Published:Updated:

மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்!
மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்!

8 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 வருமானம்!மகசூல்

பிரீமியம் ஸ்டோரி

வெளிநாட்டு வேலை, கைநிறையச் சம்பளம் என இருந்தாலும்... இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆசையால், வேலையைத் துறந்துவிட்டு வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள் பலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், அனுராதா பாலாஜி. தான் பார்த்துவந்த ஆசிரியை வேலையை உதறிவிட்டு முழு நேர இயற்கை விவசாயியாக வலம் வந்து கொண்டிருக்கிறார், அனுராதா.

மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்!

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்- பெரியபாளையம் சாலையில் வடமதுரை என்ற இடத்திலிருந்து வலதுபுறம் திரும்பி உள்ளே சென்றால் வருகிறது, அனுராதாவின் பண்ணை. இந்தப் பகுதி எர்ணாகுப்பம் கிராமத்துக்கு உட்பட்டது. ஒரு காலைப் பொழுதில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனுராதாவைச் சந்தித்தோம்.

“என் கணவர் பாலாஜி, சவுதிஅரேபியா நாட்டில் இருக்கார். நானும் அங்க டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தேன். இந்த நிலத்தைப் பதினாலு வருஷத்துக்கு முன்னாடியே வாங்கிட்டோம்.

மொத்தம் எட்டு ஏக்கர் நிலம். நிலத்தைச் சுத்தி கம்பிவேலி அமைச்சு வேலியோரங்கள்ல தேக்கு மரங்களையும் தென்னை மரங்களையும் நடவு செஞ்சுருந்தோம். நாங்க ஆறு வருஷத்துக்கு முன்னாடி இந்தியா வந்தோம். நான் திரும்பச் சவுதி போகலை. அவர் மட்டும்தான் கிளம்பினார். நான் இங்க ஆறு மாசம் டீச்சர் வேலை பார்த்தேன். அப்புறம் அதை விட்டுட்டு இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். நான் விவசாயம் செய்யப்போறேனு சொன்னப்போ, என் கணவர், ‘லாபம் வரலைன்னாலும் பரவாயில்ல. நஷ்டம் வராமப் பாத்துக்கோ’னு சொன்னார். ஆரம்பக் கட்டத்துல நிலத்தைத் திருத்துற வேலைகளுக்கு நிறையப் பணம் செலவாச்சு. ஆனாலும் இயற்கை முறையில காய்கறிகளை விளைய வைக்கணுங்கிற ஆசையில அதையெல்லாம் பொருட் படுத்தலை.

‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிச்சு அது மூலமாகத்தான் இயற்கை இடுபொருள்களைத் தயாரிக்கிற முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். இந்தப் பண்ணையில ரெண்டு வகையான மண் இருக்கு. ஆரம்பத்திலேயே மணல் கலந்த களிமண் பகுதியை மரங்களுக்குனு ஒதுக்கிட்டேன். களிமண் பகுதியை நெல், காய்கறிகளுக்குனு ஒதுக்கிப் பயிர் செஞ்சுட்டுருக்கேன்.  

மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்!

அஞ்சு வருஷமா பீர்க்கன், புடலை, சுரைக்காய், கோவைக்காய்னு பந்தல் காய்கறிகளையும் சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ தர்பூசணி, வெண்டை, சுரைக்காய், வாழை, பெருநெல்லி, மிளகாய், கத்திரி, தக்காளி, அவரைனு சாகுபடி பண்ணிட்டுருக்கேன். மா, வாழை மரங்களுக்கிடையில ஊடுபயிரா எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா இருக்கு. இங்க கிடைக்கிற காய்கறிகள், பழங்களை எங்க வீட்டுல வெச்சு விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். சில இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்பிட்டுருக்கேன். நெல்லிக்காயை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்றேன்” என்ற அனுராதா பண்ணையைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“ஒரு கிணறும் ஒரு போர்வெல்லும் இருக்கு. கிடைக்கிற தண்ணியோட அளவு, மண்ணோட தன்மைக்கு ஏற்ற பயிர்களா தேர்வு செஞ்சு சாகுபடி செய்றேன். அதிகமா தண்ணீர் தேவைப்படுகிற பயிர்களைக் குறைந்த பரப்புலதான் பயிர் பண்ணுவேன். அப்போதான் கிடைக்கிற தண்ணியை எல்லாப் பயிர்களுக்கும் கொடுக்க முடியும். இப்போ 50 சென்ட்ல தர்பூசணி, ஒன்றரை ஏக்கர்ல பந்தல் காய்கறிகள் இருக்கு. தக்காளி, மிளகாய், கத்திரி, மஞ்சள் எல்லாம் சேர்த்து 1 ஏக்கர்ல இருக்கு. 25 சென்ட் பரப்புல செம்பருத்தி, அரை ஏக்கர்ல மாப்பிள்ளைச்சம்பா நெல், 1 ஏக்கர்ல பெருநெல்லி இருக்கு. மீதி இடங்கள்ல பரவலா 200 மா மரங்கள், 50 சப்போட்டா மரங்கள், 150 வாழை மரங்கள், 100 கொய்யா மரங்கள், 20 முள் சீத்தா மரங்கள்னு எட்டு ஏக்கரையும் பசுமையா வெச்சிருக்கேன். 23 சென்ட் பரப்புல ஒரு பண்ணைக்குட்டை அமைச்சு மழைநீரைச் சேமிச்சு வெச்சுக்கிறேன். அதுல, கட்லா, ரோகு, புல்கெண்டைனு மீன்களையும் வளர்த்துட்டுருக்கேன். பண்ணைக்குட்டை இருக்குறதால, கிணத்துல எப்பவும் தண்ணி வத்துறதில்லை.

