Published:Updated:

காமமும் கற்று மற 5 - மதுப் பழக்கமும் தாம்பத்யமும்!

கூடற்கலை - 5

ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா… 

- கவியரசர் கண்ணதாசன் 

தாம்பத்யம் என்பது பெருங்கலை. காமத்தின் எல்லையை அடைய, முடிந்த அளவுக்கு முயற்சிதான் செய்ய முடியுமே தவிர, முழுதும் கரைகாண முடியாதென்பதே உண்மை. தாம்பத்யம் தொடர்பான சிக்கல்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை மட்டுமே தாம்பத்யக் குறைபாடுகள் அல்ல. அவற்றையும் தாண்டி பல சிக்கல்கள் இருக்கின்றன.   

சந்துரு, புதுப் பணக்காரர். ஒரு கூலித் தொழிலாளியின் மகன். முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்ற துடிப்புடன் இருந்தவர், சுயதொழில் தொடங்கி, குறைந்த வயதிலேயே வாழ்க்கையில் முன்னேறியவர். இடையே நடந்த மண வாழ்க்கையும், மனைவியுடனான தாம்பத்யமும் நன்றாகத்தான் இருந்தன. பணம் பெருகப் பெருக, தொழில் நிமித்தம் பல தொழிலதிபர்களுடன் அடிக்கடி மீட்டிங், பார்ட்டி என்று போனார்.

காமமும் கற்று மற 5 - மதுப் பழக்கமும் தாம்பத்யமும்!

தொழிலுக்காக ‘சோஷியல் டிரிங்க்கராக’ இருந்த சந்துருவை, அவரின் மனைவியும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் மது அருந்தியிருந்த சந்தர்ப்பங்களில் இருவரும் தாம்பத்யத்திலும் ஈடுபட்டார்கள். ஒருகட்டத்தில் மது அருந்தினால் மட்டுமே மனைவியைத் தொடுவது என்ற நிலைக்கு ஆளாகிவிட்டார் சந்துரு. கெஞ்சிப் பார்த்து, அதட்டிப் பார்த்து… எதுவும் முடியாமல் மனைவி ஒரு கட்டத்தில் ‘ஒத்துழைக்க’ மறுத்திருக்கிறார்.

அப்போது ஆரம்பித்த சண்டை, இருவரையும் என் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. மது குடித்ததும் உடலில் ஏற்படும் மாற்றங்களால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நடந்துகொள்வார்கள்.

சிலருக்கு அப்போதுதான் முன்னாள் காதலிகள், விலகிச் சென்ற நண்பர்கள், விட்டுப்போன சொந்தங்கள் ஞாபகத்துக்கு வருவார்கள். மது, உடலில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றம்தான் இதற்குக் காரணம். மது அருந்திவிட்டால், பெண்களைத் தேடுபவர்கள் இன்னொரு வகை. உண்மையில் மது அருந்திய பின்னர், உடலுறவு வைத்துக்கொள்வது தவறு.    

அடிக்கடி அல்லது அதிகமாக மது அருந்துவது, டெஸ்டோஸ்டீரான் சுரப்பைக் கணிசமாகக் குறைத்துவிடும். ஆண்மைத் தன்மைக்கும், ஆண்கள் தாம்பத்யத்தில் ஈடுபாட்டுடன் இருக்கவும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அவசியம். மது அருந்துவதால், பெண்களுக்குரிய ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது படிப்படியாக அதிகரிக்கும்போது ஆண்கள், பெண் தன்மையுடைய ஆணாக (Girly Man) மாற்றம் அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களால், முழுமையாக தாம்பத்யத்தில் ஈடுபட முடியாமல் போகும். பெண்களைத் திருப்திப்படுத்தவும் முடியாது.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

மது அருந்திவிட்டு உடலுறவுகொண்டால், அதிக நேரம் செயல்பட முடியும் எனப் பல ஆண்கள் நம்புகிறார்கள். மது அருந்தியிருக்கும்போது, மூளை துண்டப்பட்டு, `பீட்டா எண்டார்பின்’ (Beta-Endorphin) எனப்படும் ஒரு புரதம் வெளியாகிறது. வலி உணர்வை மறக்கடிக்கச் செய்யும் இந்த எண்டார்பின்கள், நரம்பு மண்டலத்தில் புரியும் வேதி வினையால், போதை உணர்வு உண்டாகிறது. இவை, டெஸ்டோஸ்டீரான் சுரப்பைக் கணிசமாகக் குறைத்துவிடுபவை. எனவேதான், மது அருந்திவிட்டு உடலுறவுகொள்ளும்போது, விந்து வெளியேறுவது தாமதப்படுகிறது. இதைத்தான், `அதிக நேரம் செயல்படுகிறோம்’ என்று மெச்சிக்கொள்கிறார்கள் விவரம் அறியாத ஆண்கள். அதிகமான மது, ஈஸ்ட்ரோஜென் எண்ணிக்கையை அதிகரிப்பதால், விரைவில் முதுமை ஏற்படும், உடல் பருமனும் கூடும். அவர்களால் தாம்பத்யத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எனவே, செக்ஸ் திறனைக் குறைக்கும் மதுவைக் கைவிடுவதே நல்லது.

- கற்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு