Published:Updated:

``அப்போ தொழில் செய்தேன்... இப்போ செய்றவங்களை மீட்கிறேன்!’’ - திருநங்கை அருணா

``அப்போ தொழில் செய்தேன்... இப்போ செய்றவங்களை மீட்கிறேன்!’’ - திருநங்கை அருணா
``அப்போ தொழில் செய்தேன்... இப்போ செய்றவங்களை மீட்கிறேன்!’’ - திருநங்கை அருணா

`திருநங்கைகள்’ பற்றிய புரிதல்கள் இன்றைய தலைமுறையினர் மத்தியில் ஓரளவுக்கு வந்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு எனத் தனக்கான பாதையை வகுத்து கடும் சிரமத்துக்கு மத்தியிலும் முன்னோக்கி நகர்கிறார்கள் திருநங்கைகள். கேலி, கிண்டல்கள் என அவர்களை நோக்கி எய்தப்படும் அனைத்து அம்புகளையும் பொருள்படுத்தாமல் தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஒருகாலத்தில் பாலியல் தொழிலாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அருணா தற்போது அதிலிருந்து மீண்டு திருநங்கைகள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

``நாமக்கல் மாவட்டம் அருணகிரி சுள்ளிப்பாளையம்தான் என்னுடைய சொந்த ஊர். அங்கதான் பள்ளிக்கூடம் படிச்சேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் உடம்புல உள்ள மாற்றத்தை உணர்ந்தேன். அப்போ அந்த மாற்றத்துக்கான காரணமோ, எங்களுக்கான பேரோ சுத்தமா தெரியலை. என் நடவடிக்கையைப் பார்த்துட்டு வீட்ல உள்ளவங்க என்ன திட்டிகிட்டே இருப்பாங்க. பள்ளிக்கூடத்துல டார்ச்சர் அதிகமா இருக்கும். பத்தாவது படிக்கும்போது நாமக்கல் மாவட்டத்துல முதலாவது மார்க் வாங்கி எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணேன். பாஸ் பண்ணி ஆறு மாசம் வரைக்கும்கூட மேற்படிப்பு படிக்க முடியலை. காரணம் சமூகத்தோட அறியாமை, கேலிகள்... வகுப்பு எடுக்குற வாத்தியாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சார். கெமிஸ்ட்ரி வாத்தியார் வகுப்புல `உலோகம் - அலோகம்’ன்னு பாடம் எடுத்தாரு. அப்போ உலோகத்துக்கு இணையா மொத்த ஆண் பசங்களையும் அலோகத்துக்கு இணையா என்னையும் குறிப்பிட்டு கிண்டல் பண்ணாரு. வகுப்புல எல்லா பசங்களும் சிரிச்சாங்க. அந்தச் சம்பவம் என் மனசுக்குள்ள வடுவா மாறிடுச்சு. அதுக்கப்புறம் வீட்டுல யார்கிட்டேயும் சொல்லாம 1987-ல் சென்னைக்கு ஓடி வந்துட்டேன்.

சென்னைக்கு வந்து இறங்கினதும் எங்கே போகுறதுன்னே தெரியலை. ஒவ்வொருவர்கிட்டேயும் விசாரிச்சு கடைசியா சென்ட்ரல் பக்கத்துல உள்ள கூவத்தையொட்டி எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அங்கே போய் எங்க ஆட்கள் கூட இணைந்தேன். அவங்க கூடச் சேர்ந்து கடை ஏறினேன். ஒரு வருஷத்துக்கு அப்புறமா அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டேன். அறுவை சிகிச்சை முடிஞ்சதும் கடை ஏறி வசூல் பண்றதும், பாலியல் தொழிலில் ஈடுபடுறதும்தான் என் வேலையா இருந்துச்சு. எனக்குப் பாலியல் தொழிலில் ஈடுபடுறதுல உடன்பாடு இல்லைன்னாலும் அந்தக் காலத்துல அதைத் தவிர, எங்க பொழப்பை நடத்த வேற வழியில்லம்மா!’’ என்றவர் சில நொடி மெளனத்துக்குப் பின் தொடர்ந்தார்.

``அந்தக் காலத்தில் திருநங்கைகளுக்கான உரிமைகள் ரொம்பவே குறைவு. பாலியல் ரீதியா பயங்கரமான துன்புறுத்தல்களை அனுபவிச்சிருக்கேன். வேறு வழி தெரியாம பாலியல் தொழிலில் ஈடுபடும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர்தான் என்கிற கணக்கெல்லாம் இல்லை. வலிக்கு மருந்து போடக்கூட நேரம் இருக்காது. குடியிருக்கிற இடத்தில் காரணமே இல்லாம அடிப்பாங்க. 1989-ல் நான் சென்னை சென்ட்ரல் பக்கத்துல உள்ள கல்லறையில் நாங்க திருநங்கைகள் ஒரு பத்து பேர் தங்கி இருந்தோம். இன்னொரு ஏரியாவில் இன்னொரு பத்து திருநங்கைகள் இருந்தாங்க. அவங்களைச் சந்திக்கிறதுக்காகப் போனோம். அவங்களைப் பார்த்துட்டு நான் மட்டும் தனியா எங்களுடைய இடத்துக்குத் திரும்பி வந்துட்டு இருந்தேன். அப்போ ராத்திரி 8 மணி இருக்கும். அந்தச் சமயத்துல ஐந்து, ஆறு பேர் என்னை பாலியல் தொழிலுக்குக் கூப்பிட்டாங்க. நான் வரலைன்னு சொன்னதும், என்னை அடிச்சு உதைச்சு தூக்கிப் போட்டுப் போயிட்டாங்க. ஒருவழியா எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்க என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தாங்க. அந்தச் சமயத்துல நடந்த சம்பவத்தால நான் காயப்பட்டதைவிட, என் மக்களுக்காக ஏதாச்சும் செய்யணுங்குற எண்ணம் மட்டும்தான் என் மனசுக்குள்ள இருந்துச்சு. இந்தத் தலைமுறையில் திருநங்கைகளுக்கு ஏதாவது பிரச்னைன்னா குறைஞ்சது 200 திருநங்கைகள் போராட்டம் நடத்துவோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொல்லுவோம். ஆனா, அப்போ இந்த வசதிகளெல்லம் கிடையாது. நான்பட்ட கஷ்டத்தோட வெளிப்பாடுதான் என் சமூகத்துக்கான வெளிச்சம்!

1998-ல் மகாராஷ்ட்ராவில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர களப்பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். தேவதாசி பெண்களுடைய உரிமைக்காக அவங்களுடைய மறுவாழ்வுக்காக வேலை பார்த்தேன். அப்படியே படிப்படியா பதவி உயர்வு பெற்று ஆலோசகரா அதே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். 2002-ல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தேன். இங்கே திருநங்கைகள் உரிமைக்காக ஓர் அமைப்பைத் தொடங்கி அதற்காக உழைக்க ஆரம்பிச்சேன். தமிழ்நாடு முழுக்க பாலியல் தொழில் செய்கிற பெண்கள், திருநங்கைகள் இவர்களுக்கான நோய் தடுப்பு விழிப்பு உணர்வு பணியையும், அவங்களுடைய உரிமைகள் மற்றும் மறுவாழ்வுக்காகவும் வேலை பார்த்தேன். 2012-க்குப் பிறகு தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரா இன்னைக்கு வரைக்கும் வேலை பார்த்துட்டு இருக்கேன். திருநங்கைகள் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிட்டு இருக்கேன்’’ எனப் புன்னகைக்கிறார் அருணா!