக்கும் நிறைய விஷயங்கள்ல எனக்கு ஒரு வழிகாட்டி மாதிரி உதவிக்கிட்டிருக்கார்!''