Published:Updated:

உங்கள் பழைய காரை நினைத்த விலைக்கு விற்பனை செய்ய சில டிப்ஸ்! #VikatanInfographics

உங்கள் பழைய காரை நினைத்த விலைக்கு விற்பனை செய்ய சில டிப்ஸ்! #VikatanInfographics
உங்கள் பழைய காரை நினைத்த விலைக்கு விற்பனை செய்ய சில டிப்ஸ்! #VikatanInfographics

கார் உருவாக்குவது அறிவியல் என்றால், அதை விற்பனை செய்வது ஒரு கலை. 5 லட்சம் ரூபாய் தொடங்கி 5 கோடி ரூபாய்வரை பல விலையில், பல தோற்றத்தில், பல நிறை-குறைகளுடன் இருக்கும் ஒரு காரை விற்பனை செய்வது சுலபமான விஷயமில்லை. முன்பெல்லாம் தெரிந்த மெக்கானிக், சொந்தங்கள் அல்லது நண்பர்களிடம் பழைய காரை விற்பனை செய்வோம். இந்தக் காலத்தில் இணையம்தான் நம் விற்பனை நிலையம். `பழைய பருப்பை குக்கர்லபோடு, பழைய பொருளை Quickr-ல போடு’ என டேக் லைன் போடும் அளவு பழைய பொருள்களை விற்பனை செய்ய இணையதளங்கள் வந்துவிட்டன ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் கார்கள் விற்பனையாகின்றன. உங்களிடம் கார் இருக்கிறது அதை இணையதளத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்று நினைத்தால், இதோ சில டிப்ஸ்.

தோற்றம் முக்கியம்

உங்கள் காரை விற்பனை செய்ய அதன் தோற்றம் மிகவும் முக்கியம். அதனால், காரில் டென்ட், ஸ்கிராச், வெடிப்பு போன்று பார்க்க அசிங்கமாக இருக்கும் இடங்களை முதலில் சரிசெய்துவிடுங்கள். இண்டிகேட்டர் கண்ணாடி உடைந்திருக்கும். அந்த இண்டிகேட்டரை புதுசாக மாற்றினால் 1,200 ரூபாய் கூட ஆகாது. ஆனால், காரை வாங்க வருபவர் அதற்கு 10,000 ரூபாய் விலையைக் குறைத்துக் கேட்பார். ஒவ்வொரு கீறலுக்கும் 1000 ரூபாய் டிஸ்கவுன்ட் கொடுக்கவேண்டும் என்று நினைத்து காரின் தோற்றத்தைப் பொலிவாக்கிவிடுங்கள். நீங்கள் விரும்பும் விலை கிடைக்கவேண்டும் என்றால் கார் பார்க்க புதுசு போல இருக்கவேண்டும்.

படம்

இணையதளத்தில் ஏகப்பட்ட கார் பதிவுகள் உள்ளன. அதில் ஒரு சில கார்கள் மட்டும்தான் உண்மையான சந்தை விலைக்கு விற்கப்படுகிறது. பல கார்கள் விற்கமுடியாமல் கடைசியில் டீலர்களிடம் குறைந்த விலைக்கு எக்ஸ்சேஞ்சுக்குச் செல்கிறது. உங்களுடைய காரும் அதில் ஒன்றாக இருக்கக் கூடாது என நினைத்து, காரின் படம் தெளிவாகத் தெரியும்படி பதிவேற்ற வேண்டும். நேரில் பார்க்க கார் பெர்ஃபெக்டாக இருந்தும், படம் சுமாராக இருந்தால் விற்பனையாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 

ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கேமராவை விட நேரம்தான் முக்கியம். காரை சூரிய உதயத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்போ அல்லது சூரியன் மறைந்து சில நிமிடங்களுக்குப் பின்போ படம் எடுக்கவேண்டும். அப்போதுதான் இயற்கையாகவே செம லைட்டிங் கிடைக்கும். மேலும், அந்த வெளிச்சம் காரின் எல்லா நிறங்களோடும் பொருந்தும். எடுக்கும் படத்தில் காரைச் சுற்றி நம் பார்வையை ஈர்க்கக்கூடிய எந்தப் பொருளும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குப்பைத்தொட்டி, கேபில் ஒயர், கார், பைக், பெயின்ட்டிங் போன்ற விஷயங்கள் நம் பார்வையை ஈர்க்கக்கூடியவை. காரின் எல்லா கோணங்களையும் படம் பிடிப்பது முக்கியம்.

விசாரணை

இணையத்தில் படத்தைப் பதிவேற்றிய பிறகு வரும் ஒவ்வொரு ஃபோன்கால்களுக்கும் நேரம் எடுத்து பதில் சொல்லுங்கள். எந்த அழைப்பையும் அலட்சியப்படுத்தாதீர்கள். காரைப் பார்க்கவேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான இடத்துக்கு விருப்பம் உள்ளவரைக் கூப்பிடலாம். நீங்கள் அவர்களின் இடத்துக்குச் செல்வதை தவிர்த்துவிடுங்கள். எப்போதும் பேரம் பேசத் தயாராக இருக்கவேண்டும். அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்பதற்காக அடாவடியாகப் பாதி விலையை வைக்கக்கூடாது.

விலை

உங்கள் காரின் சந்தை விலையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். சில கார்கள் சந்தை விலையை விட அதிக விலைக்குப் போகும். சில கார்களின் சந்தை விலை காரின் விலையைவிட பாதிக்கும் குறைவாகவே இருக்கும். அதனால், உங்கள் கார் எந்த ஆண்டு வாங்கியது, எந்தெந்த விஷயங்களில் காருக்குச் செலவு செய்யவேண்டும் மற்றும் சந்தை விலையை மூன்றையும் ஒப்பிட்டு உங்கள் காருக்கான குறைந்தபட்ச விலையை முதலில் முடிவுசெய்துவிடுங்கள். போன் செய்து விலை கேட்பவர்களை நேரில் வந்து காரைப் பார்த்துவிட்டு விலை பேசலாம் என்று கூப்பிடுங்கள். போனில் விலையைக் குறைத்தால் நேரில் வந்து பார்க்கும்போது மீண்டும் விலையைக் குறைத்துக் கேட்பார்கள்.

கார்களை எக்ஸ்சேஞ்சில் விற்பனை செய்யும்போது, காரின் விற்பனை விலையை விட குறைந்த விலைக்கே விற்கவேண்டியது வரும். இதற்குக் காரணம் யூஸ்டு கார் விற்பனை செய்பவர்கள் அதற்கான ஷோரூம் வைக்கவேண்டும். மெக்கானிக் வைத்து காரை ஒரு முறை சரிபார்க்கவேண்டும். உங்கள் கார் விற்பனையாகும் வரை ஆட்களை வைத்து அதைப் பராமரிக்கவேண்டும். நாள்கள் செல்லச் செல்ல காரின் விலை குறையும். இதைக் கருத்தில்கொண்டு காரின் மார்க்கெட் விலையை விட யூஸ்டு கார் ஷோரூம்கள் குறைவான விலையில்தான் உங்களிடம் கார் வாங்குவார்கள்.