Published:Updated:

பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகள்! - மதுரைப் பொன்மணியின் முயற்சி

பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகள்! - மதுரைப் பொன்மணியின் முயற்சி
பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகள்! - மதுரைப் பொன்மணியின் முயற்சி

"வாழ்க்கையை வாழ்ந்தால் போதும், வசதியாக வாழணும்னு அவசியம் இல்லை. சின்னச் சின்ன விஷயத்தில்கூட சந்தோஷம் புதைந்து கிடக்கிறது. நமக்கான புதையலை நாம்தான் தேடி கண்டுபிடிக்கனும்" எனப் பக்குவப்பட்ட மனநிலையோடு பேசுகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்மணி. ஃபேஷன் டிசைனரான இவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுடன் இணைந்து 'துவம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தன் புது முயற்சி குறித்து நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டவை இதோ... 

``எனக்குச் சொந்த ஊர் மதுரை. படித்தது ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ். கல்லூரி சேர்ந்த முதல் நாளிலிருந்தே என்னை முழுமையான ஒரு ஃபேஷன் டிசைனராக நினைத்துச் செயல்பட ஆரம்பித்தேன். படிக்கும்போதே நிறைய புதுப் புது பேட்டர்ன்களில் ஆடைகளை உருவாக்கி, தோழிகளுக்குப் பரிசளித்து மகிழ்விப்பது என்னுடைய இயல்பு. எனக்கான பயிற்சியாகவும் அதை எடுத்துக்கொண்டேன். பொதுவாக டிசைனர் என்றாலே வசதியான மக்களை மனதில் கொண்டுதான் ஆடைகளை வடிவமைப்பார்கள். ஆனால் நான் என்னுடைய ஆடைகள் கிராமப்புற மக்களைச் சென்ற அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். படிப்பு முடிந்ததும், கிராமங்களுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது தான் 'குக்கூ' குழுவினர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். குழந்தைகளுக்கான அவர்களின் செயல்பாடுகள் மனசுக்கு நெருக்கமாக, அவர்களில் ஒருத்தியாக நானும் மாறினேன். 'குக்கூ' குழுவினர் மூலமாக கிருஷ்ணகிரி அருகில் உள்ள புளியானூர் கிராம மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பொருளாதாரத்தில் பின் தங்கிய அவர்களின் வாழ்க்கை முறை எனக்கு எளிமையைக் கற்றுக்கொடுத்தது. எந்த எதிர்காலத் திட்டமுமின்றி இந்த நிமிஷத்தை சந்தோஷமாக வாழ அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு டெய்லரிங் கற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அங்கு இருந்த சில பெண்களைச் சந்தித்து, ``இலவசமாக டெய்லரிங் கற்றுக்கொடுத்தால் கற்றுக்கொள்வீர்களா?" எனக் கேட்க, பயந்து முதலில் மறுத்தனர். என்மீதான நம்பிக்கையை அவர்களிடம் விதைத்தேன். நண்பர்கள் உதவியுடன் இரண்டு பழைய தையல் மெஷினும், மூன்று புது மெஷினும் கிடைத்தன" என்றவர் உள்ளாடை தயாரிப்பைத் தொடங்கிய விதத்தை விளக்குகிறார்.

``உள்ளாடை தைக்கப் போகிறோம் என்றதும் தையல் தெரிந்த பெண்களே சிரிக்க ஆர்ம்பித்துவிட்டார்கள். உள்ளாடையில் கடையில் அத்தனை வெரைட்டி இருக்கும்போது நம்முடைய பொருள்கள் எப்படி விலைபோகும் என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டார்கள். சில பெண்கள் விருப்பமில்லை என்று சொல்லி விலகிப் போனார்கள். அவர்களிடம் எல்லாம் இயற்கைக்கு இருக்கும் மதிப்பை மக்களிடம் எளிதாக விதைக்க முடியும் என்பதைப் புரியவைத்தேன். சுத்தமான பருத்தித் துணிகளை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து, பருத்தி உள்ளாடைகளை தயார் செய்தோம். அடுத்தகட்டமாக நாடாவுடன்கூடிய உள்ளாடைகள், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் அடர்த்தியான உள்ளாடைகள் எனப் பல வெரைட்டிகளில் உள்ளாடைகள் தயார் செய்தோம். கேள்விப்பட்டவர்களே கஸ்டமர்களாக மாறினார்கள். வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

துணியின் விலை, ஏற்றுமதி செலவு, நூல் போன்ற செலவுகள் போக கிடைக்கும் லாபத்தில், தையல் பெண்களுக்கு ஒரு உள்ளாடைக்கு 8 ரூபாய் எனச் சம்பளம் நிர்ணயம் செய்தேன். அவர்கள் அன்றாடம் தைக்கும் ஆடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களின் அன்றாட சம்பளத்தைப் பெற்றுச் செல்வார்கள். இதன் வெற்றியாகத் தையல் கற்றுக்கொள்ள நிறைய பெண்கள் முன் வந்தார்கள். அவர்கள் தைக்கும் ஆடைகளை எல்லாம் பெரிய, பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இயற்கைப் பொருள்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று எங்களின் பொருளையும் டிஸ்ப்ளேவில் வைக்குமாறு கேட்டேன். ஆரம்பத்தில் தயங்கினாலும், கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்திற்காகச் சம்மதித்தார்கள்.

இப்போது நிறைய இடங்களிலிருந்து ஆர்டர்கள் வருகின்றன. நாங்களும் பிஸியாக இருக்கிறோம். அடுத்தகட்டமாகத் துணிப்பைகள், திருமணத்திற்கான ரிட்டன் கிப்ட்கள் தயார் செய்து விற்பனைக்காகக் களமிறங்கி உள்ளோம். என் குடும்பம் மற்றும் கணவரின் முழு ஒத்துழைப்பும் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. அடுத்தகட்டமாக, சிங்காரப் பேட்டை கிராம மக்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளேன். மக்களின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இயற்கை சார்ந்த மக்களின் மனநிலையையும் மாற்றுவேன் என்கிறார் தன்னம்பிக்கையுடன்.