##~##
மிழர்களின் பாரம்பரியமான பொம்மலாட்டக் கலை அழிந்து வரும் நிலையில், இன்றைய காலத்துக்குத் தகுந்தாற்போல், நவீன பொம்மலாட் டத்தை நிகழ்த்தி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த கர்லின் மேரி! மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களே இவரு டைய பொம்மலாட்டக் களங்கள்!

''எனக்குக் குழந்தைகள்னா ரொம்பப் பிரியம். என் வீட்டுல எப்பவும் அக்கம்பக்கத்துக் குழந்தைகள் குறைஞ்சது பத்துப் பேராவது இருப்பாங்க. என்னோட கனவு, இந்தக் குழந்தைகளை எப்படியாவது ஒரு வகையில் விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு மகிழ்விக்கவேண்டும் என்பதுதான்.

நவீன பொம்மலாட்டம்!
நவீன பொம்மலாட்டம்!

ஒருமுறை கிராமத்துக்குப் போனப்ப அங்கே பொம்மலாட்ட நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த நிகழ்ச்சி என்னை ஒரு குழந்தையைப்போல சிரிச்சு, ரசிக்க வெச்சுது. அப்ப என் மனசுல உருவானதுதான் இந்த 'பப்பட் ஷோ’. என்னிடம் டோரா, டோனி, ஃபேமிலி டாய்ஸ், விலங்குகள், பறவைகள், டைனோசர், அனகோண்டா என நூற்றுக்கும் மேற்பட்ட பொம்மைகள் இருக்கு. அந்தப் பொம்மைகளைப் பொம்மலாட்டம்போலவே கலர் கலரான திரைப் பின்னணியில் கயிறு களைக் கட்டி ஆட்டுவிக்கிறேன். அப்படிச் செய்யும்போது குழந்தைகளுக்கான கதையையும் சொல்வேன். நானும் என் கணவர் எபியும் பொம்மைகளுக்கான குரலை இசையோடு சேர்த் துக் கொடுக்கிறோம்.

ஆரம்பத்தில் எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்து வீடுகளில் நான் ஆரம்பித்த இந்த ஷோ, இப்போ சேலத்துக் குழந்தைகளிடம் ரொம்பப் பிரபலம். நானே குழந்தைகளுக்கான புதுப் புதுக் கதைகளை எழுதி, அதற்கு ஏற்றபடி பொம்மைகளைவெச்சு ஷோ நடத்துறேன். இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் சேனல்கள் இந்த ஷோவை அவங்க டி.வி-யில் நடத்தணும்னு கேட்டுக்கிட்டாங்க.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிற குழந்தைகள், அப்படியே ஒன்றிப்போய் குதூகலிக்கிறாங்க. இந்தக் கலையின் மூலம் குழந்தைகளை நல்வழிபடுத்தணும்; அவங்களைச் சந்தோஷப் படுத்தணும்கிறதே என் நோக்கம். அதனால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியிலும், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் அரசுப் பள்ளிக்கூடங்கள், கோயில் நிகழ்ச்சிகளிலும்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். உள்ளூர் சேனலில் என்னோட நிகழ்ச்சி தினமும் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறதால, நிறையக் குழந்தைகள் என்னோட ரசிகர்கள் ஆகிட்டாங்க. நேரலை நிகழ்ச்சியில் டோரா ஒரு முறையாச்சும் சிரிச்சுடணும்; அப்படி சிரிக்க லைன்னா, 'ஏன் டோரா இன்னும் சிரிக்கலை?’னு குழந்தைகள்கிட்ட இருந்து போன் மேல போன் வரும்.

வசதியான பள்ளிகள், தனியார் அமைப்புகள் அழைக்கிற நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் காசு வாங்குறேன். ஏழைக் குழந்தைகளுக்கு நடத்தும்போது காசு வாங்குறது இல்லை. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சியை நடத்துறதுக்காக நான்தான் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்கணும். ஒவ்வொரு முறையும் என் நிகழ்ச்சியைப் பார்க்கிறப்போ குழந்தைகளிடம் இருந்து வருகிற அளவில்லாத ஆனந்தச் சிரிப்புதான் என் வாழ்க்கைக்கே அர்த்தம் சேர்க்குது!''- குழந்தைகள்போலவே புன்னகைக்கிறார் கர்லின்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு