Published:Updated:

``தங்கம் வெல்வது மட்டும் அல்ல; சாதனை படைக்கவேண்டும்'' மதுரையில் நெல்லை வீராங்கனை சத்தியம் !

தங்கம் வெல்வது மட்டும் அல்ல; சாதனை படைக்க  வேண்டும் மதுரையில் நெல்லை வீராங்கனை சத்தியம்!

``தங்கம் வெல்வது மட்டும் அல்ல; சாதனை படைக்கவேண்டும்'' மதுரையில் நெல்லை வீராங்கனை சத்தியம் !
``தங்கம் வெல்வது மட்டும் அல்ல; சாதனை படைக்கவேண்டும்'' மதுரையில் நெல்லை வீராங்கனை சத்தியம் !

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சூரிய வெப்பம் ஏறிக்கொண்டிருந்தது. கூரான ஈட்டி பாய்ந்து சென்று மண்ணில் குத்தியது. கடும் எடை நிறைந்த இரும்பு குண்டு அதன் முழு வேகத்தில் தூக்கியெறியப்பட்டு `டொம்' விழ, நாம் வியந்துபோகிறோம். எவ்வளவு தூரத்தில் இரும்புக் குண்டு விழுந்திருக்கிறது என எட்டிப் பார்க்கிறார் அருண்மொழி. மாற்றுத்திறனாளியான அருண்மொழி வீசிய ஈட்டியும், இரும்புக் குண்டும்தான் அவை. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டிருந்த அருண்மொழியிடம்; `இது வேகம் போதாது; இன்னும் எனர்ஜியை வெளிப்படுத்துங்கள். அப்போதுதான் அதிக தூரத்திற்கு எறிய முடியும் என்று உற்சாகப்படுத்திக்கொண்டே பயிற்சியளிக்கிறார் ரஞ்சித். அடுத்த நிமிடமே பயிற்சிக்குத் தயாராகினார் அருண்மொழி. ஒருவழியாக, பயிற்சியாளரின் டார்கெட்டை முடித்த சந்தோஷத்தில் சிரிக்கும் அருண்மொழியிடம், `வணக்கம் மேடம்' என்றதும் நம் பக்கம் திரும்புகிறார்.

``அட, என்னை மேடம் எல்லாம் சொல்லாதீங்க தம்பி. அக்கான்னே கூப்பிடுங்க" எனச் சொல்லும் அருண்மொழிக்கு சொந்த ஊர் சங்கரன் கோவியில் அருகேயுள்ள மடத்துப்பட்டி கிராமம். அப்பா, அம்மா இருவருமே விவசாயக் கூலிவேலை பார்ப்பவர்கள். சில வருடங்களுக்கு முன் அப்பா இறந்துவிட, அம்மாவின் கூலி வேலைச் சம்பளம் மட்டுமே குடும்பத்தைக் கவனிக்கிறது." வியர்வையைத் துண்டால் துடைத்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்குகிறார் அருண்மொழி. 

``நாங்க மூணு பேரு. ஒரு அக்கா, ஒரு தங்கச்சி. நான் எம்.ஏ., பி.எட் முடிச்சிருக்கேன். பிறந்து எட்டு மாதமிருக்கையில இளம்பிள்ளை வாதம் (போலியோ) பாதிப்புக்கு உள்ளாயிட்டேன். உடம்புல பல உறுப்புகள்ல பாதிச்சு, கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு வந்துச்சு. ஆனா, இரண்டு கால்களை மட்டும் முடக்கிடுச்சு. அன்னிலிருந்து தவழ்ந்துதான் போக முடியும். எல்லா பிள்ளைகளைப் போலவும் விளையாட ஆசைப்பட்டும் முடியாமப் போச்சு.

