Published:Updated:

``இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு உதவாது!" - விவசாயிகளின் குரல் #Budget2019

``இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு உதவாது!" - விவசாயிகளின் குரல் #Budget2019
``இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு உதவாது!" - விவசாயிகளின் குரல் #Budget2019

``எங்களுக்கு மானியம், இனாம் எதுவும் தேவையில்லை. விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுத்தாலே போதும். விவசாயிகளுக்கு உரிய விலை பொருள்களை தருவதாக மோடி அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை."

பிப்ரவரி 1-ம் தேதி, 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பூர்த்தி செய்ததா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. 

விவசாயத்திற்கான அறிவிப்பு!

- ரூபாய் 75,000 கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள். இது, 3 தவணைகளாக, 2 ஆயிரம் வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

- 22 விவசாயப் பொருள்களின் ஆதார விலை 50 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

- பால் உற்பத்தியை அதிகரிக்க, பசு பராமரிப்பை உறுதி செய்ய `காமதேனு ஆயோக்' எனும் சிறப்புத் திட்டம். 

- கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.

- 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையுடன், இதுவரை எட்டாத வளர்ச்சியை இந்தியா பெற்றிருக்கிறது.

இதுபற்றி விவசாயச் சங்கத் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டோம்.

த‌மி‌ழ்நாடு `க‌ள்' இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ந‌ல்லசா‌மி பேசும்போது, ``விவசாயிகள் கமிஷனை அமைக்கச் சொல்லி பலமுறை மத்திய

அரசிடம் வலியுறுத்தினோம். 2006-ம் ஆண்டு மத்திய அரசிடம் எம்.எஸ் சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையை அப்போதைய காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டுவிட்டது. 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி விவசாய கமிஷனை அமைப்பதாகச் சொன்னார். ஐந்தாண்டுகள் முடிவடையும் தருணம் வரை அமைக்கவில்லை. இரண்டு அரசுகளும் மாற்றி மாற்றி விவசாயிகளை வஞ்சித்துக்கொண்டே வருகின்றன. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை முறையாகச் செயல்படுத்த மறுப்பது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது எனப் பலமுறை விவசாயிகள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது அறிவித்திருக்கும் பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று சொல்வதை எப்படி ஏற்பது. எதை வைத்து இரட்டிப்பாக்கப் போகிறார்கள். 2 ஹெக்டேர் நிலத்துக்கு நிதி உதவி என்பதை எப்படி ஏற்க முடியும். 3 ஹெக்டேர் மானாவாரி நிலம் வைத்திருப்பவர் என்ன செய்வார்? 2 ஹெக்டேர் இறவை நிலம் வைத்திருப்பவர் வருமானத்துடன், நிதி உதவியும் சேர்த்து வாங்கிக் கொள்வார். முறைப்படுத்தாமல் எல்லா விதமான திட்டங்களையும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள்" என்றார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அறச்சலூர் செல்வம் பேசும்போது, ``தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த பட்ஜெட் வரைக்கும் விவசாயத்துக்கு இரண்டு மடங்கு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விவசாயி வருமானம் இரண்டு மடங்காகவில்லை. அப்போது ஒதுக்கப்பட்ட பணம் யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்று தெரியவில்லை. பணக்காரர்களின் வருமானம் 35 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விவசாயிகளுக்கு ஏமாற்றம் நடத்த இருக்கிறோம். அரசு அலுவலகத்தில் பியூன் வாங்கும் சம்பளத்தை விட 30 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியின் சம்பளம் குறைவுதான். இவர்கள் இதுவரை வளர்த்தது கார்ப்பரேட்டுகளைத்தான், விவசாயிகளை அல்ல. அடிப்படை ஆதார விலையைத்தான் விவசாயிகள் கேட்கிறார்கள். அதைக் கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இது நிச்சயமாக நல்லதல்ல. கடன் தொல்லை, வறட்சி ஆகிய காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகமாகிக்கொண்டே வருகிறது. விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு கொடுத்தாலும், முறையாகக் கொடுப்பதில்லை. மத்திய அரசு ஆட்சியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகளாகிறது. இதுவரையில் விவசாயிகளைப் பிரதமர் சந்தித்துக்கூட பேசவில்லை." என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, ``எங்களுக்கு மானியம், இனாம் எதுவும் தேவையில்லை. விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுத்தாலே போதும். விவசாயிகளுக்கு உரிய விலை பொருள்களை தருவதாக மோடி அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த மறுப்பது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது எனப் பலமுறை விவசாயிகள் இழிவாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் எப்படி இரட்டிப்பாகும். தற்கொலைகள்தான் இரட்டிப்பாகும். சொல்லப்போனால், இது எந்தக் காலமும் விவசாயிகளுக்கு உதவாத ஒரு அறிவிப்புதான்" என்றார்.

இடைக்கால பட்ஜெட்டிலாவது விவசாயிகளுக்கு நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என்பது அவர்களுடைய பேச்சில் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு