Published:Updated:

ஒரு நாடகம்... ஓராயிரம் பாடம்!

ஒரு நாடகம்... ஓராயிரம் பாடம்!

'தி   லூட்டர்ஸ் லூட்டி’ -  ராஜா அண்ணாமலைபுரம் டி.என்.ஆர். அரங்கில் நடைபெற்ற இந்த மௌன நாடகத்துக்குப் பார்வையாளர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு. ஒரு ஜாலியான புத்திசாலித் திருடன், ஒவ்வொருமுறையும் எப்படி போலீஸிடம் இருந்து தப்புகிறான் என்பதுதான் கதை. ஒரு டீம் இதை வசனங்களோடு நிகழ்த்த, இன்னொரு டீம் மைமிங்கில் நாடகத்தை நிகழ்த்தியதுதான் இதன் ஸ்பெஷல். 'ஐடியா நல்லா இருக்கே!’ என்று நாடகக் குழுவைப் பிடித்துப் பேசினேன்.

ஒரு நாடகம்... ஓராயிரம் பாடம்!
##~##

நாடகத்தின் இயக்குநர் வட்சன் நட்ராஜ் பேசத் தொடங்கினார். ''நான், பிரசாந்த், ஜனனி, திவ்யா நாலு பேரும் ஒரே ஸ்கூலில் படிச்சோம். காலப்போக்கில் எங்களோடு பொது நண்பர்கள் சிலரும் இணைந்து தொடங்கிய அமைப்புதான் 'உணர்வியம்’. பொழுதுபோக்கின் ஊடாகச் சில நல்ல விஷயங் களையும் பண்ணணும் என்பதுதான் உணர்வியத்தின் நோக்கம்.

எங்க ஒவ்வொருத்தருக்குமே ஏதோ ஒரு வகையில் மைம் நாடகங்கள் மீது ஈர்ப்பு இருந்தது. போன வருஷம் வரை நான் காலேஜ் ஸ்டூடன்ட். ஐ.ஐ.டி-யில் அகில இந்திய அளவில் நடக்கும் 'சாரங்’ நாடகப் போட்டியில் எங்க கல்லூரி டீம் இரண்டு முறை முதல் பரிசு வாங்கியிருக்கு. அதேபோல் 'ஏர்டெல் தியேட்டரிக்கல்’   போட்டியில் ஷேக்ஸ்பியரின் 'மெக்பத்’ நாடகத்தை மைமிங்ல அரங்கேற்றி பாலச்சந்தர் சார் கையால் 'சிறந்த நாடகம்’னு விருது வாங்கினோம். இதேபோல்தான் எங்க டீம்ல உள்ள 20 பேரும் பள்ளி, கல்லூரிக் காலகட்டத்தில் மைமிங்கோட ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தவங்க'' என்கிற வட்சனைத் தொடர்கிறார் 'லூட்டர்ஸ் லூட்டி’யின் தயாரிப்பாளர் பிரசாந்த்.

ஒரு நாடகம்... ஓராயிரம் பாடம்!

'''விருமாண்டி’யில் ஒரே விஷயம் கமலோட பார்வையில் ஒரு மாதிரியும், பசுபதி பார்வையில் வேற மாதிரியும் விரியுமே, அதே மாதிரியான கான்செப்ட்தான் இந்த நாடகம். ஒண்ணேகால் மணிநேரம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களோடு நாடகம் நடத்தினோம். உட்கார சீட் கிடைக்காம ஏகப்பட்ட பேர் நின்னுட்டே பார்த்தாங்க. அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வுனு தற்கால விஷயங்களையும் வசனங்களா மாற்றி அமைச்சிருந்ததுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்!'' என்கிறார்.

ஒரு நாடகம்... ஓராயிரம் பாடம்!

''மைமிங்கில் உள்ள சிரமங்களையும் சொல்லுப்பா'' என்றபடி வந்த ஜனனி, ''சார், மைமிங்ல எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. உதாரணத்துக்கு, இப்போ மேஜைன்னா நாங்களே மேஜை மாதிரி நிக்கணுமே தவிர அசல் மேஜையைக் கொண்டுவந்து போடக்கூடாது. ஆனாலும் சொல்ல வர்றதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவா உணர்த்தறதுதான் சவால்'' என்றார். 'ஒருத்தர் ஆடைகள், இன்னொருத்தர் புரொடக்ஷன்னு எங்க வேலைகளை எங்களுக்குள்ளேயே பிரிச்சிக்கிட்டுப் பண்றதால, வேலை ஈஸியா முடியுது. 'லூட்டர்ஸ் லூட்டி’யை மேடை நாடகமாப் போட ஸ்பான்சர்ஷிப் கேட்டு ஏகப்பட்ட நபர்களைச் சந்திச்சோம். ஆனா, யாரும் உதவி செய்ய தயாரா இல்லை. அப்புறம்தான் நாமளே சொந்தமா பண்ணலாம்னு முடிவு பண்ணி டி.என்.ஆர். அரங்கத்துல நாடகத்தை அரங்கேற்றினோம். மாசக் கடைசிங்கிறதால எங்க கையில இருந்த 3,500 ரூபாயை அட்வான்ஸா கொடுத்துட்டு, ஷோ முடிஞ்ச பிறகே டிக்கெட் கலெக்ஷன்ல இருந்து மீதித் தொகையைக் கட்டினோம்'' என்கிற இணைக் கதை ஆசிரியரும் மேடை ஒருங்கிணைப்பாளருமான திவ்யாவின் வார்த்தைகளை வழிமொழிகிறார்கள் மற்றவர்களும். பிப்ரவரியில் மீண்டும் மேடை ஏறப்போகிறதாம் 'தி லூட்டர்ஸ் லூட்டி!’

ஒரு நாடகம்... ஓராயிரம் பாடம்!
ஒரு நாடகம்... ஓராயிரம் பாடம்!

- தி.முத்துராஜ்,
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு