Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

மூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் நாம் எந்த அளவிற்கு மூழ்கி இருக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் மந்தைபோன்ற சிந்தனையிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. சுயமாகச் சிந்திக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் பலரும், அவர்களுடைய முழுநேரத் தொழிலையும் தாண்டி, பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபாடுகொண்டவர்களாக இருந்தனர் என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. 

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

எதிரொலிக்கும் அறையில் சிக்கிய மனிதர்கள் நாம்

இன்றைய நகர வாழ்க்கையில் நாம் அனைவருமே சமூக வலைதளங்களின்மூலம் பெரிய அளவில் நம்மை இணைத்துக் கொண்டிருக்றோம். இந்த இணைப்பானது பெரிதாகப் பெரிதாக நாம் ஒரேமாதிரியான சிந்தனை மற்றும் செயலைக்கொண்டிருக்கும் கூட்டத்தில் அங்கத்தினராகி விடுகிறோம். ஒரு நல்ல முதலீட்டாளர் சுயமாகச் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே விதி. ஆனால், சமூக வலைதளங்களும் ஏனைய ஊடகங்களும் சுயமாக சிந்தித்துச் செயல்படுவதை கடினமான காரியமாக செய்துவிடுகின்றன.

இந்தச் சுழலிலிருந்து வெளியேறுவது எப்படி, சுய சிந்தனைக்குக் கிடைக்கும் பலன் மிக அதிகம் என்பதால், மந்தை சிந்தனை யிலிருந்து மாறி, சுயமாகச் சிந்திக்கும் பழக்கத்தை நாம் அதிகப் படுத்திக்கொள்வது எப்படி, இது நடைமுறையில் சாத்தியம்தானா?

அடிப்படை ஊக்கங்கள் முக்கியமானது

நம்மைச் சுற்றி வாழும் சாதனையாளர்களை நாம் கூர்ந்து கவனித்தால், இரண்டுவிதமான குணநலன்களை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருக்கிற சூழலில் (தொழிலோ/விளையாட்டோ என எதுவானாலும் சரி) மிகச் சிறந்த எல்லையை எட்ட முயற்சி செய்யும் நபர்கள் ஒருவகை. இருக்கிற சூழ்நிலையை மாற்றுவதற்கான அறைகூவல் களை விடுத்து, அதில் வெற்றிகண்டு சூழ்நிலையை மாற்றுவதற்கான செயல் பாட்டாளராக மாறி வெற்றி காண்பவர்கள்  இரண்டாவது வகை. வெற்றியாளர்களை இந்த இரண்டு வகைகளுக்குள்  பெரும்பாலும் பொருத்தி விடலாம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

உதாரணமாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி,  டெல்லியைச் சார்ந்த ஒரு வக்கீலின் (கிரிமினல் வழக்கு களை எடுத்து வாதாடுபவர்) மகன்.  மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று  விராட் கோலி ஆசைப்பட்டார். கிரிக்கெட்  தொடர்பான அத்தனை சட்டதிட்டங் களையும்  அறிந்துகொண்டு அதற்குண்டான பயிற்சிகளை எடுத்து எடை, டயட் மற்றும் பிட்னஸ் போன்றவற்றில் கண்ணும்கருத்துமாக இருந்ததன் காரணமாக, இன்றைக்கு அவர் பெரியதொரு கிரிக்கெட் வீரராக உருவெடுத்திருக்கிறார்.

மற்றொரு உதாரணம், புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய்.  நடைமுறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து, பின்தங்கியவர் களுக்கான உரிமைகளைப் பெற பாடுபடுகிறார் அருந்ததி ராய். இவர், தீவிர சமூக ஆர்வலரான அருணா ராயின் மகள். அருந்ததி ராயின் முழுமையான செயல்பாடே நடப்பில் இருப்பதை எதிர்த்துக் குரல் கொடுத்து, சமூக நீதியை நிலை நாட்டப் பாடுபடுவதுதான். ஏனென்றால், நடப்பில் இருக்கும் பல விஷயங்கள்  பின்தங்கியவர் களுக்குச் சாதகமானதாக இல்லை. அருந்ததி ராயின் புத்தகங்கள் அவருக்குப் புகழையும், பெயரையும் பெற்றுத் தந்தபோதிலும் அந்தப் புத்தகங்களை எழுத அவருக்குப் பெயரும், புகழும் பெறவேண்டும் என்ற எண்ணம் உந்துதலாக இல்லை. எழுதுவதன் மூலம் உலக நடப்பை மாற்ற நினைத்தார் அருந்ததி ராய்.

இருக்கின்ற சட்டதிட்டங் களுக்கு உகந்த மனிதராக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வெற்றிகண்டார் விராட். நடப்பில் இருக்கும் விஷயங்களை மாற்றுவதற்காகப் பாடுபட்டார் ராய்.

விராட், முதலாவது வகை குணநலனைக் கொண்டவ ராகவும், ராய் இரண்டாவது வகை குணநலன்களைக் கொண்டவராகவும் இருக்கிறார்கள் இல்லையா?  

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

கோலிக்கு நடப்பில் இருந்த சட்டங்கள் எதையும் மாற்ற வேண்டும் என்ற கடினமான சவால்கள் எதுவும் எடுக்க வில்லை. ஆனால், அருந்ததி ராயோ நடப்பின்மீது எதிர்ப்பைக் காட்டி புதிய நடைமுறைக்கான சிந்தனை யையும் திட்டங்களையும் கொண்டிருந்தார். நடப்பில் இருக்கிறவற்றை மாற்ற நினைப்பவர்களே புதிய படைப்புச் சிந்தனைகளை அதிக அளவில் கொண்டவர் களாக இருக்கின்றனர்.

நிதித் துறையைத் தாண்டிய ஆர்வம்

அமெரிக்கரான ஆடம் கிராண்ட் என்பவர் எழுதிய ‘ஒரிஜினல்ஸ்: ஹவ் நான்–கன்ஃபர்மிஸ்ட்ஸ் சேஞ்ச் தி வேர்ல்டு (2016)’ எனும் புத்தகத்தில்  நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிய ஆய்வு முடிவை அவர் சொல்லியிருக்கிறார்.

1901 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் நோபல் பரிசு பெற்றவர்களை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ததில் அவர்கள் கண்டறிந்தது என்னவென்றால், இசை, ஓவியம் வரைதல், கைவினைக்கலை, எழுத்து (புத்தகம், நாவல், கதை, கட்டுரை போன்றவை), நடிப்பு (அமெச்சூர் முதல் இசை அமைப்பாளர் வரை) போன்ற கலைகளில் பொழுதுபோக்கிற்கான ஈடுபாட்டைக் கொண்டிருந்தவர்கள் நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்பு முறையே 2, 7, 7.5, 12 மற்றும் 22 மடங்கு அதிகமாக இருந்தது என்பதைத்தான்.

இந்த விஷயம் முதலீட்டிற்கும் வெகுவாக பொருந்தும் என்றே நான் நம்புகிறேன்.  எந்தவொரு  துறை பற்றியும் தங்களுக்குக் குறைவாகத் தெரிந்தாலும், ஆர்வம் மிகுதியால் அதிக  செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் மனிதர்கள் தான் அசலான சிந்தனை கொண்டவர்களாக (ஒரிஜினல் திங்கர்ஸ்) இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

மும்பை, சிங்கப்பூர் மற்றும் லண்டன் போன்ற நிதி சார்ந்த தொழில்களில்  செழித்தோங்கியிருக்கும் நகரங்களில் நீங்கள் வளர்ந்திருந்து, அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை முறையை நீங்கள் கூர்ந்து பார்த்திருந்தால், உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். மக்கள் தாங்கள் சிக்கியிருக்கும் வாழ்க்கை முறையிலிருந்து வெளியேவந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பது தான் அந்த விஷயம். செக்கு மாட்டு வாழ்க்கை வாழும்போது வேறு எதையும் நாம் பொழுது போக்காகக்கூட விரும்பி செய்ய முடியாது. ஒருவர் மாற்று அபிலாஷைகளுடன் திகழ வேண்டும் என்றால், அவர் ஃபைனான்ஸ் மற்றும் நிதித்துறையைத் தாண்டி மாற்று விருப்பங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

நிறைய ஐடியாக்களைக் கொணர்தல்

திரைப்பட இயக்குநர் சத்தியஜித்ரே 36 படங்களை 35 வருட கேரியரில் இயக்கியுள்ளார். இதுதவிர, பெங்காலி மொழியில் இரண்டு டஜன் புத்தகங்களையும், இந்திய மற்றும் உலக சினிமா குறித்து அலசல்களாக மூன்று புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இத்தனை வேலைகளைச் செய்ததினால்தான் இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த சினிமாவிற்கான பாதையை அவரால் நிர்மாணிக்க முடிந்தது.

