Published:Updated:

`மக்களிடம் தலைநிமிர்ந்து வாக்கு கேட்போம்!' - தமிழிசை

`மக்களிடம் தலைநிமிர்ந்து வாக்கு கேட்போம்!' - தமிழிசை
`மக்களிடம் தலைநிமிர்ந்து வாக்கு கேட்போம்!' - தமிழிசை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பிப்ரவரி 10 -ம் தேதி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தைப் பார்வையிடுவதற்காக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் இன்று திருப்பூர் வந்திருந்தனர். அத்துடன், மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "மதுரையைப் போலவே திருப்பூரில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தின்போதும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். வாக்குச்சாவடி அளவில் பலம்பொருந்திய கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கும் பா.ஜ.க-வை கிண்டலடிப்பவர்களுக்கு, எங்களது பணிகளால் பதிலடிகொடுப்போம். மதச்சார்பின்மையைப் பற்றிப் பேசும் தி.மு.க-வின் ஸ்டாலின், இந்துக்களின் திருமணச் சடங்கைப் பற்றி அவ்வளவு மோசமாக விமர்சித்திருக்கிறார். அதைப் பற்றிக் கேள்வி கேட்கும் நடுநிலையாளர்கள்மீது பா.ஜ.க சாயத்தைப் பூசுகிறார்.

ஆனால், உண்மையிலேயே பாரதிய ஜனதா கட்சிதான்  மதச்சார்பின்மை பேசும் கட்சி. 50 வருடங்களாக நாட்டின் ஏழைகளைப் பற்றியே சிந்திக்காத ராகுல் காந்தியின் கண்களுக்கு தற்போதுதான் ஏழைகள் தெரிகிறார்கள். ஆனால், ராகுல் சொல்வதைப்போன்று இல்லாமல், பா.ஜ.க அரசு மக்களிடம் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறது. எனவே, இந்த முறை தமிழக மக்களிடம் தலைநிமிர்ந்து வாக்கு கேட்கப்போகிறோம்'' என்று தெரிவித்தார்