Published:Updated:

“ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா தூங்கிடுவேன்!” - செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த்
News
விஸ்வநாதன் ஆனந்த்

மனசே மனசே...

``எந்த ஒரு செயலையும் ஆர்வத்தோடு செய்யணும். ஆர்வமில்லாதபோது ஓய்வெடுக்கணும். ஓய்வுக்குப் பிறகு, திரும்பவும் தொடங்கணும்” -  சிரித்துக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த். 

“ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா தூங்கிடுவேன்!” - செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

`அறிவாளிகளுக்கான விளையாட்டு’ என்று சொல்லப்படும் செஸ் விளையாட்டில், விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன்! 14 வயதில் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம், இன்றும் தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளாக செஸ் விளையாட்டில் கோலோச்சிவரும் ஆனந்துக்கு மனஅழுத்தம் தருவது, `எதிர்பாராத தோல்விகள்’தானாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா தூங்கிடுவேன்!” - செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்



செஸ் விளையாட்டு வீரரின் ஓராண்டுக்கான திட்டத்தில்,  பல செஸ் தொடர்களில் விளையாடவேண்டிய கட்டாயமும் பயணச் சிரமும் ஏற்படுவது வழக்கம். ஆனால், ``இவையெல்லாம் மனஅழுத்தம் தருவதில்லை’’ என்கிறார் ஆனந்த். ``தோல்விதான் ஸ்ட்ரெஸ் உருவாவதற்கான முக்கியக் காரணம். விளையாட்டில் வெற்றி-தோல்வி சகஜம். ஆனால், `வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு விளையாடும் போட்டிகளில் ஏற்படும் எதிர்பாராத தோல்விகள், உங்கள் தூக்கத்தையே சிதைத்துவிடும்.

தோல்விக்குப் பிறகு ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்கிவிட்டுத்தான் மீண்டும் செஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க என் ஒரே வழி, தூக்கம். செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் போட்டி தொடங்குவதற்கு முன்னர் இருக்கும் டென்ஷனைவிட, முடிந்த பிறகு ஏற்படும் டென்ஷன் அதிகம். இதை `போஸ்ட் மேட்ச் டென்ஷன்’ என்பார்கள்.  ஒரு தோல்வி, உங்கள் மனதைப் பெரிதாக பாதிக்கும். `இந்தப் போட்டியில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது’, `அடுத்த போட்டியை வேறொரு கோணத்தில் அணுக வேண்டும்’, `கான்சென்ட்ரேஷனோடு விளையாட வேண்டும்’ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் மனதுக்குள் எழுந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து வெளிவருவதற்கு, போதுமான இடைவெளி வேண்டும். ஒரு போட்டி முடிந்தவுடனே, அடுத்த போட்டிக்கான பயிற்சியில் நான் ஈடுபடுவதில்லை. போட்டியை எதிர்கொள்வதற்கு முன்னர், நன்றாக ஓய்வெடுப்பேன்” என்கிறார் ஆனந்த்.

சென்னையைச் சேர்ந்த 12 வயதேயான பிரக்ஞானந்தா, `உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்’ என்ற சாதனையைப் படைத்தார். இந்த இளம் செஸ் மாஸ்டரைக் கொண்டாடித் தீர்ப்பதற்குள், சென்னையைச் சேர்ந்த மற்றொரு சுட்டி ஜீனியஸ் குகேஷ், பிரக்ஞானந்தாவின் சாதனையை முறியடித்தார். 12 வயதில், `கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வென்ற சுட்டீஸ்களுக்கு ஆனந்த் சொல்வது... ``கிராண்ட் மாஸ்டர் எனும் மிகப் பெரிய இலக்கை துரத்திச் சென்று, அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இப்போது ஓய்வெடுக்கவேண்டியது அவசியம். ஓய்வுக்குப் பிறகு மீண்டும் விளையாட்டுப் பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். செஸ் விளையாட்டின் நுட்பங்களை மேலும் மெருகேற்றிக்கொள்ள ஓய்வு தேவை. 

தோல்வியடைந்தால் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால், சோர்வடைவது நிச்சயம். எனவே போதுமான ஓய்வு தேவை. நான் யோகாசனம் செய்கிறேன். புத்தகம் படிக்கிறேன். ஜிம்முக்குச் செல்கிறேன். ஆர்வம் வரும்போது மட்டுமே செஸ்ஸில் கவனம் செலுத்துகிறேன்” என்கிறார் ஆனந்த் எதிராளியை செக்மேட் செய்துவிட்ட உறுதியான குரலில்.          

கார்த்திகா ராஜேந்திரன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்