Published:Updated:

காந்தியும் ஜீவாவும் சந்தித்துக்கொண்ட இடம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

அவரின் 22 நூல்களுக்கு மேல் தொகுத்த கே.ஜீவபாரதி, ``சிராவயலில் காந்தி - ஜீவானந்தம் நினைவு இல்லம் அமைக்க வேண்டும்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார். 

காந்தியும் ஜீவாவும் சந்தித்துக்கொண்ட இடம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
காந்தியும் ஜீவாவும் சந்தித்துக்கொண்ட இடம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, வ.வே.சு. ஐயர், வ.உ.சி., மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த கக்கன் மற்றும் தமிழறிஞர் வ.ரா. போன்ற தமிழக அரசியல் வரலாற்றின் பல்வேறு ஆளுமைகளும் பொதுவுடைமை போராளியான ஜீவாவை வந்து சந்தித்த இடம், காரைக்குடி அருகேயுள்ள சிராவயல். இங்கு நிலைகொண்டிருந்த காந்திய ஆசிரமம், இன்றைக்கு முற்றிலும் சிதைந்துபோன நிலையில் முட்செடிகளும், கருவேல மரங்களும், குப்பைகளும் மண்டிக் கிடக்கிறது. 

தோழர் ப.ஜீவானந்தம் - காந்தியத் தொண்டர், சுயமரியாதை இயக்கப் பற்றாளர், தனித்தமிழ் காதலர், பொதுவுடைமைப் போராளி... எனப் பன்முக அடையாளங்களோடு அறியப்பட்ட தூய அரசியல்வாதி. ஜீவா, தன்னுடைய 20-ம் வயதில் வந்துசேர்ந்த இடம் காரைக்குடி அருகே உள்ள சிராவயல். இன்னும் நேர்த்தியாகச் சொன்னால், சிராவயல் அருகே இருக்கும் மருதங்குடி.

அங்கிருக்கும் மூத்த காங்கிரஸ்வாதியான க.திருநாவுக்கரசு, ஜீவா குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

``மருதங்குடியையும் சிராவயலையும் ஒரு நீண்ட மண்சாலைதான் பிரிக்குது. காந்தியவாதியான காசி விசுவநாதன் நடத்திய ஆசிரமப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிய வந்தவர்தான் ஜீவா. அங்கு ஆசிரியப் பணிக்கு வந்தபோது சொரிமுத்து என்ற இயற்பெயரில்தான் செயல்பட்டார். சமுதாய மாற்றச் சிந்தனைகளை மக்களிடையே விதைத்தார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் காந்தியத்தையும் திருக்குறளையும் இலக்கியங்களையும் பயிற்றுவித்தார். குப்பன், சுப்பன் என்கிற பெயர்களையெல்லாம் கெளதமன், மணிவாசகன், மணித்தொண்டன் எனப் பெயர் மாற்றம் செய்தார். இதற்காகக் காசி விசுவநாதன், ஜீவா இருவருமே நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிதாயிற்று. காசி விசுவநாதனைச் சுயசாதியிலிருந்தே விலக்கி, பின்னர் ஊரைவிட்டும் வெளியேறச் செய்தனர்.

தோழர் ஜீவா அரிவாளால் தாக்கப்பட்டார். இதை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பின்னாளில், `சிராவயல் அளித்த பரிசு' என்று ஜீவா குறிப்பிட்டதாக எழுதுகிறார். அண்ணல் காந்தி அமரர் ஜீவா நினைவுக் குழு சார்பாக வருடந்தோறும் ஜீவாவின் நினைவாக விழா நடத்துகிறோம். சமூகச் சீர்திருத்தவாதியாக வாழ்ந்த ஜீவாவுக்கு, அவர் வாழ்ந்த பகுதியான சிராவயலில் நினைவு இல்லம் அமைக்கப்பட வேண்டும் என்பது ஊர்மக்கள் எல்லோரின் விருப்பம்" என்றார்.

தேச விடுதலை, சாதிய வேறுபாடுகள், பெண்ணுரிமை, தனித் தமிழ் என முற்போக்கு கருத்துகளை ஏந்தி நடந்த, முன்னத்தி ஏரான ஜீவானந்தத்தை, காந்தி சந்தித்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது. தமிழகம் வந்திருந்த காந்தி, அவரைக் காரைக்குடியில்தான் தங்கியிருந்த இடத்துக்கு வரச் சொல்லாது ஜீவா செயலாற்றிய காந்திய ஆசிரமத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டார். அவரை, தேசத்தின் சொத்து என்று காந்தி குறிப்பிட்டதும் இவ்விடத்தில்தான். 

குன்றக்குடி ஆதினப் புலவர் பரமகுரு அவர்கள் குறிப்பிடும்போது, ``ஜீவானந்தம் முழுமையான தலைவராக வாழ்ந்தவர். வாக்கும் வாழ்க்கையும் ஒன்றென வாய்க்கப் பெற்றவர். நேர்மைக்குச் சிகரமான அவரின் மேடைப் பேச்சுகளை முழக்கம் என்றே சொல்ல வேண்டும். குன்றக்குடி அடிகளாரோடு அவரின் பட்டி மண்டபம், இருவருடைய நிலவிய கருத்தியல் நெருக்கங்களை உணரவைத்தன. ஜீவாவை அடுத்த தலைமுறையினர் கற்க வேண்டும்'' என்றார்.

அவரின் 22 நூல்களுக்கு மேல் தொகுத்த கே.ஜீவபாரதி, ``சிராவயலில் காந்தி - ஜீவானந்தம் நினைவு இல்லம் அமைக்க வேண்டும்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். 

அவரிடம் பேசிய போது, ``அவர்கள் சந்தித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம், இன்றைக்குப் பொதுக் கழிப்பிட அளவுக்குப் பாழ்பட்டுக் கிடக்கிறது. அந்த இடத்தின் பொறுப்பு தனி நபர்களிடம் இருக்கிறது. அவர்களிடமிருந்து மீட்டு அவ்விடத்தைத் துப்புரவு செய்து ஜீவானந்தத்தின் தியாகத்தைப் போற்றும்வகையில் அரசு நினைவு இல்லம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவரின் நூல்களை அங்குக் காட்சிப்படுத்த வேண்டும். இது, தேசப்பற்று கொண்டிருக்கிற அனைவரின் கோரிக்கை" என்றார்.

தன்னலமற்ற தலைவர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாப்பது நம் கடமை மட்டுமல்ல, பெருமையும்கூட.