Published:Updated:

``தூங்கவைக்கவும் பாடுதேன்...செத்தவுகளுக்கும் பாடுதேன்!” - `செப்புக்குரல்காரி’ ஒப்பாரி சீனியம்மா!

``தூங்கவைக்கவும் பாடுதேன்...செத்தவுகளுக்கும் பாடுதேன்!” - `செப்புக்குரல்காரி’ ஒப்பாரி சீனியம்மா!
``தூங்கவைக்கவும் பாடுதேன்...செத்தவுகளுக்கும் பாடுதேன்!” - `செப்புக்குரல்காரி’ ஒப்பாரி சீனியம்மா!

``தூங்க வைக்கறதுக்கும் பாடறேன். செத்தவுகளுக்கும் பாடுறேன். சந்தோசத்துக்கும் பாட்டுப்பாடறேன். மனுசங்க எப்பவும் கூட இருக்கமாட்டாக. பாடுபட்டா கஞ்சி கிடைக்கும். சாப்பாடு இல்லைனும் கவலைப்பட மாட்டேன். எனக்குப் பாட்டு போதும். அதுதான் குறி”

சென்னை லயோலா கல்லூரியின் வருடாந்திர வீதி விருது விழா,  பல அறியப்படாத, மறக்கப்பட்ட மக்கள் இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த வருடம் அப்படி விழா மேடை ஏறியவர் சீனியம்மா. 93 வயதுக்காரி. நாட்டுப்புறப் பாடகி.

விறுவிறு நடை, எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத தோரணை. குடும்பச் சூழல், குடும்பக் கட்டுப்பாடுகளால் பெரிதாக மேடைகள் எதுவும் ஏறியதில்லை. ஆனால், மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு சீனியம்மா நல்ல அறிமுகம். அத்தனை வீடுகளிலும் தாலாட்டுப் பாடலென்றாலும், ஒப்பாரி என்றாலும், கொண்டாட்டம் என்றாலும் அங்கு சீனியம்மாதான் முன்னிலையில் நிற்கிறார். இவரின் பாடல்கள்தான் ஒலிக்கின்றன. Thug life சொல்வழக்குகள் இல்லாத காலத்திலேயே தனக்கே உரித்தான பாணியில் வாழ்ந்தவர் என்பது அவரிடம் பேசுவதிலிருந்தே அறிந்துகொள்ள முடிகிறது. மண்வாசம் கலந்த பேச்சுக்கு இடையே தன் பச்சை சேர்ந்த செப்பின் வாசம் போன்றதொரு குரலில் வருடலாகப் பாடுகிறார். ”உங்களைப் பற்றிச் சொல்லுங்க ஆத்தா!” என்றதும், தண்டட்டிகளின் அடையாளத்தைத் தாங்கி இருக்கும் காதுகள் ஆடக் கழுத்தை அசைத்தபடி, பாடுவது போன்ற அபிநயத்துடனே பேச்சும் தொடங்குகிறது.

``தூங்கவைக்கவும் பாடுதேன்...செத்தவுகளுக்கும் பாடுதேன்!” - `செப்புக்குரல்காரி’ ஒப்பாரி சீனியம்மா!

”எனக்குச் சொந்த ஊரு மருத மாவட்டம் எளமனூரு. எனக்கு நெனவு தெரிஞ்சு சின்னப்புள்ளையிலேர்ந்தே பாடுதேன்.நான் பள்ளிக்கூடத்துல படிக்கல. ’ஆ’னாங்கற எழுத்து கூடத் தெரியாது. ரேடியோ பொட்டில கேட்டுத்தான் சினிமா பாட்ட கத்துக்கிட்டேன். நாட்டுப்புறப் பாட்டு நானே இட்டுக்கட்டி பாடுவேன். அம்மா, அப்பாவுக்குப் பாட்டுல ஆர்வமில்லை. கூடப் பொறந்த அண்ணமாருக, நாதஸ்வரம் ஊதுவாக, தவில் அடிச்சுப் பாடுவாக. அவுக பாடுறதக் கவனிப்பேன். நாமதான் இப்படி இருக்கோம், நம்ம தங்கச்சியும் இப்படி இருக்கக் கூடாதுன்னு என்ன அவுக கூடச் சேர்த்துக்க மாட்டாக. ஆனா, தூரத்துலேர்ந்து அவுக பாடுறத கவனிச்சுக் கத்துக்கிட்டேன்". 

”ம்ம்ம்” என்று கதைகேட்கும் போக்கில் நாமும் கேட்க அவரும் தொடருகிறார். ”சின்னப் புள்ளையா இருக்கும்போது படம் பார்க்குறதுல ஆர்வம். முக்கால் காசு கொடுத்தா மூணு ஃபிலிமு, இப்படி டப்பு டப்புனு பொட்டியில அடிப்பாங்க. அதுல படம் தெரியும். (பயாஸ்கோப் பார்ப்பதுபோல கண்களைச் சுற்றி வளையமாக விரலை வைத்துக் கொண்டு செய்து காண்பிக்கிறார்) ’சென்னப் பட்டணம் பாரு, பாரு பெரிய பட்டணம் பாரு பாருனு’ பாடி அழைச்சு, அதுல படம் காண்பிப்பாக. அதைப் பார்த்து சினிமாவுல பாட ஆசை. சினிமாவிலயும் பாடக் கூப்பிட்டாக. ஆனால், எங்க அப்பா, அம்மா விடமாட்டேன்னுட்டாங்க. வயசு வந்ததும் கல்யாணம் கட்டிக் கொடுத்தாக. அவரும் பாட்டுப் பாடுறவரு. சினிமாப் பாட்டெல்லாம் தெரியாது. ஆனா, குரலெடுத்துப் பாட ஆரம்பிச்சா சொக்கி நின்னுக் கேட்பேன். 'சினிமாவுல எல்லாம் பாடவேண்டாம் புள்ளனு' அவரும் சொல்லிட்டாரு. அதனால ஊருபக்கம் பாடுறதோட மட்டும் நிறுத்திக்கிட்டேன்” என்றவரிடம்.

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடுவீங்களா ஆத்தா?” என்று  கேட்டதும். ”ம்ம்ம்! நாட்டுப்புறப்பாட்டு ரெண்டு பெரும் ஜோடியா பாடுவோம்” என்று வெட்கச் சிரிப்புடன் ஒரு பாடலைப் பாடுகிறார். 

”கூடுனமே கூடுனமே 

கூட்டவேண்டிய காலைவேள

விட்டுப் பிரிஞ்சோமே

 வெக்க வந்து காலைவேள

 

தனனே தனனே தானே தன்னானே... 

தனனே தனனே தானே தன்னானே... ”  

”நான் தாலாட்டுப் பாட்டுப் பாடினா, அப்படியே உட்கார்ந்து கேட்பாரு. தாலாட்டுக் கேட்டு அப்படியே கண்ணு அசந்து தூங்கிருவாரு. அந்தத் தாலாட்ட அப்படியே என் புள்ளைகளுக்கு அவரு சொல்லுவாரு. பாட்டுதேன் எங்களச் சேர்த்துச்சு” என்றுவிட்டு, தாலாட்டுப் பாடல் ஒன்றைப் பாடுகிறார். 

”என் கண்ணே கத கேளு

நல்லதுக்குக் காரணமே கண்ணசரு

 

என் பொண்ணே கத கேளு

நல்ல பொய்மானே கண்ணசரு..

 

என்னுதே என்னுசுரே

பொறந்ததும் நா அறுத்தமுத்தே 

 

ஆராரோ ராராரோ

கண்ணே ராரிரோ ராராரோ

 

எம் மானா மதுரலிங்கம்

மருத எழும் சொக்கலிங்கம்

 

ஏ ராராரோ ராராரோ

கண்ணே ராரிராரோ ராராரோ”

தாலாட்டுப் பாடலும் காதலோடு இருக்கும் என்பதை சீனியம்மாவின் குரலில் உணரமுடிகிறது. நான்கு வருடம் முன்பு கணவர் இறந்துவிட, அதன் பிறகு பெயர் தெரிய வராத ஒரு சினிமாவில் பாட்டியம்மா, கதாபாத்திரத்தில் தலைகாட்டியிருக்கிறார். ஒன்றரை வருடங்களாகத் மதுரையைச் சேர்ந்த நாட்டுப்புறக் குழு ஒன்றுடன் மேடையேறிப் பாடுகிறார். மூன்று தலைமுறைகளைக் கண்டவருக்கு இத்தனை வருடங்கள் கழித்து மேடை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மேடையில் பாடுவது அங்கீகாரத்துக்கு என்றாலும் பொருளாதாரத்துக்காக வீடுகளில் ஒப்பாரி வைக்கச் செல்கிறார்.

``தூங்கவைக்கவும் பாடுதேன்...செத்தவுகளுக்கும் பாடுதேன்!” - `செப்புக்குரல்காரி’ ஒப்பாரி சீனியம்மா!

“நாலு நாள் முன்ன கூட நைட்டு வெளியூரு போயி ஒப்பாரி வைச்சுட்டு வந்தேன். 800 ரூபாய் கொடுத்தாங்க. ராவுல பத்து மணிக்கு ஆரம்பிச்சு காலையில மூணு மணி வரைக்கும் விடிய விடிய ஒப்பாரி வைப்போம்” 

”ஆனா முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டுல எப்படி ஆத்தா அழுது ஒப்பாரி வைக்கத் தோணும்?” என்றதும்,”வரும்..அப்படி அப்படி வந்துக்கிட்டே இருக்கும். ஒப்பாரி  வைக்க நாம இழந்தவங்கள நினைச்சு மனசுல தோணுறதைப் பாடணும். அழுவக் கூடாது. அழுதா பாட்டு வராது. அப்படியே ஒரு போக்குல பாட்டுப் படிக்கணும்.சம்பளத்துக்குப் போயிருக்கோம்ல நேர்மையா இருக்கணுமே. இதோ ஒண்ணு எடுத்துவிடறேன் கேளு..” என பாடத் தொடங்குகிறார். மற்ற பாடல்களைப் போல இல்லாமல் அது ஒருவித மரண ஓல உணர்வைத் தருகிறது.  

என்ன பெத்த அப்பா

என்ன பெத்த அம்மாவே... 

(அழும் குரலில் இயல்பாகச் சிணுங்குகிறார்)

 

முள்ளு முருங்க மரம்

முள்ளு முருங்க மரம்

என்னப் பெத்த பாவியா 

நீங்க முள்ளிலா நந்தவனம்ம்ம்ம்ம்..

 

ஒம்பட முள்ளு வெச்சுதான் காத்திருந்தா

முள்ளு வெச்சுதான் காத்திருந்தா

என்ன பெத்த பாவி சனமே 

நீங்க பலியாக! 

அகத்தி எழந்தபுள்ள! 

அகத்தி எழந்தபுள்ள!

என்னப்பெத்த அப்பாசாமி 

நா ஆளில்லா நந்தவனம்..

(அழும் குரலில் இயல்பாகச் சிணுங்குகிறார்)  

”இறந்தவங்களைப் பழிக்கக் கூடாது. அவங்க எழந்துட்டுப் போனதச் சொல்லி ‘அண்ணன்,அப்பன்,தாயி,புள்ளனு சேர்த்து.அப்படி போனியே இப்படி போனியேன்னு பாடுவோம்.சொத்து சுகம் இல்லாதவள இப்படி அநாதையா விட்டுப் போயிட்டியே’ன்னு  ஜாடை மாடையா ஒப்பாரி வைப்போம்” என்கிறார். 

``தூங்கவைக்கவும் பாடுதேன்...செத்தவுகளுக்கும் பாடுதேன்!” - `செப்புக்குரல்காரி’ ஒப்பாரி சீனியம்மா!

ஒப்பாரிக்குச் செல்லாத நேரங்களில் மதுரை ராஜ்மஹாலுக்குச் செல்லும் பாதையில் கீரை விற்கிறார் சீனியம்மா. அங்கே இவருக்கு சாலையோரக் கடைக்காரர்களின் ரசிகர் மன்றமும் இருக்கிறது. ”ஆத்தா ஒரு பாட்டு எடுத்துவிடு” என்று அவர்கள் கேட்டதும் சூப் பாய்ஸ்களுக்கான பிளாக் அண்ட் ஒயிட் பாடல் ஒன்றைப் பாடுகிறார். 

”ஜின் ஜினக்கா சின்னக்கிளி 

சிரிக்கும் பச்சக்கிளி

ஓடிவந்தா மேடையில ஆட்டமாட

ஆட வந்த மேடையில

பாட வந்த என்ன மட்டும் 

பாடவிட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட

 

நா சிரிக்கிறேன் சிரிக்கிறேன்

சிரிப்பு வர்ல!

நா அழுகிறேன் அழுகிறேன்

அழுக வர்லே...!”

 

'அத்தனை உணர்வுகளையும் ஒற்றைக் குரலில் வெளிப்படுத்தும் குரல்' என்று எஸ்.ஜானகியோடு மட்டுமே நாம் ஏன் நிறுத்திக் கொண்டு விட்டோம் என்கிற கேள்வி அனிச்சையாக எழுகிறது. சீனியம்மாவின் நாட்டுப்புறப்பாடல்களை அவருக்கு அடுத்து அவருடைய மகள் ஒருவரும் பாடுகிறார். ஆனால், அது அவருடைய மகளோடு மட்டுமே தங்கிவிட்டது. வழிவழியாக அவரது ஒப்பாரிகளையும் தாலாட்டுகளையும் பதிவு செய்து எடுத்துச் செல்ல எவரும் இல்லை. 

”தூங்க வைக்கறதுக்கும் பாடறேன்.செத்தவுகளுக்கும் பாடுறேன்.சந்தோசத்துக்கும் பாட்டுப்பாடறேன்.மனுசங்க எப்பவும்கூட இருக்கமாட்டாக. பாடுபட்டா கஞ்சி கிடைக்கும். சாப்பாடு இல்லைன்னும் கவலைப்பட மாட்டேன். எனக்குப் பாட்டு போதும்.அதுதான் குறி” என்கிறார் இந்தச் செப்புக்குரல்காரி.  வலிமையென்று எதைச் சொல்வீர்?

அடுத்த கட்டுரைக்கு