Published:Updated:

முன்பு ஆசிரியர்; இப்போ இயற்கை அங்காடி.. காரணம் நம்மாழ்வார்! - மன்னார்குடி சண்முகவேல்

விகடன் விமர்சனக்குழு

`` `எல்லா கடையிலையும் ப்ரெஷ் ஜுஸ்னு சொல்றாங்க, ஆனா நல்ல பழத்தையெல்லாம் விற்பனைக்கு வைச்சுட்டு, பழசைத்தான் கொடுப்பாங்க. ஆனா, நீங்க உண்மையிலேயே ப்ரெஷ் ஜுஸ் கொடுக்குறீங்கன்னு' சொன்னார். அதைவிட நமக்கு வேற எண்ணங்க வேணும்."

முன்பு ஆசிரியர்; இப்போ இயற்கை அங்காடி.. காரணம் நம்மாழ்வார்! - மன்னார்குடி சண்முகவேல்
முன்பு ஆசிரியர்; இப்போ இயற்கை அங்காடி.. காரணம் நம்மாழ்வார்! - மன்னார்குடி சண்முகவேல்

யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிவிட்டுப்போன நல்ல விஷயங்கள் ஏராளம். துரித உணவு, ரசாயணம் கலந்த உணவுகள் எனத் திரிந்த இன்றைய இளைஞர்களை இயற்கை குறித்து அவர் சிந்திக்க வைத்த செயல் மிகவும் அருமையானது. அதனால் பலரும் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த பல்வேறு வேலைகளைத் துறந்து விவசாயத்துக்கு மாறியிருக்கிறார்கள். இதுபோக சிலர் இயற்கை சார்ந்த கொள்கைகளை கடைபிடித்தும் வருகின்றனர். கை நிறைய சம்பளம் தந்த ஆசிரியர் வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது மன்னார்குடியில் இயற்கை முறையில் பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறுகள், கருப்பட்டி பால் என இயற்கை உணவுகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறார், சண்முகவேல். இதையறிந்து அவரைச் சந்தித்துப் பேசினோம். 

``பீட்ரூட் எப்படியிருக்கும். அதை ஜூஸ் போட்டுக் குடிச்சிருக்கீங்களா? இந்தாங்க இதைக் குடிச்சுப் பாருங்க. டேஸ்ட் எப்படியிருக்கு?" என்று கரும்புச் சாற்றினால் சுவையூட்டப்பட்ட பீட்ரூட் சாற்றைக் கொடுக்கிறார், சண்முகவேல். ``என்னங்க பீட்ரூட் ஜூஸ்ல கரும்புச் சாறு... எப்படி?" என்ற கேள்வியை எழுப்பினோம். இதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், சண்முகவேல். 

``உடம்புக்கு ஆரோக்கியம்னு சொல்லித்தான் காய்கறி, பழங்களைச் சாப்பிடுறோம். அதுல சர்க்கரையோ, பாலோ கலக்குறப்போ அது கெட்டுப்போயிடுது. மன்னார்குடியில எனக்குத் தெரிஞ்சு இந்த மாதிரியான கடை இல்ல. இங்க சர்க்கரை, தண்ணீர், பால்னு எதுவும் இல்லாம இயற்கையான சுவையோட பழச்சாரை கொடுத்துக்கிட்டு வர்றேன். கடையை முழுக்க பனை மரம், தென்னங்கீற்று, மண் தட்டு, மண் குடுவைனு எல்லாத்தையும் இயற்கையாவே கொடுத்துக்கிட்டு வர்றேன். 

நான் எம்.ஏ வரை படிச்சிருக்கேன். கொஞ்சகாலம் டீச்சராவும் வேலை பார்த்தேன். வருமானத்துக்கு எந்தக் குறையும் இல்லை. நான் கொஞ்சம் இயற்கை உணவு முறைகள்ல ஆர்வம் கொண்டவன். அதையொட்டி மக்களுக்கு நல்லதைச் செய்யணும்னு யோசிச்சேன். பல முறை யோசிச்சதுல பழச்சாறு கடை வைக்கலாம்னு தோணிச்சு. வேலையை விட்டுட்டுக் கடை வச்சிட்டேன். 

ப்ரெஷ் ஜுஸ் சுவைக்காக மட்டும் குடிக்குறது இல்லை. ஆரோக்கியத்திற்காகவும்தான் குடிக்கிறோம். பெரும்பாலும் சுவைக்காக சர்க்கரை, பால்னு கலப்படம் செஞ்சு மெருகேத்திதான் கொடுக்கிறாங்க. அதனால இதையெல்லாம் போடாமக் கொடுக்கணும்னு வீட்டுல செஞ்சு பார்த்தேன். நல்ல சுவையா இருந்தது. அப்புறமாத்தான் கடை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்சு ஏழு மாசமாகுது. மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்குது. 

தினமும் மார்க்கெட்டுக்கு நேரடியா போய் பழங்களையும், காய்கறிகளையும் வாங்கிட்டு வந்துடுவேன். பழத்தின் வடிவம், தரம்னு ஏதாவது குறைபாடு இருந்தா அதைத் தவிர்த்துடுவேன். வியாபாரத்தை விட நமக்கு வாடிக்கையாளர்களோட ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம். ஒருமுறை வழக்கறிஞர் என்னைத் தனியாக் கூப்பிட்டு, `எல்லா கடையிலையும் ப்ரெஷ் ஜுஸ்னு சொல்றாங்க, ஆனா நல்ல பழத்தையெல்லாம் விற்பனைக்கு வைச்சுட்டு, பழசைத்தான் கொடுப்பாங்க. ஆனா, நீங்க உண்மையிலேயே ப்ரெஷ் ஜுஸ் கொடுக்குறீங்கன்னு' சொன்னார். அதைவிட நமக்கு வேற எண்ணங்க வேணும்.

நெல்லிக்காய், அத்திப்பழம், வாழைப் பூ, வாழைத் தண்டு, நார்த்தங்காய், கேரட், பீட்ரூட், அன்னாசி, பப்பாளி, கரும்பு, சாத்துக்குடி, திராட்சை பழங்களோட பழச்சாறுகளை கொடுக்கிறோம். பெரும்பாலும் மிக்சி பயன்படுத்தாம, பழச்சாறு கரண்டி மூலமா சாரை எடுத்துப் பிழியுறோம். அனைத்து வகைகளிலும் சுவைக்குக் கரும்புச் சாறு மட்டுமே சேர்க்குறோம். பழச்சாறுகளை 20 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 40 ரூபாய் வரை விற்பனை செய்யுறோம்.

மாலை நேரங்கள்ல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் பாணிபூரி மாதிரியான உணவுகளை எடுத்துக்குறாங்க. அது பெரும்பாலும் ஆரோக்கியம் இல்லாம இருக்கும். அதனால, மாணவர்களுக்காக பாணிபூரி, பணியாரம் போன்றவற்றை வித்தியாசமாகக் கொடுக்குறோம். நாங்கள் சொந்தமாக கோதுமை மாவு அரைத்து, கடலை எண்ணெய்யில் சமைச்சு மண்பாண்டத்துல வாழை இலையில கொடுக்கிறோம். முதியவர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்காக நாட்டுக் கருப்பட்டியோட பசும்பால்ல, கருப்பட்டி பால் மற்றும் கருப்பட்டி காபி, மண்பானை டீ தயாரிச்சுக் கொடுக்கிறோம். காலை 9 மணியில இருந்து இரவு 9 மணி வரை கடை இருக்கும்.

அரசு இப்போதான் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்திருக்கு. ஆனா, எங்க கடை ஆரம்பிச்சதிலிருந்தே பிளாஸ்டிக்கைத் தவிர்த்துட்டு வர்றோம். செயற்கையைத் தவிர்த்து இயற்கை சார்ந்து, ஐயா நம்மாழ்வார் காட்டின பாதையிலேயே எங்கள் கடை செயல்படுகிறது. இங்க வர்றவங்களும் மன நிம்மதியை அடைஞ்சு, கொஞ்ச நேரம் ஓய்வெடுக்குற இடமாவும் மாறிக்கிட்டிருக்கு. இதைவிட வேறென்ன மன திருப்தி வேணும் சொல்லுங்க" என்று பழச்சாற்றுடன் விடைகொடுத்தார், சண்முகவேல்.