Published:Updated:

"ரெண்டனா டிராம்... ஒரு ரூபா ப்ளான்!''

"ரெண்டனா டிராம்... ஒரு ரூபா ப்ளான்!''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"ரெண்டனா டிராம்... ஒரு ரூபா ப்ளான்!''

''நான் பிறந்தது என்னவோ திருச்சி தென்னூர்தான். 1952-ல் திருவல்லிக்கேணிக்குக் குடிவந்தோம். '6, பிள்ளையார் கோயில் தெரு, திருவட்டீஸ்வரன்பேட்டை. இதுதான் எங்க வீட்டு முகவரி. இப்பவும் அன்னைக்கு சாலையில் ஓடின டிராம் வண்டிகள், படம் பார்த்த ஸ்டார் தியேட்டர், சித்ரா தியேட்டர், நாள் தவறாமல் காபி குடிச்ச ரத்னா கபேயின் நினைவுகள் கனவு மாதிரி மங்கலா வந்து போகும்!'' - திருவல்லிக்கேணி பற்றிப் பேசப் பேச  கடம் வித்வான் விக்கு விநாயகராமின் முகத்தில் பூரிப்பு.

"ரெண்டனா டிராம்... ஒரு ரூபா ப்ளான்!''
##~##

''அப்ப எனக்கு 12 வயசு இருக்கும். டிராம் வண்டிகள் ஓடின சமயம். அந்த டிராம்ல ஏறி, ரெண்டு பக்கமும் சாலையை வேடிக்கை பார்த்துட்டு பயணம் பண்றது குஷியா இருக்கும். அப்பவே நான் மயிலாப்பூர்ல நாலு குழந்தைகளுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன். சனி, ஞாயிறுனு வாரத்தில் ரெண்டு நாள் மட்டும்தான் கிளாஸ் எடுப்பேன். அதுக்கு எனக்கு மாசம் இருபது ரூபாய் சம்பளம். பதினைந்து ரூபாயை அப்பாவிடம் கொடுத்துடுவேன். மீதி ஐந்து ரூபாய் எனக்கே எனக்குத்தான். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எவ்வளவுதான் செலவு பண்ணினாலும் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு மேல செலவு ஆகாது. அந்தளவுக்கு அந்தக் காலத்தில் விலைவாசி குறைவு.

திருவல்லிக்கேணி போஸ்ட் ஆபீஸ் வாசலில் டிராம் வண்டியில் ஏறினால், கால் மணி நேரத்தில் மயிலாப்பூர் போயிடுவேன். டிராம்ல ஏறும்போதே வேர்க்கடலையும் பட்டாணியும் வாங்கிப் பைக்குள்ள போட்டுக்குவேன். அதைக் கொரிச்சுக்கிட்டே பயணம் பண்றது அவ்வளவு சுகம். போக, வரனு ரெண்டனாதான் மொத்தமே பயணச் செலவு.

"ரெண்டனா டிராம்... ஒரு ரூபா ப்ளான்!''

எங்க வீடு இருந்த பிள்ளையார் கோயில் தெருவில்தான் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத அய்யரின் வீடும் இருந்தது. எங்க வீட்டு நம்பர் 6. அவரோட வீட்டு நம்பர் 22. ஆனால், அவரோடு நெருக்கமான பரிச்சயம் எதுவும் கிடையாது. அவரோட பேத்தி சுகன்யா ராமகோபால் என் சிஷ்யை. பத்து வயசுல என்கிட்ட கடம் கத்துக்கிட்டாங்க.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ஸ்டார் தியேட்டர்ல பார்த்த 'ஆராதனா’ படமும்,  என் 16-வது வயசுல சித்ரா தியேட்டர்ல அப்பாவோட பார்த்த 'மனோகரா’ படமும் இப்பவும் பசுமையா நினைவில் இருக்கு. மகாகவி சுப்பிரமணிய பாரதி, உ.வே.சா, ஜி.என்.பி, எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மானு பெரும் மேதைகள் திருவல்லிக்கேணிவாசிகள் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. என் 15-வது வயசுல ஆர்ச் அகாடமி, திருவட்டீஸ்வரர் சபா, பார்த்தசாரதி ஸ்வாமி சபானு திருவல்லிக்கேணியைச் சுத்தி சுத்தியே நிறைய கச்சேரிகள் பண்ணி இருக்கேன். திருவட்டீஸ்வரர்பேட்டை சிவன் கோயில் பிள்ளையார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். டிசம்பர் சீஸன்ல இங்கே தேங்காய் சூறைப் போட்டுட்டுத்தான் கச்சேரிக்குக் கிளம்புவேன்.

"ரெண்டனா டிராம்... ஒரு ரூபா ப்ளான்!''

திருவல்லிக்கேணின்னா பார்த்தசாரதி கோயிலைப் பத்திச் சொல்லாம இருக்கமுடியாது. பார்த்தசாரதி கோயில்ல நடக்கிற ராப் பத்து உற்சவம் ரொம்பவே விசேஷம். அப்ப அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மாதிரி பெரிய பெரிய மேதைகளின் கச்சேரிகள் நடக்கும். அவங்க நாலு பிராகாரத்துலயும் நின்னுகிட்டே பாடுவாங்க. என் 19-வது வயசுல மிருதங்கம், வயலின், கடம்னு நின்னுட்டே வாசிச்சது ஞாபகத்துல இருக்கு. அதெல்லாம் என் பாக்யம்.

அவ்வளவு அமைதியா இருந்த திருவல்லிக்கேணி, இன்னைக்கு பரபரப்பா மாறிடுச்சு. எங்கே திரும்பினாலும் மூச்சு முட்டுற அளவுக்குக் கூட்டம் நெருக்கியடிக்குது. பழைய, பாரம்பரியமான திருவல்லிக்கேணி இப்போ இல்லைனாலும், திருவல்லிக்கேணி எப்பவுமே தித்திக்கிற திருவல்லிக்கேணிதான்!''

 • விநாயகராம் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர். இவருக்கு அரைமணி நேரத்துக்கு முன் பிறந்த சகோதரி சீதாலட்சுமி, திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் குடியிருக்கிறார்!
   
 • 1966-ல் கச்சேரிக்காக அமெரிக்கா சென்றபோது, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் இவருக்கு வைத்த பெயரே 'விக்கு’!
   
 • இவர் 'கிராமி’ அவார்டு பெற்ற முதல் தென்னிந்திய இசைச்கலைஞர்!
   
 • செல்வகணேஷ், உமாசங்கர், உமாமகேஷ் என மூன்று மகன்களும் சங்கீதா என்ற ஒரு மகளும் உண்டு. செல்வகணேஷ் இசை அமைப்பாளர். உமாசங்கர் கடம் வித்வான். 'வேட்டைக்காரன்’ படத்தில் 'புலி உறுமுது’ பாடலைப் பாடியவர் உமா மகேஷ். சங்கீதா இசை ஆசிரியை!
   
 • 1958-ல் இவர் அப்பா தொடங்கிய 'ஸ்ரீ ஜெய கணேசா தாள வாத்திய வித்யாலயா’வில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் எனப் பல்வேறு தாளவாத்தியக் கருவிகளை வாசிக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழ்மையானவர்களிடம் கட்டணம் வாங்குவது இல்லை!

- ரமா ஆல்பர்ட்
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு