Published:Updated:

நக்சல், பிளாஸ்டிக் சர்ஜரி, 250 உயிர்கள் தற்கொலை... சாரதா நிறுவன அதிபரின் பகீர் பின்னணி!

2013-ம் ஆண்டு சாரதா நிறுவனத்தின் உண்மை முகம் வெளிவரத் தொடங்கியது. பணத்தைக் கட்டியவர்கள் முதிர்வு தொகையைக் கேட்க, சாராதா நிறுவனம் சாக்குப்போக்குச் சொன்னது. மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நக்சல், பிளாஸ்டிக் சர்ஜரி, 250 உயிர்கள் தற்கொலை... சாரதா நிறுவன அதிபரின் பகீர் பின்னணி!
நக்சல், பிளாஸ்டிக் சர்ஜரி, 250 உயிர்கள் தற்கொலை... சாரதா நிறுவன அதிபரின் பகீர் பின்னணி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நல்ல ஓவியர். அவ்வப்போது தான் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி நடத்துவார்.  விற்பனையில் கிடைக்கும் பணத்தைப் போராட்டங்களில் உயிரிழந்த தங்கள் கட்சித் தொண்டர்களின் குடும்பங்களுக்கு வழங்குவார். ஒருமுறை மம்தா வரைந்த ஓவியம் ரூ.1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த ஓவியத்தை ஏலம் எடுத்ததாக சுதிப்தா சென் பெயர் அடிபட்டது. இவர்தான் சாரதா நிறுவனத்தின் உரிமையாளர். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த சுதிப்தா சென்தான் அந்த ஓவியத்தை ஏலம் எடுத்ததாக மம்தாவின் நெருங்கிய நண்பரும் தற்போது பாரதிய ஜனதாவில் சேர்ந்தவருமான முகுல்ராய் குற்றம் சாட்டினார். சுதிப்தா சென் ​​​​​​பின்னணியை ஆராய்ந்தால் அதிர்ச்சி! 

சங்கராத்தியா சென் என்பது இவரது இயற்பெயர். மேற்கு வங்கத்தில் நக்சல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ஒரு கட்டத்தில் நக்சல் இயக்கத்திலிருந்து வெளியேறிய சங்கராத்திய சென்னுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்தார். முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சுதிப்தா சென் எனப் பெயரை மாற்றிக்கொண்டார். முதலில் நிலத் தரகராகச் செயல்பட்டார். பின்னர், ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, 2005-ம் ஆண்டு `சாரதா சிட்பண்ட்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.

கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக்கொண்டார். அதிக வட்டி, குலுக்கல் முறையில் பெயர் விழுந்த அதிர்ஷ்டசாலிக்கு மாத சேமிப்புத் தொகை கட்டத் தேவையில்லை எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். சாரதா நிறுவனம் சார்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் களத்தில் இறக்கி கிராம மக்களை மூளைச்சலவை செய்தனர். அப்பாவிகள் வலையில் விழுந்தனர். 2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்தச் சமயத்தில் சாரதா சிட்பண்ட் அதீத வளர்ச்சி கண்டது. மம்தாவின் அமைச்சரவையில் இருந்தவர்கள் சாரதா நிறுவனத்தின் தூதுவர்களாகவே மாறினார்கள். 

குணால் கோஷ் என்ற அமைச்சர் சாரதா நிறுவனத்திடமிருந்து மாதச் சம்பளமாக லட்சக்கணக்கில் பணம் பெற்றார். மதன்மித்ரா என்ற அமைச்சர் சாரதா நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராகச் செயல்பட்டார். ஷ்யம்டா முகர்ஜி என்ற அமைச்சரும் சாரதா நிறுவனத்தில் செல்வாக்குடன் இருந்தார். இப்படித் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பலரும் சாரதா நிறுவனத்தின் கைப்பாவையாக மாறினார்கள். சாரதா நிறுவனத்தில் கிட்டத்தட்ட 16,000 ஊழியர்கள் பணி புரிந்தனர். சாரதாவில் பணி புரிந்தால் மத்திய அரசுப் பணி போலக் கருதினர். வெளியே பெருமையுடன் `சாராதா ஊழியர்’ என்று சொல்லிக் கொண்டனர்.

2013-ம் ஆண்டு சாரதா நிறுவனத்தின் உண்மை முகம் வெளிவரத் தொடங்கியது. பணத்தைக் கட்டியவர்கள் முதிர்வு தொகையைக் கேட்க, சாராதா நிறுவனம் சாக்குப்போக்குச் சொன்னது. மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தாங்கள் கட்டிய தொகையைத் திரும்ப தருமாறு பல போராட்டங்களை நடத்தினர். பணத்தைப் பறிகொடுத்தவர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டனர். சாரதா நிறுவனம் மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான அசாமிலும் கடை விரித்து மக்கள் பணத்தைச் சுருட்டியிருந்தது.

2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அசாம் மாநில டி.ஜி.பி-யாக சங்கர் பருவா என்பவர் இருந்தார். சாரதா நிதி மோசடியில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது. கடந்த 2017-ம் ஆண்டு கவுஹாத்தியில் உள்ள இவரின் வீட்டில் சி..பி.ஐ ரெய்டு நடத்தியது. இதனால் அவமானமடைந்த சங்கர் பருவா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மொத்தத்தில் சாரதா நிதி நிறுவனம் செய்த மோசடியால் 250-க்கும் மேற்பட்ட மக்கள், அதிகாரிகள் பலியானார்கள். சாரதா நிறுவனத்தின்  ஊழியர்களும் பலர் தற்கொலை செய்துகொண்டனர். 

சாரதா நிறுவனத்துக் கொள்ளையின் பின்னணியில் பெண் ஒருவரும் இருந்தார். அந்தப் பெண்ணின் பெயர் தெப்ஜனி முகர்ஜி. கடந்த 2008-ம் ஆண்டு சாரதா நிறுவனத்தில் ரிசப்சனிஸ்டாகப் பணியில் சேர்ந்தார். விரைவிலேயே  சாரதா நிறுவனத்தின் 100 நிறுவனங்களுக்கு இயக்குநராக தெப்ஜனி முகர்ஜி உயர்ந்தார். சுதிப்தா சென்னுக்கு அடுத்ததாகச் செக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் இவருக்கு மட்டுமே இருந்தது. சுதிப்தா சென்னுடன் தெப்ஜனி சேர்ந்து வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. 

தற்போது மம்தா பானர்ஜி போர்க்கோலம் பூண்டு நிற்பது இதற்காகத்தான்!