Published:Updated:

காதல் தோல்வியால் மனமுடைந்த சீரியல் நடிகை தற்கொலை!

காதல் தோல்வியால் மனமுடைந்த சீரியல் நடிகை தற்கொலை!
காதல் தோல்வியால் மனமுடைந்த சீரியல் நடிகை தற்கொலை!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வரும் தெலுங்கு சீரியல் நடிகை நாக ஜான்சி இன்று காலை தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  தெலுங்கில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'பார்வதி பந்தம்’ என்ற புகழ்பெற்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான்சி நடித்துள்ளார். இதன் பிறகு இரண்டு மூன்று சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சீரியல்களில் நடிக்க போதிய வாய்ப்பு இல்லாததால் தனியாக தன் குடியிருப்பு பகுதியிலேயே பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். அப்போது சூர்யா என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டு இருவரும் கடந்த ஆறு மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் சூர்யாவை விட்டுப் பிரிந்துள்ளார் ஜான்சி. காதல் தோல்வியினால் அதிக மன வருத்தத்தில் இருந்த அவர், இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜான்சியின் பெற்றோர் மற்றும் சகோதரர் வடலி என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். ஜான்சி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தங்கள் வீட்டு கிரகப்பிரவேசத்துக்காக ஜான்சியை சொந்த ஊர் அழைத்துச் செல்ல அவரின் சகோதரர் துர்கா பிரசாத் இன்று காலை வந்துள்ளார். நீண்ட நேரமாகக் கதவை தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் பிரசாத். உள்ளே மின் விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டு தொங்கிய நிலையில் இருந்த ஜான்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசாத் உடனடியாக காவல்நிலையத்துக்குப் புகார் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், ஜான்சியின் உடலை மீட்டு அருகில் உள்ள காந்தி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து, ஜான்சி வீட்டில் நடந்த சோதனையில் கடிதம் போன்ற எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. அவரின் போனில் இருந்த மெசேஜ் மூலமே காதல் பிரச்னை எனக் கூறப்பட்டுள்ளது. நடிகை தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.