Published:Updated:

"அம்மாவின் ரெசிபியை உலகத்துக்கே சொல்றோம்" Everyday cooking தமிழ் யூ டியூப் சேனலில் அசத்தும் சகோதரிகள்

"அம்மாவின் ரெசிபியை உலகத்துக்கே சொல்றோம்"  Everyday cooking தமிழ் யூ டியூப் சேனலில் அசத்தும் சகோதரிகள்
"அம்மாவின் ரெசிபியை உலகத்துக்கே சொல்றோம்" Everyday cooking தமிழ் யூ டியூப் சேனலில் அசத்தும் சகோதரிகள்

அம்மாவிடம் ரெசிப்பி கேட்பது, சமையல் புத்தகங்களைப் பார்த்து சமைப்பது என்பதையெல்லாம் கடந்து, யூ டியூப் வழியே சமையல் கற்றுக்கொள்ளும் தலைமுறை உருவாகிவிட்டது. சமையலுக்கான வீடியோக்கள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், அவை எல்லாமும் அதிகமானவர்களால் பார்க்கப்படுவதில்லை. சில வீடியோக்களே திரும்ப திரும்ப பார்க்க வைத்து, பலருக்கும் ஷேர் பண்ண வைக்கின்றன. அப்படியான ஒரு சமையல் யூ டியூப் சேனலை, பிரியா அன்புராஜன் மற்றும் அனு சதீஷ்குமார் இருவரும் சேர்ந்து நடத்தி வருகிறார்கள். இருவரும் சகோதரிகள் என்பது கூடுதல் சுவாரஸ்யம். இவர்களின்  " Everyday cooking தமிழ்" எனும் யூ டியூப் சேனலுக்கு, ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எப்படி இது சாத்தியமானது என்பதை அறிய பிரியா அன்புராஜனிடம் பேசினேன்.

"உங்களைப் பற்றி சின்ன இன்ட்ரோ கொடுங்க"

"எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். அனு என் தங்கச்சி. எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. நான் திருப்பதியில் இருக்கிறேன். ஒரு பையன், ஒரு பொண்ணு. என் தங்கச்சி சென்னையில் இருக்கிறாங்க. அவளுக்கு ஒரு பையன்"  

"சமையல் வீடியோ சேனல் ஆரம்பிக்கும் ஐடியா யாருடையது?"

" எங்க ரெண்டு பேருக்கும் அம்மா சொல்லிக்கொடுத்த ரெசிப்பி மட்டும்தான் தெரியும். அதில் சில விஷயங்களை மறந்துடுவோம் இல்லையா... அதனால, அம்மாவின் ரெசிப்பிகளை எங்களுக்குள்ள பரிமாறிக்கலாம்னுதான் ஆரம்பிச்சதுதான் வீடியோ ஐடியா. அதைப் பார்த்த சிலர் ரொம்ப நல்லா இருக்கேனு பாராட்டி, இன்னும் நல்லா பண்ண சொல்லி, சில ஐடியாஸ் கொடுத்தாங்க. வீடியோவுக்காக நான் சமைக்க, அனு வீடியோ எடுப்பாங்க. நான் எடிட்டிங், குரல் கொடுக்கிற வேலையைப் பார்த்துப்பேன். அம்மாவின் ரெசிப்பியை உலகத்துக்கே சொல்லிக்கொடுக்கிறோம்"

" சமையல் வீடியோவுக்கென ஆங்கிலம், தமிழ் என இரண்டு தளங்களில் இயங்குகிறீர்கள் போல?"

''ஆமாம்...இங்கிலீஷ் சேனலில் 370 க்கும் அதிகமான வீடியோக்களும், தமிழ் சேனலில் 320 க்கும் அதிகமான வீடியோக்களும் வெளியிட்டு இருக்கோம். சைவம், அசைவம், பேக்கரி உணவுகள், குழந்தைகளுக்கான ரெசிப்பி, ஆரோக்கியமான உணவு, இனிப்புப் பலகாரம் போன்ற அனைத்து உணவுகளுக்கும் வீடியோ வெளியிட்டு இருக்கோம். இதைத் தவிர சாதாரணமாகத் தயார் செய்யும் கூட்டு, குழம்பு, ரெஸ்டாரன்ட் ரெசிப்பி போன்ற வீடியோக்களையும் செய்திருக்கோம். இதுல இனிப்பு பலகாரங்கள், குழந்தைகளுக்கான ரெசிப்பிகள் நிறையப் பேர் பார்த்திருக்காங்க. ' Health benefits'-என வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தனியாக வீடியோ பதிவிடுறோம். பொதுவா வாரத்துக்கு ஐந்து வீடியோக்கள் வெளியிடுவோம். வெளியில் இருக்கிற மற்ற ஹோட்டல்களோட சேர்ந்து வீடியோஸ் பண்ணும் திட்டமும் இருக்கு. எங்க இரண்டு பேருக்கும் குழந்தைகள் இருப்பதால, அவங்க தூங்குற நேரத்துலதான் வீடியோக்கள் எடுப்போம்.  DSLR கேமரா உபயோகித்து, ஸ்டூடியோ மாதிரி வடிவமைத்து எல்லாவற்றையும் முறையாகச் செய்வோம்."

"உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது?"

"வீடியோவுக்கு வரும் கமெண்ட்ஸ்தான் பெரிய பாராட்டுகளா நினைக்கிறோம். தேர்ந்தெடுத்து செய்கிற ரெசிபிக்கள் சூப்பரா இருக்கு; வீடியோவில் பேசுகிற குரல் ரொம்ப நல்லா இருக்குனு சொல்லுவாங்க. வீடியோ மேக்கிங்கில் இருந்து, பப்ளிஷ் பண்ணுவதைக்கூட கமென்ட்ஸ்ல பாராட்டுவாங்க. அவற்றைப் படிக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்"

"வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?" 

"நான் கணிதத்தில் பி.ஹெச்.டி முடிச்சிருக்கேன். என்னோட தங்கச்சி எம்.இ பட்டதாரி. நான் நாலு வருஷம் உதவி பேராசிரியாக வேலை பார்த்தேன். ஆனா, கல்யாணமான பிறகு வேலைக்குப் போக முடியல. தங்கச்சிக்கும் அப்படித்தான். இந்தக் காலத்தில் எல்லாப் பெண்களும் படிக்கிறாங்க, வேலைக்குப் போறாங்க. அதுவே ஒரு குடும்பம், குழந்தைனு ஆகும்போது வேலையைத் தொடர்வதில் சிக்கலாகுது. வேலைக்குப் போக முடியலையே என்று வருத்தப்படுவதை விட ஏதாச்சும் ஒரு முயற்சியிலும் நம்முடைய முழுமையான கடின உழைப்பைத் தந்தாலே கண்டிப்பாக வெற்றிதான். அந்த வெற்றியும் உடனே கிடைச்சிடாது. முதன்முதல்ல நாங்க இங்கிலீஷ்ல வீடியோஸ் போடும்போது எங்ககிட்ட எந்தப் பணமும் கிடையாது. நாங்க வீடியோவை எடுத்து போட்டுகிட்டே இருப்போம். ஏதோ ஒரு நேரத்தில நம்ம ஜெயிப்போம் என்ற நம்பிக்கை மட்டும்தான் இருந்துச்சு. இப்ப தமிழ் சேனல் கொஞ்ச காலத்திலேயே நிறைய மக்களிடையே பிரபலமாயிருக்கிறது சந்தோஷமா இருக்கிறது. நம்ம உழைப்பு ஒருநாளும் வீணாகிடாது" என்கிறார் நம்பிக்கையுடன் பிரியா.