Published:Updated:

`ட்ரம்ப் என்ற பெயரால் கேலிக்குள்ளாகும் சிறுவன்!'- அமெரிக்க அதிபர் நேரில் அழைத்து ஆறுதல் 

`ட்ரம்ப் என்ற பெயரால் கேலிக்குள்ளாகும் சிறுவன்!'- அமெரிக்க அதிபர் நேரில் அழைத்து ஆறுதல் 
`ட்ரம்ப் என்ற பெயரால் கேலிக்குள்ளாகும் சிறுவன்!'- அமெரிக்க அதிபர் நேரில் அழைத்து ஆறுதல் 

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாகக் கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்குபவர். குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கருத்துகளை அடிக்கடி தெரிவிப்பார். இதனால், அமெரிக்க மீடியாக்கள் ட்ரம்பை விமர்சித்தும் கேலி செய்தும் கார்ட்டூ்ன்களையும் வெளியிடுவது வழக்கம். அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளால் ட்ரம்ப் என்ற பெயரைக் கொண்ட சிறுவனும் பாதிக்கப்பட்டுள்ளான். 

டெலாவர் மாகாணத்தில் வில்மிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா ட்ரம்ப். பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் பெயருடன் ட்ரம்ப் ஒட்டிக்கொண்டிருப்பதால் பள்ளியில் சக நண்பர்கள் மட்டம் தட்டிப் பேசுகின்றனர். இதனால், ஜோஷ்வா மனம் நொந்து போனான். பள்ளி ஆவணங்களிலிருந்து ஜோஷ்வாவின் பெயருக்குப் பின்னால் இருந்த ட்ரம்ப் என்கிற பெயரை எடுக்கும் நிலை ஏற்பட்டது. ஜோஷ்வாவின் பரிதாப நிலை வெள்ளை மாளிகையை எட்டியது. சிறுவனை சந்தோஷப்படுத்த அதிபர் டொனால்டு ட்ரம்பும் மனைவி மெலனியாவும் முடிவெடுத்தனர். 

வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்குச் சிறுவனை நேரில் வருமாறு ட்ரம்பின் மனைவி மெலானியா அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வுக்கு 533 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஜோஷ்வா ட்ரம்பும் ஒருவன். சிறுவனிடம் அன்புடன் பேசிய மெலானியா அவனின் ஆசைகளை அறிந்து கொண்டார். வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``இந்தச் சிறுவன் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. சிறுவன் தன் பெயருக்காகப் பள்ளியில் அவமதிக்கப்படுவது தெரியவந்தது. அதனால், ஜோஷ்வாவை  சந்தோஷப்படுத்த வெள்ளை மாளிகைக்கு வரவழைத்துள்ளோம். ஜோஷ்வா ட்ரம்ப் அறிவியல் துறையில் சாதிக்க ஆசை கொண்டிருக்கிறான்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

`யார் மனமும் புண்படும் விதத்தில் நடத்தக் கூடாது. அனைவரையும் மதிக்க, நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்கிறார் மெலானியா. அமெரிக்காவில் ட்ரம்ப் என்ற பெயருடன் 4,788 பேர் வாழ்கின்றனர்.