Published:Updated:

"ஆலைகளின் சங்கொலியே என் ஊரின் கடிகாரம்!"

"ஆலைகளின் சங்கொலியே என் ஊரின் கடிகாரம்!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"ஆலைகளின் சங்கொலியே என் ஊரின் கடிகாரம்!"

ண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வலியுறுத்தும் சிந்தனையாளர் கோவை ஞானி. மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ்த் தேசியம், இயற்கைப் பாதுகாப்பு எனச் சித்தாந்தங்களை அடிப்படையாகக்கொண்டவர். நெருக்கடி நிலை அடக்குமுறைகள் இருந்த காலத்தில், இடதுசாரிக் கவிஞர்களால் நடத்தப்பட்ட 'வானம்பாடி’ இதழின் முக்கியத் தூணாக இருந்தவர். தற்போது 'தமிழ்நேயம்’ பத்திரிகை நடத்திவரும் கோவை ஞானி, தன்னுடைய சொந்த ஊரான கோவை மாவட்டம், சோமனூர் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்!

"ஆலைகளின் சங்கொலியே என் ஊரின் கடிகாரம்!"
##~##

''இந்தப் பூமியில் நான் நேசிக்கிற பிரதேசங்களில் சோமனூருக்கு முக்கிய இடம் உண்டு. மகிழ்ச்சியும் துயரமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை எனக்குக் கற்பித்த ஊர் அது. ஹோட்டல் எங்களின் குடும்பத் தொழில். எங்கள் ஹோட்டலை 'செட்டியார் கடை’ என்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிரசித்திபெற்ற கடை அது. பொழுது விடிவதில் இருந்து இரவு வரை இட்லி, சாப்பாடு, போண்டா, பஜ்ஜி என வியாபாரம் நடக்கும்.  

கருமத்தம்பட்டி அரசுப் பள்ளியில் படித்தேன். நண்பர்களுடன் சேர்ந்து வயல்வெளிக்கு இடையே குறுக்குப் பாதையில் ஓட்டமும் நடையுமாகப் பள்ளிக்குச் செல்வோம். கோவைக்கும் ஈரோடுக்கும் நடுவில் சோமனூரை ரயில் கடக்கும் நேரம், எங்கள் பொழுதுபோக்கின் உச்சம். தண்டவாளத்தில் ஐந்து பைசா, பத்துப் பைசா நாணயங்களைத் தினமும் வைத்து காத்து இருந்தாலும் அவை ஒருபோதும் தங்கமாக மாறியதே இல்லை!

சோமனூர் எங்கும் புன்செய் விவசாயம்தான். வெள்ளாமைக்குத் தண்ணீரை அள்ளிக் கொடுத்தது நொய்யலாறு. வருடத்தில் ஆறு மாதம் அதில் வெள்ளம் ஓடும். நொய்யலாற்று நீரைப் பெற்று ஏராளமான குளங்கள் தளும்பத் தளும்பக் காட்சி அளித்தது இன்னும் என் கண்களில் இருக்கிறது. அது வளமையின் உச்சம். இந்தக் குளங்களில்தான் நீச்சல் அடித்துப் பழகினோம். தூண்டிலில் மீன் பிடித்தோம்.

சோமனூர் ரயில் நிலையத்துக்கு அருகில் தீக்குச்சி ஆலை, அரிசி ஆலை, பஞ்சாலைகள் இருந்தன. அந்த ஆலைகளின் சங்கொலிதான் எங்கள் ஊரின் கடிகாரம். ஆலைகள் அதிகம் இருந்ததால் சோமனூரில் தொழிற்சங்கமும் அழுத்தமாக வேர் பதித்தது. தொழிற்சங்கங்கள் சார்பாகத் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். போராட்டங்களில் தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் ஊர் மக்களும் கலந்துகொள்வது இந்த ஊரின் சிறப்பு.

"ஆலைகளின் சங்கொலியே என் ஊரின் கடிகாரம்!"

சோமனூரில் திகிலான சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. இலச்சிபாளையக்காரர் என்கிற மனிதரைக் கண்டு சுற்றுவட்டாரக் கிராம மக்கள் நடுங்குவார்கள். அவருடைய பாதுகாவலர்கள், முரட்டு மீசையும் பாறை மாதிரியான உடம்பில் சட்டை போடாமல், கையில் கம்போடு ஊருக்குள் நடப்பார்கள். அன்று அவர்கள் வைத்ததுதான் ஊரில் சட்டம். இதன் பின்னணியில் ஊரில் அடிக்கடி கலவரங்கள் வெடித்தன. பல உயிர்களைக் குடித்தன. ஆதிக்க சாதியினரின் அடக்கு முறையில் பலர் கொல்லப்பட்டு நொய்யல் ஆற்றில் வீசப்பட்டார்கள். ஒருமுறை அப்படி ஒரு கலவரத்தில் கோழிகளை மூடும் கூடையில் என்னை மூடிவைத்து, என் பாட்டி என்னைக் காப்பாற்றி னார்!

அதேபோல்  இன்னொரு சோகம் 1947, 48-ம் ஆண்டுகளில் வந்த பிளேக் நோய். மளமளவென்று பரவிய அந்தக் கொள்ளை நோயால் ஊரில் பாதிப் பேர் இறந்துவிட்டார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இருக்காது. நோய்க்குப் பயந்து நாங்கள் உட்பட பலர் வெளியூருக்குச் சென்றுவிட்டோம். ஊரில் பிணங்களைத் தூக்கக்கூட ஆள் இல்லை. ஆனால், என் தாத்தா கருப்பஞ்செட்டியார் மட்டும் பிறந்த மண்ணைவிட்டு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

தினமும் இறந்துபோகும் ஆட்களைத் தன்னு டைய தோளில் தூக்கி சுடுகாட்டில் புதைத்து வந்தவர், சொற்ப நாட்களில் ஊருக்காகத் தன்னுடைய உயிரையும்விட்டார்!

படிப்பை முடித்த பின்பு ஆசிரியர் பணிக் காகக் கோவைக்கு நகர்ந்தேன். காலங்கள் யாருக் காகவும் காத்து இருப்பது இல்லை. இப்போது அந்த ஊருக்குள் சென்றால் விசைத்தறி சத்தம் தான் பெரிதாகக் கேட்கிறது. அந்தச் சத்தத்தையும் தாண்டி இளம்பிராயத்தில் வீதிகளில் ஆடிய 'கல்லா... மண்ணா?’ குரல் இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது!''

"ஆலைகளின் சங்கொலியே என் ஊரின் கடிகாரம்!"
"ஆலைகளின் சங்கொலியே என் ஊரின் கடிகாரம்!"

சந்திப்பு: எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய் செ.பாலநாக அபிஷேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு