Published:Updated:

கம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது?

கம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது?
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது?

கார் வாங்குவது எப்படி? - 15 - தொடர்

புது கார் வாங்கி கராஜில் நிறுத்தியாகிவிட்டது. கடனை உடனை வாங்கி கார் வாங்கிய பிறகு, நம் கண் முன்னே விரியும் அடுத்த டாஸ்க், `எங்கே சர்வீஸ் விடலாம்? என்பதுதான். 

கம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது?

`என்ன கார் வாங்குவது?’ என்பதைவிட அநேகருக்குக் குழப்பியடிக்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். மூன்று இலவச சர்வீஸ்கள் வரைக்கும் கம்பெனியில் விட்ட பிறகு, அடுத்த சர்வீஸின்போதுதான் இந்த டைலமா இன்னும் மூளையைக் கைமா பண்ணும். இதில் இரண்டிலும் பல சாதக/பாதகங்களைக் கூறும் பலரைப் பார்த்திருக்கிறோம்.

``கம்பெனியிலேயே விடுறதுதான் பெஸ்ட். பிரைவேட்டில் எதுனா ஸ்பேர்ஸை மாத்திட்டு டூப்ளிகேட் போட்டாங்கன்னா நமக்கு என்ன தெரியப் போகுது’’ என்பவர்கள் ஒருபுறம். ``கம்பெனிக்கு போன் பண்ணி... அப்பாயின்ட்மென்ட் வாங்கி... காரைக் கொண்டுபோய்... சர்வீஸ் சென்டர்ல தேவுடு காத்து... அவங்க போடுற பில்லில் காரை டெலிவரி எடுத்துட்டு வர்றதுக்குள் இன்னொரு யூஸ்டு காரே வாங்கிடலாம்’’ என்பவர்கள் இன்னொருபுறம். இன்னும் சிலர், ``எங்க சார்... முழுசா சர்வீஸ் பண்றாங்க. சும்மா வாட்டர் வாஷ் மட்டும்தான் பண்றது மாதிரி இருக்கு!’’ என்று குறைப் பத்திரிக்கை வாசிப்பார்கள்.

உண்மையில் இரண்டிலுமே பல நன்மைகளும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கம்பெனியில் சர்வீஸ் விடாததால், காரை விற்கும்போது பாதிப்புக்குள்ளான வாடிக்கையாளர்களும் உண்டு. வாசகர் ஒருவர் செடான் வைத்திருந்தார். அவருக்கு கம்பெனி சர்வீஸ் மீது வெறுப்பு. ``பில்தான் சார் பெரிய பிரச்னை. சின்ன கம்ப்ளெயின்டுக்கே பேங்க் பேலன்ஸ் காலியாயிடுது. இதுவே பிரைவேட்ல ரொம்பப் பாதுகாப்பா உணர்றேன்’’ என்றார். அதற்குப் பிறகுதான் அவருக்குப் பிரச்னை உருவானது.

சென்னையில் வெள்ளம் வந்து அவரின் கார் மூழ்கியபோது, கம்பெனியில்தான் சர்வீஸ் விட்டாக வேண்டிய நிலை. அவரின் சர்வீஸ் ஹிஸ்டரி காலியாக இருந்ததைக் கண்ட சர்வீஸ் அதிகாரிகள், காரை ரெக்கவர் செய்ய பெரிய தொகையில் பில் போட்டதுடன், சர்வீஸில் பிளாக் மார்க் முத்திரை குத்தியதால், காரை நல்ல விலைக்கு விற்க முடியாமல் அவதிப்பட்டார் அவர். `இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று பல வாடிக்கையாளர்கள் புலம்பிய தருணம் அது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது?

ஓகே! அதற்காக கம்பெனி சர்வீஸில்தான் கட்டாயம் விடவேண்டுமா என்றால், அப்படியல்ல! ஆத்ரைஸ்டு சர்வீஸ் சென்டர்களில் காரை சர்வீஸ் விட்டால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த மாதம் பார்க்கலாம்.

கம்பெனி சர்வீஸ் என்றால், அதில் பல விதிமுறைகள் உண்டு. கேட் பாஸில் ஆரம்பித்து, டெலிவரி எடுக்கும் வரை எல்லாமே ஆதாரத்தோடுதான் நடக்கும். உங்கள் காரில் கம்ப்ளெய்ன்ட் எடுத்துக்கொண்டு, அந்த காரை உங்களுக்கு டெலிவரி கொடுப்பது வரை எல்லாவற்றுக்குமே அங்கே ஊழியர்களுக்கு முறைப்படியான பயிற்சி உண்டு. இது பற்றி ஒரு மிகப்பெரிய கார் நிறுவனத்தின் சர்வீஸ் உயர் அதிகாரியிடம் பேசினால், எக்கச்சக்க விஷயங்கள் சொன்னார்.

உதாரணத்துக்கு, I.T முடித்துவிட்டு ஒருவர் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் பணிக்கு வருகிறார் என்றால், அவர் அந்த கார் நிறுவனத்தின் பேனருக்குள் வரமாட்டார். ஒவ்வோர் ஊழியருக்கும் எம்ப்ளாயி ஐடி மாதிரி ஒரு நம்பர் உண்டு. இந்த நம்பர் வாங்குவது சாதாரண விஷயமல்ல. இதற்கு, அடிப்படைப் பரீட்சை உண்டு. அதன் பிறகு மொத்தம் இரண்டு பரீட்சைகள்... அசெஸ்மென்ட், பிராக்டிக்கல். இந்த மூன்றிலும் பாஸானால்தான் இந்த நம்பர் கிடைக்கும். அப்புறம்தான், அவர் அந்த கார் நிறுவனத்தின் டிரெய்னிங் டெக்னீஷியன் என்ற பதவியே கிடைக்கும்.

இதில் அவரின் ஆட்டிட்யூட் பற்றிய பரீட்சையும் உண்டு. அதாவது, ஒரு டூல் கீழே கிடக்கிறது என்று வைத்துக் கொண்டால், உங்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும்... வாடிக்கை யாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது மாதிரியான டெஸ்ட் அது. இதை `சைக்கோமேட்டிக் டெஸ்ட்’ என்பார்கள். அதிலும் கண்டிப்பாக பாஸாக வேண்டும். இதற்கே இப்படியென்றால், காரில் உள்ள டெக்னிக்கல் விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு எவ்வளவு கடுமையான பயிற்சிகள் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கம்பெனி சர்வீஸில் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. முதலில் வாடிக்கையாளர்கள், தங்கள் காரின் டேமேஜ் பற்றி பயப்படத் தேவையில்லை. உதாரணத்துக்கு, ஒரு வீல் ஹப்பைக் கழற்ற வேண்டும் என்றால், கம்பெனி சர்வீஸ் சென்டரில் அதற்கான ஸ்பெஷல் டூல் கிட் வைத்துத்தான் கழற்றுவார்கள். சில பிரைவேட் சென்டர்களில் சுத்தி, ஸ்பேனர் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவதை இப்போதும் பார்க்கலாம். எல்லாமே டைகனஸ்டிங் டூல் வைத்து, சாஃப்ட்வேர் பயன்படுத்தித்தான் ஒரு காரின் செக்-அப்பே நடக்கும். இந்த டூல், நேரடியாக அந்த கார் நிறுவனத்தின் ஒப்புதலோடு வரும் என்பதுதான் ஸ்பெஷல்.

கார் டெலிவரி தருவதற்கு முன்பு, அதை மீண்டும் இரண்டு பேர் சோதனை செய்த பிறகு, அதற்குப் பிறகு `ஃபைனல் இன்ஸ்பெக்டர்’ எனும் அதிகாரி டிக் அடித்த பிறகுதான் கார் உங்கள் கைக்கு வரும். இவர் சர்வீஸில் வேறு எந்த வேலையும் பார்க்க மாட்டார். இவரின் வேலையே முழுமையான க்ராஸ் செக் செய்வதுதான். அதற்குத்தான் அவருக்கு சம்பளமே!

`பிரைவேட் கம்பெ னியிலும் டைகனஸ்ட்டிங் டூல் இருக்கே? அவங்களும் க்ராஸ் செக் பண்ணு வாங்களே’ என்று நீங்கள் சொல்லலாம். இது கம்பெனியின் ஆத்ரைஸ்டு டூல் ஆக இருக்காது.  காரணம், இவை பல லட்சங்கள் இருக்கும் என்பதால், இதை சில பிரைவேட் சர்வீஸ் சென்டர்கள், வாங்காமல் தவிர்த்து விடுவார்கள்.

ஒரு காரின் டிஸ்க் பேடு இருக்கிறது. ஒவ்வொரு ஸ்பேருக்கும் ஒரு குறியீடு இருக்கும். அந்த ஸ்பேர் மாட்டினால், சத்தம் வருகிறது என்று இந்தியா முழுதும் 100 கார்களுக்கு கம்ப்ளெயின்ட் வருகிறது என வைத்துக் கொள்வோம். அதிகாரிகள் அதை கம்பெனிக்கு அனுப்பி, அவர்கள் அதை மாடிஃபைடு செய்து தருவார்கள். இந்த விஷயம், பிரைவேட் மெக்கானிக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதே பழைய குறியீட்டு எண் கொண்ட ஸ்டாக்கை வைத்து ஃபிட் செய்து தருவார்கள். அதே சத்தம் தொடரத்தான் செய்யும். இதுபோல் இன்ஜின், கியர்பாக்ஸ், ஸ்டீயரிங் எனப் பலவற்றுக்கு உள்ளே இப்படி நிறைய அப்டேட் விஷயங்கள் நடப்பது, பிரைவேட் மெக்கானிக்களுக்குத் தாமதமாகத் தான் தெரியவரும். இதுபோல், சில ரீ-கால் சம்பந்தமான விஷயங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்பதிலும் சிக்கல்தான்.

அப்படியென்றால், பிரைவேட் சர்வீஸை நம்பவே முடியாதா? ஆபத்தான சில நேரங்களில் பிரைவேட் மெக்கானிக்குகள்தான் ஆபத்பாந்தவனாக வந்து மனதில் இடம் பிடித்து விடுகிறார்களே! அதேநேரம், அவர்களை எல்லா நேரத்திலும் நம்பிவிட முடியுமா? பிரைவேட் சர்வீஸில் என்னென்ன நன்மைகள் உண்டு?

அடுத்த மாதம்...

- தொடரும்


 தமிழ்

கம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது?

கம்பெனி சர்வீஸ்... என்ன நன்மைகள்?

* நிறுவனத்தைப் பொறுத்து 3 முதல் 5 சர்வீஸ் வரை இலவச சர்வீஸ், கம்பெனியில்தான் சர்வீஸ் செய்தாக வேண்டும். எப்படிப் பார்த்தாலும், இந்த காலக்கட்டத்தில் பிரைவேட் பக்கம் போகவே முடியாது.

* ஜென்யூன் ஸ்பேர் பார்ட்ஸ்கள் பற்றிய கவலை வேண்டாம். அதுபோல், கார் டேமேஜ் பற்றிய கவலையும் தேவையில்லை.

* காரில் நடந்திருக்கும் அப்டேட் பற்றிய விஷயங்கள் - ஆத்ரைஸ்டு கம்பெனி சர்வீஸ் அதிகாரிகளுக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும்.

* ரீ-கால் சம்பந்தமான விஷயங்களில் உங்கள் கார் சிக்கினால், பிரைவேட் பக்கம் போகவே முடியாது.

* முறையான டயக்னஸ்டிக் டூல் கிட், கம்பெனி சர்வீஸிடம் மட்டும்தான் கிடைக்கும். பல தனியார் சர்வீஸில் இன்னும் மேனுவல் சிஸ்டம்தான்.

* கார் ரீ-சேல் பண்ணும்போது, கம்பெனியின் சர்வீஸ் ஹிஸ்டரிதான் ரொம்ப அவசியம்.