அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு!

சமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு!
பிரீமியம் ஸ்டோரி
News
சமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு!

- சக்திவேல், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு!

“இலவசங்களையும், நலத்திட்டங்களையும் இழிவாகப் பார்க்கும் போக்கு, இங்கே பரப்பப்பட்டு வருகிறது. ‘நலத்திட்டங்கள் மக்களை ஏமாற்றும் நாடகம், அவை மக்களை மந்தப்படுத்தும் செயல்’ என்று கோபப்படுகிறார்கள். பக்குவமற்ற அரசியல் பார்வை இது. இலவசங்கள் இல்லாமையைப் போக்குவதும், நலத்திட்டங்கள் சாமான்யர்களைச் சமதளத்தை நோக்கி நகர்த்தி வருவதும் இவர்களுக்குப் புரிவதில்லை அல்லது புரிந்துகொள்ள இவர்கள் முயல்வது இல்லை.

படைப்புச் சுதந்திரம் பொறுப்பு உணர்வு எனும் அச்சிலிருந்து விலகுவதால் ஏற்படும் விளைவுகளை, கண்முன் காட்டியது ‘சர்கார்’ திரைப்படம். அந்தப் படத்தில் வாக்குரிமை பற்றிக் காட்டப்பட்ட காட்சிகளைவிட, இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சியே ரசிகர்களைச் சென்றுசேர்ந்தன. அதன் தாக்கத்தில் இலவச டி.வி-க்களையும், மின்விசிறிகளையும் தூக்கியெறிந்தனர் சில ஆர்வக்கோளாறு ஆசாமிகள். இப்படிப்பட்ட சமூகத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? ஏனென்றால், ரசிகன் என்பவன் வெறும் ரசிகன் மட்டுமல்ல. அவன் குடிமகனும்கூட. அவனிடம் அடிப்படையற்ற அரசியலை விதைப்பது, விபரீத விளைவுகளையே உருவாக்கும். ‘சர்கார்’ மாதிரியான அரசியலற்ற அரசியல் படங்கள் அதிகரிப்பது ஆபத்தானதாகத் தெரிகிறது.

சரி... இலவசம் இழிவா? இல்லாமையை அனுபவித்தவர் வாயிலிருந்து, இலவசம் இழிவு என்ற வார்த்தை வராது. உண்ண உணவற்ற, உடுத்த உடையற்ற, இருக்க வீடற்ற மக்கள் வாழும் தேசத்தில், இலவசங்களை இழிவென காட்டுவது அறமற்ற செயல். சமூகத்தைப் பார்க்காமல், சமூக வலைதளங்களை மட்டுமே பார்ப்பதால், வருகின்ற நோய் இது. சென்ட்ரல் பில்டிங்கைக் கண்டு மெய்சிலிர்த்து, ‘வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம்’ என்று அந்நிய ஆதிக்கத்தை ஆதரிப்போரும், ‘எமர்ஜென்ஸியின்போது ரயிலெல்லாம் சரியான நேரத்துக்கு வந்தது’ என்று சர்வாதிகாரத்தை ஆதரிப்போரும் இங்கே இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அவ்வகை கருத்துகளை அதிகமாகவே பார்க்கலாம். அதற்காக, அதையெல்லாம் ஆதரித்துப் படம் எடுத்தால், நாடு தாங்குமா?

சமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு!

இந்தத் தேசத்தின் இப்போதைய நிலையைக்கண்டு கொந்தளிப்பதற்கு முன்னால், அப்போதைய நிலையை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். ஆங்கிலேயன், இந்தியாவை அமெரிக்காபோல மாற்றிவிட்டுச் செல்லவில்லை. ஆப்பிரிக்க தேசங்களைப்போல மாற்றிவிட்டுச் சென்றான். மதம்பிடித்த யானைக்கூட்டம் மிதித்துச் சென்ற வயல்வெளிபோலச் சிதைந்துகிடந்தது தேசம். உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பஞ்சம். அரைவயிறு கால்வயிறு கஞ்சிக்குக்கூட வழியில்லை. அப்போது ஒரு நாட்டின் தலைவன் என்ன செய்திருக்க வேண்டும்? ‘இழிவு... அவமானம்...’ போன்ற மேட்டுக்குடி வாதங்களைக் கேட்டு மக்களைப் பட்டினியில் சாகவிட்டிருக்க வேண்டுமா?

என்ன செய்தார் தெரியுமா நேரு? உலக நாடுகளிடம் கையேந்தினார். இன்னும் சொன்னால், பிச்சை கேட்டார். “என் நாட்டு மக்களுக்காகப் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறேன்” என்று கடிதம் எழுதினார். பஞ்சத்தைச் சமாளித்தார்; பசியைப் போக்கினார். பல லட்சம் மக்கள் உயிர் பிழைத்தார்கள். இதை இழிவு என்று சொல்லமுடியுமா? ஆக, பஞ்சத்தைக் கடந்து, பட்டினிச் சாவுகளைக் கடந்து இவ்வளவு தூரம் வந்துசேர்ந்திருக்கிறது இந்தியா. அதில், முக்கியப் பங்கு வகித்திருக்கிறது தமிழ்நாடு. ஏனென்றால், இந்தியாவின் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், அதற்கு முன்னாலேயே தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுவிட்டன.

சமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு!

சமூகநலத் திட்டங்களை வகுப்பதிலும், அதைச் செயல்படுத்துவதிலும், தமிழ்நாடு ‘சாம்பியன்’ மாநிலம் என்று அடித்துச் சொல்லலாம். மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று ஏறக்குறைய எல்லோருமே சமூகநலத் திட்டங்களைச் சீராக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். காமராஜர் இலவசக் கல்வியைக் கொண்டுவந்தபோது, ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்றார்கள். ஆனால், கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார் காமராஜர். கருணாநிதி, ‘ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடு’ என்று ஆணையிட்டபோது, ‘அதிகம் செலவாகுமே’ என்றார்கள். கருணாநிதி அதைக் கவனித்திருந்தால், குடிசை மாற்று வாரியமே பிறந்திருக்காது. எம்.ஜி.ஆர்., ‘பள்ளிகளில் இனி இலவச சத்துணவு’ என்றபோது, ‘இது ஏழைகளை இளக்காரமாகப் பார்க்கும்போக்கு’ என்றார்கள். அப்புறம், ஐ.நா விருதை வாங்கிவந்தது அந்தத் திட்டம். ஜெயலலிதா, ‘அம்மா உணவகம் திறக்கிறேன்’ என்றபோது, ‘ஹோட்டல் நடத்துவது அரசின் வேலை அல்ல’ என்றார்கள். இன்று, அடித்தட்டு மக்களின் அன்னபூரணி, அம்மா உணவகம்!

மனிதவளக் குறியீட்டிலும், பெண்கள், குழந்தைகள் நல வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. திட்டக் கமிஷன் அதிகாரிகளின் ஆய்வறிக்கைகள், அதை உறுதிப்படுத்துகின்றன. அதில், “பொருளாதார, சமூகநலத் திட்டங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்ட காரணங்களால்தான் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நிதியாதாரங்கள் குறைவாக இருந்தாலும், மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் தமிழ்நாடு முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இருந்துவருகிறது” என்று புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள். நலத்திட்டங்களை அடிமட்டம்வரை கொண்டுசெல்ல, பொது விநியோகக் கட்டமைப்பு அவசியம். அது சரிவர இல்லாததாலேயே, பல மாநிலங்கள் இன்றும் பின்தங்கிக் கிடக்கின்றன. ஆனால், அதில் தமிழகம் ‘தம்ஸ்அப்’ காட்டி நிற்கிறது. இதைக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், “பொது விநியோகக் கட்டமைப்பைப் பலப்படுத்தியதில், தமிழ்நாடு பிற மாநிலங்களுக்குப் பாடமே நடத்தியது. இடதுசாரிகள் ஆண்ட, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில்கூட, தனியார் முகவர்கள் மூலம்தான் விநியோக முறை இயங்கியது. ஆனால், தமிழ்நாடு அப்போதே பொது விநியோக முறையில் முன்னோடியாக இருந்தது. 1970 - 80-களிலேயே, கிராமத்துக்கு ஒரு ரேஷன் கடை எனும் கட்டமைப்பு, இங்கே இருந்தது.