கல்லூரியில படிச்சிட்டு இருந்தப்பதான் விளையாடறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதிலேருந்து, தொடர்ந்து பல்வேறு இடங்கள்ல நடந்த மாற்றுத்திறனாளிகள் போட்டிகள்ல கலந்துட்டுப் பரிசுகளை வாங்க ஆரம்பிச்சேன். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வீல் ரேஸ் போட்டியில் முதல் பரிசும், மதுரையில நடந்த மாநில அளவிலான போட்டிகள்ல வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள்ல முதல் பரிசு வாங்கினேன். இது எனக்கு சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துச்சு. பல்வேறு இடங்கள்ல கிடைச்ச பரிசும் பாராட்டும் என்னை நிரந்தரமா விளையாட்டுத் துறைக்குப் போக வேண்டும் என்கிற ஆசையைக் கொடுத்துச்சு. அதற்காக, கோச் ரஞ்சித் சாரின் உதவியதை எதிர்பார்த்து, மதுரைக்குப் பயிற்சி எடுப்பதற்காக வந்தேன். நெல்லையிலேயே பயிற்சி எடுத்துக்க வாய்ப்பு கிடைச்சுது. ஆனா, கோச் ரஞ்சித் சார், என்னைப் போல் மாற்றுத்திறனாளியாக உள்ளதால் அவர்கிட்ட பயிற்சி பெறுவது எளிமையாக இருக்கும் என நினைச்சேன். அவரும், என்னை ஒரு மாணவியாக நினைக்காமல் சொந்த சகோதரியாக நினைச்சு, பல உதவிகளைச் செய்துட்டு வருகிறார். எனக்குத் துணையாக என் சகோதரியும் வந்திருக்காங்க. நாங்க தங்கி இருக்கும் லேடிஸ் ஹாஸ்டல் வாடகையைப் பாதியாகக் குறைக்க அனுமதி வாங்கித் தந்திருக்கிறார். எங்களுடைய சாப்பாட்டுச் செலவுகளை, `தேனி ஆனந்தம் சில்க்ஸ்' ஏற்றுக்கொண்டது. அம்மா அனுப்புகிற குறைவான தொகைதான் எங்களுக்கு உதவிட்டு இருக்கு." என்கிறார் அருண்மொழி.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 45 கிலோ எடைப் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறார். குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார். 
``மாநில அளவில் முதல் இடங்கள்ல பிடிச்சிட்டு வருகிறேன். தொடர்ச்சியாப் பயிற்சி எடுத்துகிட்டு, 2020 நடக்கும் பாரா ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கம் வெல்வேன். தங்கம் வெல்வது மட்டுமல்ல; ஏற்கெனவே உள்ள ரெக்கார்டை பிரேக் பண்ணி, புதிய ரெக்கார்டு படைக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். என்னால் நிச்சயம் முடியும். இது எனக்கான வெற்றியாக நினைக்காமல் ஒட்டு மொத்த தமிழர்களின் வெற்றியாகவும், மாற்றுத்திறனாளிகளின் வெற்றியாகவும் கருதி, அதிகம் மெனக்கிட்டு உழைப்பேன். உலக சாதனை படைக்காமல் மதுரையிலிருந்து நெல்லைக்குப் போகப்போவதில்லை” எனச் சொல்லும் அருண்மொழியில் குரலில் அத்தனை நம்பிக்கை.

வீராங்கனை அருண் மொழிக்குப் பல்வேறு உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கிவரும் பயிற்சியாளர் ரஞ்சித், ``சகோதரி அருண் மொழி காலை 6 முதல் 11.30 மணி வரையும், மீண்டும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது போட்டிகள் நடத்தினால்கூட தேசிய அளவில் முதலிடம் பிடிக்கும் அளவுக்குத் திறமைகளை வளர்த்துள்ளார். தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டால் உலக சாதனை படைப்பது உறுதி என்பதை 100 விழுக்காடு என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பைக்கூட தற்போது தவிர்த்துவிட்டு வெறித்தனமான பயிற்சியை மேற்கொண்டுவருகிறார். பாரா ஒலிம்பிக்கில் மைல் கல்லை எட்டுவார். திறமைக்கும் உழைக்கவும் அவர் தயார். ஆனால், அவருக்குப் பெரும் சவாலாக இருப்பது பொருளாதார நெருக்கடிதான். அவருக்குப் போதுமான உதவிகள் கிடைத்தால் மட்டுமே அவரின் லட்சியத்தை எட்ட முடியும். ஊட்டச் சத்துமிக்க உணவுகள், போக்குவரத்து செலவு, ஹாஸ்டலுக்கான கட்டணம் ஆகியவற்றுக்கான பணம் கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும். அருண்மொழி வெற்றி பெற்ற பின், லட்சக்கணக்கில் பரிசுகளை வழங்குவதைக் காட்டிலும் அவர் பயிற்சிபெறும்போதே உதவினால் அவர் பொருளாதாரச் சிரமம் இல்லாமல் போட்டியில் கவனம் செலுத்துவார்” எனக் கேட்டுக்கொண்டார்.

சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு, பயிற்சிக்குத் தயாராகிறார் அருண்மொழி. மாற்றுத்திறனாளி என்பது தனது லட்சியத்துக்கு ஒருபோதும் தடையாகாது என்று அவர் நம்புகிறார். ஆயினும், பொருளாதாரச் சிக்கல்களிலிருந்துவிடுவிக்க உதவும் நெஞ்சங்கள் உதவுங்கள்.