‘தி அபு ட்ரைலாஜி’ சினிமாக்கள் 1950-களில் உலக சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சத்தியஜித்ரேவின் படங்களும், புத்தகங்களும் அடுத்த தலைமுறையான ஷியாம் பெனகல் மற்றும் விஷால் பரத்வாஜ் போன்றவர்கள் தோன்ற உதவியாக இருந்தன. பாலிவுட் சொல்லும் பாதையில் மட்டுமே செல்வது மட்டுமே திரைப் படத் துறையில் வெற்றி பெறத் தேவையில்லாத ஒன்று என்பதை அது உணர்த்துவதாக இருந்தது.

தாமதம் குறித்து கவலை வேண்டாம்

நீங்கள் கையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தீர்கள் எனில்,  அந்த வேலையை எப்படியோதான் முடிக்க வாய்ப்புள்ளது. அந்த வேலையிலிருந்து சற்று  ஒதுங்கி, உங்கள் மூளையைக் கொஞ்சம் குறிக்கோள் இல்லாமல் அலையவிடுங்கள். உங்களுக்கென்றே தனிப்பட்டதொரு ஐடியா தோன்ற அதிக வாய்ப்புள்ளது.   

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

என்னுடன் பணிபுரிந்த ரிசர்ச் அனலிஸ்டுகளில் சிலர் மிகவும் தாமதமாகவே ஒரு ரிப்போர்ட்டைத் தயாரித்து அனுப்புவார்கள். கொடுக்கப்பட்ட கெடுவில் கொடுத்தால் ஊக்கத்தொகை,  தராவிட்டால் தண்டனை என்ற நடைமுறைகள் இருந்தாலுமே அவர்கள் அதையெல்லாம் தாண்டி அவர்களுக்கே உண்டான நிதானம் தவறாமலேயே வேலைபார்த்து ரிப்போர்ட்டைக் கொடுப்பார்கள். அருந்ததி ராயைப் போல, இந்த அனலிஸ்டுகள் மற்றவர்களிடமிருந்து பாராட்டைப் பெறவோ அல்லது லாபத்தைப் பெறவோ வேலை செய்பவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தயாரிக்கும் ரிப்போர்ட்டே அவர்களுக்கு ஒரு பரிசாகத் தெரியும்.

முதலீட்டில் பாதிப்பு

வெற்றிகரமான முதலீட்டாளர்களில் பெரும் பாலானோர் சமூக வலைதளங்களுக்கு வெளியே இருப்பவர்கள் ஆவர். அதேபோல், மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் பலரும் நாட்டின் நிதி மற்றும் பங்குச் சந்தைக்கான நகரத்திலிருந்து வெகுதூரம் தள்ளி வசிப்பவர் களாகவே இருப்பார்கள். மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் ஃபைனான்ஸ் துறையைத் தாண்டி, வேறு ஏதாவது ஒன்றில் நாட்டம் மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

வாரன் பஃபெட்டை எடுத்துக்கொண்டால், அவருடைய உச்சபட்ச முதலீட்டு வாழ்க்கையில் (1970-களில்) அவர் புலிட்சர் பரிசு பெறும் அளவிலான ஒரு பத்திரிகையை உருவாக்க உதவி செய்துகொண்டிருந்தார்.

ஜார்ஜ் சோரோஸை எடுத்துக்கொண்டால், கிழக்கு ஐரோப்பாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் போட்டி போட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடினார். 

இந்தியாவில் இருக்கும் பல வெற்றிகரமான முதலீட்டாளர்கள் ப்ரிட்ஜ் எனும் விளையாட்டில் தலைசிறந்தவர்களாக இருந்துவந்துள்ளனர்.

முதலீட்டுத் துறையானாலும் சரி, அதைத்தாண்டிய வேறு துறைகளானாலும் சரி – அசலான புத்தம் புதிய சிந்தனையாளர்கள் கூட்டம் சொல்லும் விஷயங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமலும் அவர்கள் ஈடுபட்டுள்ள துறையைத் தாண்டிய ஏதாவது ஒன்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்து வந்துள்ளனர் என்கிறது வரலாறு.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ளவை ஒரு முதலீட்டுக்கான ஆராய்ச்சிக் கட்டுரையோ அல்லது முதலீட்டு ஆலோசனையோ அல்ல. மார்செல்லஸ் நிறுவனம் இந்தக் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணத்தையோ அல்லது வியாபாரத்துக்கான அழைப்பையோ விடுக்கவில்லை.

மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் ஒரு செக்யூரிட்டிஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவினால் கட்டுப்படுத்தப்படும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகும்.

(முதலீடு தொடரும்)

செளரப் முகர்ஜி  நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)