இந்தியாவின் பல மாநிலங்களில், இன்னமும் மின்சாரமே இல்லாத பல கிராமங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லோர் வீட்டிலும் டி.வி-யும், மின்விசிறியும் இருக்கின்றன. கர்நாடக அரசு இப்போதுதான் இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பே நம்மூர் மாணவர்கள் இலவச சைக்கிள் பெற்றுவிட்டார்கள். தொட்டில் குழந்தை திட்டம், பெண் சிசுக்கொலைகளையும் கருக்கலைப்பு மரணங்களையும் குறைத்தது. தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்கள், ஏழை வர்க்கத்தின் திருமணச்செலவைக் குறைத்தன. அம்மா உணவகம், ஆந்திரத்தில் என்.டி.ஆர் கேன்டீனாகவும், கர்நாடகாவில் இந்திரா கேன்டீனாகவும் மாற்றம் பெறும் அளவுக்கு கவனிக்கப்பட்டது. அதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகள், திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் என, பலன்கள் பரவலாக்கத்திலும் பாய்ச்சல் காட்டி இருக்கிறது தமிழகம். விதவைகள் மறுமணத்துக்கு முதன்முறையாக உதவித்தொகை தந்ததும் தமிழ்நாடுதான்.

ஆனால், “இதெல்லாம் பெரிதல்ல. கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாகத் தரவேண்டும்” என்று கூறுகிறார்கள். இங்கே குளறுபடிகளும் குறைகளும் இருக்கிறதே தவிர, ஆண்டாண்டுக் காலமாகக் கல்வியும் மருத்துவமும் இலவசம்தான். ஒரு பஸ்பாஸ், ஒரு சைக்கிள், ஒருவேளை உணவு, ஒரு லேப்டாப்... இவைகள்தான் பல லட்சம் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கொடுக்கிறது. ஒரு சொட்டு மருந்து... ஒரு தடுப்பூசி... இவைகள்தான் பல லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், இலவசங்களை இழிவு என்கிறார்கள். நலத்திட்டங்களை நகையாடுகிறார்கள்.

சமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு!

இதைச் செய்வதில், மேட்டுக்குடியினரே அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்கள்தான் முருகதாஸ்களை உருவாக்குகிறார்கள். முருகதாஸ்கள், ‘சர்கார்’களை உருவாக்குகிறார்கள். ‘இலவசத்தை ஒழிக்கணும் சார், ரேஷன் கடையெல்லாம் மூடணும் சார்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இலவச டி.வி-க்கும், கிரைண்டருக்கும் இவர்களே முன்னால் நிற்கிறார்கள். ‘சும்மா வர்றதை ஏன் சார் விடணும்?’ என்ற ஒரே வசனத்தில் வாயை அடைக்கிறார்கள். இவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே, இருப்பவர்களுக்காகக் கொண்டு வரப்படும் திட்டங்களில் இல்லாதவர்கள் பயனடையவில்லை. இல்லாதவர்களுக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்களில்தான் இருப்பவர்கள் பயனடைகிறார்கள்.

இன்னொரு புறம், இடஒதுக்கீட்டையும் குறிவைக்கிறார்கள். ‘இடஒதுக்கீடும் இலவசமே’ என்று காரணம் சொல்கிறார்கள். இடஒதுக்கீடு இலவசமும் அல்ல, சலுகையும் அல்ல, தானமும் அல்ல. அது உரிமை! இரண்டாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டும் அழுத்தப் பட்டும் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்த சமூகங்களின் அடிப்படை உரிமை. படிப்பு கொடுப்பதும் வேலை கொடுப்பதும் அவர்களுக்கென்று சமூக மதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக!

அதேநேரம், இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களில் அரங்கேறும் ஊழல்களும், லஞ்ச லாவண்யங்களும், அதிகார அத்துமீறல் களும் கவனப்படுத்தப்பட வேண்டும். அதைத்தான் அதிகம் பேச வேண்டும். அதற்குத்தான், தீர்வுகாண வேண்டும். அதை விடுத்து, அத்தகைய திட்டங்களின் மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்துவது சரியல்ல. கண்ணாடியில் அழுக்குப்படிந்தால், துடைக்க வேண்டுமே தவிர, உடைத்துவிடக் கூடாது!