Published:Updated:

`அந்த பேர்தான்ங்க நான் சம்பாதிச்ச பெரிய சொத்து!'- 75 வயது `பானிப்பூரி' கந்தன் பூரிப்பு

`அந்த பேர்தான்ங்க நான் சம்பாதிச்ச பெரிய சொத்து!'- 75 வயது `பானிப்பூரி' கந்தன் பூரிப்பு
`அந்த பேர்தான்ங்க நான் சம்பாதிச்ச பெரிய சொத்து!'- 75 வயது `பானிப்பூரி' கந்தன் பூரிப்பு

``1960-ல  பானிபூரியோட விலை  நாலணாதான். அந்தக் காலத்தில், பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு ரூபாய் வாடகை தரணும். ஆட்டுக்கல்லில் ஆட்டிதான் மசாலா செய்வோம். இப்ப, மிக்சி வந்ததால பல வேலைகள் சுலபமாகிடுச்சு" என வாடிக்கையாளருக்கு பானிப்பூரியை கொடுத்தபடியே பேசினார் 75 வயது 'பானிப்பூரி' கந்தன். 

மாலை நேர சாட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் பானிப்பூரியை 1960-களிலேயே கோவை நகரில் பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தவர் கந்தன். 50 வருடங்களுக்கும் மேலாக பானிப்பூரி கடை நடத்துகிறார். தினமும் மாலை ஐந்து மணிக்கு கோவை டவுன் ஹால் அருகில் ரெடியாகிவிடுகிறது கந்தனின் கடை.   இலையில் பானிபூரியை பரிமாறுகிறார். அதை வாங்க  வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணமிருக்கிறார்கள். 


``நான் என்னோட சின்ன வயசுலேயே எட்டு ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போனேன்.  ``எத்தனை நாளைக்கு இப்படியே போயிட்டு இருப்ப. ஏதாவது, சிறுதொழில் ஒண்ணைக் கத்துக்கோ. பிற்காலத்தில், உனக்கு நிச்சயமா உபயோகமாக இருக்கும்"னு சிநேகிதன் ஒருத்தன் சொன்னான். வேலைக்குப் போற நேரம் போக, மீதி நேரம் அவன்  வீட்டுக்குப் போய் பானிபூரியையும்  மசாலாவையும் எப்படி செய்யணும்னு கத்துக்கிட்டேன். 


 

ஆறு வருஷம் வேலைக்குப் போனேன். வேலை செஞ்ச கடையில் போனஸாக  கிடைத்த பணத்தை வைத்து 65 ரூபாய்க்கு தள்ளுவண்டி வாங்கினேன். அந்தத் தள்ளுவண்டியில்தான் பானிபூரி கடையைத் தொடங்கினேன். தள்ளு வண்டியில் தொழில் செய்றவருக்கு பொண்ணு எப்படி கொடுக்கிறது'னு என் காதுபடவே, பலர் பேசுனாங்க. முப்பது வருசமா தள்ளு வண்டியிலேதான் பானிபூரி தொழில் செஞ்சேன். அதன் பிறகுதான், கடையை  வாடகைக்கு எடுத்து அதில் விற்பனையை தொடங்கினேன். கல்யாணமாகி 50 வருஷமாச்சு. 

சில மாசத்துக்கு முன்னாடி சென்னையில் தனியார் நிறுவனம் 54 வருடம் கடை நடத்துறதைப் பாராட்டி சிறப்பிச்சாங்க. என் குழந்தைங்களுக்கெல்லாம்  கல்யாணம் ஆகி பேரக்குழந்தைகளைப் பார்த்துவிட்டேன். வயசும் எழுபத்தைந்து ஆகிடுச்சு. 5 தடவை வெளிநாட்டுக்குப் போயிருக்ககேன். `பானிபூரி' கந்தன் என்றால் இந்த சுற்றுவட்டாரத்தில எல்லாருக்கும் தெரியும். அந்த பேர்தான்ங்க நான் சம்பாதிச்ச பெரிய சொத்து. இதைவிட வேறென்ன மன திருப்தி வேணும்"  என்றார் உற்சாகமாக