Published:Updated:

ஏ.டி.எம் இயந்திரத்தை ஆஃப் செய்து கோடி ரூபாய் சுருட்டிய கல்லூரி மாணவர்கள்!

SAKTHIVEL MURUGAN G

ஏ.டி.எம் மெஷின்கள் மிகுந்த பாதுகாப்புடன் வடிவமைத்திருந்தாலும் அதன் தொழில்நுட்பத்தைச் சரியாகத் தெரிந்துகொண்டு கொள்ளையடிப்பவர்கள் தொடர்ந்துகொண்டே இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஏ.டி.எம் இயந்திரத்தை ஆஃப் செய்து கோடி ரூபாய் சுருட்டிய கல்லூரி மாணவர்கள்!
ஏ.டி.எம் இயந்திரத்தை ஆஃப் செய்து கோடி ரூபாய் சுருட்டிய கல்லூரி மாணவர்கள்!

மும்பையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ஏராளமான வங்கிக் கணக்குகளைத் தொடங்கி 50-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் கார்டுகளைப் பெற்றுள்ளனர். அந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி, ஏ.டி.எம் மெஷினை பணம் காய்க்கும் மரமாக மாற்றி, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தைக் கையாடல் செய்துள்ளனர். இதைப் பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மும்பையில் கல்லூரியில் படிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப் கான் (19), ஹரியானாவைச் சேர்ந்த அஸ்மாத்கான் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த ஆண்டு இவர்கள் பணம் எடுக்கும்போது ஏ.டி.எம் மெஷின் ஆஃப் ஆகி இருக்கிறது. உடனே வங்கியின் உதவி தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுத்தனர். உதவி மையத்தில் இருப்பவர்கள், பணம் மீண்டும் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஏ.டி.எம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபோது ஏ.டி.எம் மெஷினில் இருந்து மீண்டும் பணம் வெளியே வந்திருக்கிறது. இதே டெக்னிக்கைப் பயன்படுத்தி ஏன் பணம் பார்க்கக் கூடாது என்று இருவருக்கும் `விநோதமான ஐடியா’ தோன்றியது. இருவரும் பல வங்கிகளின் கிளைகளில் வங்கிக் கணக்கைத் தொடங்கி, பல ஏ.டி.எம் கார்டுகளையும் பெற்றுள்ளனர். 

இரண்டு பேரும் ஏ.டி.எம் இயந்திரத்தை எப்படி ஆஃப் செய்வது எனக் கற்றுக்கொண்டனர். இவர்கள் இருவரும் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதைப்போலப் பணம் எடுப்பார்கள். பணம் வெளியே வரும்போது ஏ.டி.எம் இயந்திரத்தை ஆஃப் செய்துவிடுவார்கள். உடனே ஏ.டி.எம் மெஷினில் வெளியே வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கஸ்டமர் கேர் எண்ணுக்கும் போன்செய்து ஏ.டி.எம்மில் பணம் எடுத்தபோது பணம் வரவில்லை என்று புகார் தெரிவிப்பார்கள். உடனே, வாடிக்கையாளர் மையத்திலிருந்து ஆன்லைன் வழியாக, சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் இயங்குகிறதா என்று ஆய்வு செய்வார்கள். இயந்திரம் இயங்கவில்லை என்று புகாரை ஏற்றுக்கொண்டு வங்கிக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அதன்பின் அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் மீண்டும் சேர்ந்துவிடும். இதைப் போலவே, பலமுறை ஏ.டி.எம் மெஷினை ஆஃப் செய்து பணம் எடுத்துள்ளனர்.

தொடர்ந்து ஒரே மாதிரியான புகார்கள் வருவதைக் கவனித்த வங்கி மேலாளர்கள், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். கடந்த வாரத்தில் நாக்படா காவல் நிலையத்தின் அருகில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் மையத்தை அழைத்துப் பணம் வரவில்லை என்று ஆசிஃப் கான் தெரிவிக்க, உடனடியாக வாடிக்கையாளர் மையம் காவல்துறையை அலர்ட் செய்தது. துரிதமாகச் செயல்பட்ட  போலீஸார், ஆசிஃப் கான், அஸ்மத்கான் இருவரையும் கைது செய்தனர்.

நாக்படா காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் சந்தோஷ் பக்வீ, ``இரண்டு பேரும் கடந்த ஆண்டில் பல வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். அதில் குறைந்தபட்சத் தொகையை மட்டும் வைத்துள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளின் பெயரில் 50-க்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகளைப் பெற்றுள்ளனர். இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் ஏ.டி.எம்-மில் இருந்து முறைகேடாகப் பணத்தை எடுத்துள்ளனர். தொடர்ந்து இதேபோன்ற புகார்கள் வந்த வண்ணம் இருக்கும்போது, பணம் செலுத்தப்படும்போது ஏ.டி.எம் ஆஃப் ஆகி விடுவதைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், வாடிக்கையாளர் மையத்தின் ஆலோசனையின் பெயரில் வங்கி, வாடிக்கையாளருக்குப் பணம் செலுத்துவதும் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், ஏ.டி.எம்-மில் வைக்கப்பட்டிருந்த பணம் குறைவதையும் கவனித்துள்ளனர். அப்போதுதான், முறைகேடுகள் நடப்பதை அறிந்து வங்கிகள் சார்பில் காவல் துறையில் புகார் தெரிவித்தன. விசாரணையில் கல்லூரி மாணவர்கள் இருவருமே ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர்’’ என்றார். 

ஏ.டி.எம் மெஷின்கள் மிகுந்த பாதுகாப்புடன் வடிவமைத்திருந்தாலும் அதன் தொழில்நுட்பத்தைச் சரியாகத் தெரிந்துகொண்டு கொள்ளையடிப்பவர்கள் தொடர்ந்துகொண்டே இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.