15 பசு மாடுகளையும் கன்றுகளையும் வளர்த்துட்டுருக்கேன். மாட்டுக் கொட்டகைக்குப் பக்கத்திலேயே ஒரு சிமென்ட் தொட்டி கட்டி வெச்சுருக்கேன். அதுல சாணம் மூத்திரத்தைச் சேகரிச்சு வெச்சுப் பயன்படுத்திக்கிறேன். மாடுக கழிக்கிற தீவனம், இலைதழைகள், தென்னை மட்டைகள் எல்லாத்தையும் அந்தத் தொட்டியில போட்டு மட்க வெச்சு அதையும் உரமாகப் பயன்படுத்துறேன். அதுபோக, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், முருங்கைக் கரைசல்னு தயார் செஞ்சு பயன்படுத்துறேன். 

மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்!

ஒவ்வொரு விவசாயியும் தன்னோட விளைபொருள்களை ஒரு பகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான் நல்ல லாபம் எடுக்க முடியும். மதிப்புக்கூட்டல், நேரடி விற்பனை ரெண்டும்தான் என்னோட பலம்” என்ற அனுராதா, வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“வருஷத்துக்கு ஒரு தடவை பயிர் பண்ற தர்பூசணியில் ஒரு டன் மகசூல் கிடைக்குது. ஒரு கிலோ 15 ரூபாய்ங்கிற விலையில தர்பூசணி மூலமா வருஷத்துக்கு 15,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.வருஷத்துக்கு ரெண்டு தடவை நெல்லி பறிப்புக்கு வரும். மொத்தம் 4 டன் அளவுக்கு நெல்லி கிடைக்கும். அதுல மூன்றரை டன் நெல்லியிலிருந்து தேன் நெல்லி, நெல்லி பவுடர், நெல்லி ஜூஸ்னு தயார் பண்ணி விற்பனை செஞ்சுடுவேன். மீதி அரை டன் அளவைத்தான் அப்படியே விற்பனை செய்வேன். நெல்லி மூலமா வருஷத்துக்கு 1,00,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது.

அரை ஏக்கர் பரப்புல வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி மூலமா 20 மூட்டை (80 கிலோ) அளவுக்கு நெல் கிடைக்கும். அதை அரிசியா அரைச்சு கிலோ 55 ரூபாய்னு விற்பனை செய்றேன். வருஷத்துக்கு 800 கிலோ அரிசி விற்பனை மூலமா 44,000 ரூபாய் கிடைக்குது. 

மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்!

வருஷத்துக்கு ஆறு மாசம் மட்டும்தான் பந்தல் காய்கறிகளைச் சாகுபடி செய்வேன். அது மூலமா வருஷம் 50,000 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது.

பங்கனபள்ளி, இமாம்பசந்த், அல்போன்சா மாமரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 2 டன் அளவுக்குப் பழங்கள் கிடைக்கும். அது மூலமா, வருஷம் 80,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மத்த காய்கறிகள் பழங்கள்ல வீட்டுத்தேவைக்குப் போக மீதியைத்தான் விற்பனை செய்வேன். அது மூலமா வருஷத்துக்கு 20,000 ரூபாய் அளவுக்குக் கிடைக்குது. மொத்தமா எட்டு ஏக்கர்லயும் சேர்த்து வருஷத்துக்கு 3,00,000 ரூபாய் அளவுக்குக் குறையாம வருமானம் கிடைச்சுடும். அதுல 50,000 ரூபாய் வரை செலவாகிடும். அதுபோக வருஷம் 2,50,000 அளவுக்கு லாபம் நிக்கும். என் கணவர் சொன்னபடி நஷ்டம் இல்லாம விவசாயம் செஞ்சுக்கிட்டுருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, அனுராதா பாலாஜி, செல்போன்: 99405 42355

துரை.நாகராஜன் - படங்கள்: பெ.ராக்கேஷ்

முருங்கை இலை கரைசல்

மு
ருங்கை இலை கரைசல் குறித்துப் பேசிய அனுராதா, “முருங்கை இலை 5 கிலோ, புளி 1 கிலோ, அரைக்கிலோ உப்பு எல்லாத்தையும் 100 லிட்டர் தண்ணீர்ல கலந்து 10 நாள்கள் மூடி வெச்சா முருங்கை இலை கரைசல் தயாராகிடும். இதை அப்படியே பாசனத் தண்ணீர்ல கலந்து விட்டா நல்ல வளர்ச்சியூக்கியா செயல்படுது” என்றார்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு