Published:Updated:

வீரத்திற்கு வித்திட்ட புலவர் மாசாத்தியார்...! கேட்பாரின்றிக் கிடக்கும் நினைவிடம் !?

வீரத்திற்கு வித்திட்ட புலவர் மாசாத்தியார்...! கேட்பாரின்றிக் கிடக்கும் நினைவிடம் !?
வீரத்திற்கு வித்திட்ட புலவர் மாசாத்தியார்...! கேட்பாரின்றிக் கிடக்கும் நினைவிடம் !?

ங்க இலக்கியத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட பெண்பாற் புலவர்; அவரின் வீரம், ஆண்மையை மிஞ்சிய பெண்மை. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை என சங்க இலக்கியத்தில் எட்டு நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர். அவர்தான் மாசாத்தியார். சிவகங்கைச் சீமைக்குப் பெருமை சேர்த்த முதல் பெண்பாற்புலவரான இவரின் நினைவுச்சின்னம், தற்போது கேட்பாரற்று இருளில் முழ்க்க் கிடக்கிறது. மின் விளக்கு போடுவதற்குத் தமிழ்வளர்ச்சித் துறையோ, தமிழக அரசோ முன்வராமல் இருப்பது, தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கையில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒக்கூர் கிராமம், சங்க காலத்தில் 'ஒக்கலூர்' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. 'ஒக்கல்' என்ற சொல்லுக்கு உறவினர் அல்லது சுற்றத்தார் என்பது பொருள். இச்சொல் இதேபொருளில் 'புறநானூறு' போன்ற சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கிறது. சங்ககால ஒக்கூரில் வாழ்ந்த நகரத்தார்களை, அரியலூரில் வாழ்ந்த உறவினர்கள் வந்து கண்டு சென்றனர்.

யார் இந்த மாசாத்தியார்?

ஒக்கூரில் வாழ்ந்த வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் மாசாத்தியார். இவர் புறநானூற்றில் எழுதிய ‘கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே; மூதின் மகளிர் ஆதல் தகுமே; மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, யானை எறிந்து, களத்து ஒழிந்தன்ன...' என்ற பாடலைப் பாடியுள்ளார்.

'இப்படியுமா ஒரு பெண் இருப்பாள்? என்ன துணிச்சல் இவளுக்கு?' மூத்தக் குடிபிறந்த முதல்பெண் பெருமைக்குரியவள் என்ற பாராட்டுக்கு முற்றிலும் தகுதியானவள். முதல்நாள் நடந்த போரில் கணவர் மரணம், அடுத்தநாளும் போர் முரசு ஒலிக்கிறது. தன் ஒரே மகனை சின்னஞ்சிறு பாலகனை, அழைத்து அவனை, 'போர்க்களம் நோக்கிப் போ' என அனுப்பி வைத்தவர்தான் மாசாத்தியார். 

ஒக்கூர் கிராமத்தில் மாசாத்தியார் வழிவந்தவர் குடும்பம் இன்றைக்கும் 'புலவர் குடும்பம்' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸிடம் பேசினோம். “தஞ்சாவூர் அருகேயுள்ள ஒக்கூர் கிராமத்தில் பிறந்தவர் 'மாசாத்தியார்' என்று அங்குள்ள மக்கள் உரிமை கொண்டாடினார்கள். ஆனால், அவர் சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரத்தைக் காட்டிய பின்னரே ஒப்புக் கொண்டனர். “கெடுக சிந்தை” என்று தொடங்கும் பாடல் வரிகளைக் காட்டிய பிறகுதான், தஞ்சை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆக, மாசாத்தியாரை நாங்கள் மீட்டெடுத்திருக்கிறோம்" என்றார்..

தமிழாசிரியர் இளங்கோ, “சிவகங்கை மண்ணில் இருந்து அவதரித்த வீரம் செறிந்த பெண்பாற்புலவர் மாசாத்தியார். இவரின் பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் போர்வீரர்களுக்கு போர்க்குணத்தையும் வீரத்தையும் தூண்டி இருக்கிறது. அப்படிப்பட்டவரின் நினைவிடம் தற்போது கேட்பாரின்றிக் கிடக்கிறது. இது வேதனைக்குரியது. தமிழ்ப் புலவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்களின் எழுத்துக்கள் எதிர்கால மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் புரியும்வண்ணம் அந்த நினவிடத்தைச் சுற்றி கற்கள் பதிக்கப்பட வேண்டும். தமிழக அரசு மாசாத்தியாருக்கு மணிமண்டபம் அமைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழாய்வு மாணவர்கள் இங்கே வந்து செல்லும் விதமாகவும் வரலாற்றைப் பிரதிபலிக்கும் விதமாகவும் செயல்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் மாசாத்தியாரை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்திருப்பது தமிழ் மொழிக்கு இழுக்கு" என்றார்.

'மாசாத்தியார் வாட்ஸ் அப் குரூப்' வைத்திருக்கும் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா பேசும்பபோது, “1989-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி, மாசாத்தியாருக்குச் சிறப்பு செய்வதற்காக நிதி ஒதுக்கி நினைவுத் தூண் எழுப்ப அடிக்கல் நாட்டினார். பின்னர், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், இந்த நினைவுத்தூணை திறந்துவைத்தார். தற்போது அதை தமிழ் வளர்ச்சித் துறை பாதுகாத்து வருகிறது. தமிழக அரசு கட்டிய நினைவுச் சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் மாசாத்தியர் எழுதிய நூல்களில் இருந்து நாடகங்கள் நடத்தப்படவேண்டும்.

ஒக்கூர் வீரத்தின் விளைநிலம் என்பதற்கு  அடையாளம், மருது பாண்டியர்கள் ஆங்கிலேயப் படையை ஒக்கூரில் தாக்கியதுதான். சங்க காலத்தில் ஒக்கூர் முல்லை நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். ஆங்கிலேயப்படையின் தளபதி இன்சு-வின் நேரடிப்பார்வையில் ஒக்கூரில் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்து இந்த ஊரை அழித்தனர். பின்னர் நகரத்தார்களின் பெரும் முயற்சியால் மீண்டும் ஒக்கூர் உருவாக்கப்பட்டது" என்றார்.