Published:Updated:

அடம்பிடித்த எம்.எல்.ஏ; 2 முறை ரிப்பன் வெட்டிய அமைச்சர்! - திருப்பூர் புத்தக விழா காட்சி

அடம்பிடித்த எம்.எல்.ஏ; 2 முறை ரிப்பன் வெட்டிய அமைச்சர்! - திருப்பூர் புத்தக விழா காட்சி
அடம்பிடித்த எம்.எல்.ஏ; 2 முறை ரிப்பன் வெட்டிய அமைச்சர்! - திருப்பூர் புத்தக விழா காட்சி

திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரனுக்கும் பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது. எந்தவொரு நிகழ்ச்சியென்றாலும், யாருக்கு முதல்மரியாதை, யாருக்குப் பட்டாபிஷேகம் என்ற ரேஞ்சுக்கு இருவருக்குள்ளும் எகிடுதகிடு போட்டிகள்தான். அது ஒருசில தருணங்களில் வெடித்து வேடிக்கைக் கூத்தாகிப்போவதும் உண்டு.

கடந்தமுறை அரசு நிகழ்ச்சியொன்றில் ஃப்ளெக்ஸ் பேனரில் என்னுடைய பெயரைப் போடாமல், அமைச்சரின் பெயரை மட்டும் போட்டிருக்கிறீர்களே என அதிகாரிகளிடம் கோபத்தில் துள்ளிக் குதித்த எம்.எல்.ஏ குணசேகரன், இந்தமுறை திருப்பூர் புத்தகத் திருவிழாவை நான் வருவதற்கு முன்பாக எப்படி தொடங்க்கலாம் என ஏகத்துக்கும் பொங்கிவிட்டார்.

திருப்பூரில் 16 வது புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. மாலை நடைபெற்ற அதன் தொடக்க விழாவுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேர, எம்.எல்.ஏ குணசேகரன் மட்டும் மிஸ்ஸிங். நேரம் கடந்துவிட்டால் திட்டமிட்டபடி தொடக்க விழா நிகழ்ச்சிகளை முடிக்க முடியாது என்ற யோசனையில் அமைச்சரையும் மற்ற எம்.எல்.ஏ-க்களையும் வைத்து புத்தகத் திருவிழாவை ரிப்பன் வெட்டித் தொடங்கினார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். ஆனால், காலதாமதமாக நிகழ்விடத்துக்கு வந்து சேர்ந்த எம்.எல்.ஏ குணசேகரனுக்கு அது கடும் கோபத்தைக் கிளப்பிவிட்டது.

கடைசிவரை விழா ஏற்பாட்டாளர்களைப் பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தார் எம்.எல்.ஏ. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்த அவர்கள், மேடை நிகழ்ச்சிகள் முடிவடைந்து அனைவரும் வீட்டுக்குக் கிளம்பும் தருவாயில் மீண்டும் அவசர அவசரமாக அரங்கு நுழைவாயிலில் சென்று ரிப்பனைக் கட்டினார்கள். பிறகு அமைச்சரின் அருகில் எம்.எல்.ஏ குணசேகரனும் நின்றுகொள்ள, மீண்டும் புதிதாக ரிப்பனை வெட்டி புத்தகத் திருவிழாவை 2-வது முறையாகத் திறந்து வைத்தார்கள். 

விழாவுக்கு வந்த பொதுமக்கள் அனைவரையும் இந்தச் சம்பவம் சிரிப்பில் ஆழ்த்திவிட்டது.