Published:Updated:

ஒன்லி எருமைப்பால் டீ, விறகு அடுப்பு... கடலை எண்ணெய்... அசத்தும் செல்வியக்கா கடை! #GuessWhere

"ஸ்கூல் பசங்க காலையில சாயந்தரமானா, என் கடையைப் பிலுபிலுன்னு மொச்சுக்குவாங்க. என் கணவர் தனியா பால் வியாபாரம் பார்க்கிறார். இந்தப் பகுதியில் பலரது வீடுகள்ல எருமை மாடுகள் இன்னமும் இருக்கு. அதனால், பதனமா வியாபாரம் நடக்குது. வாழ்க்கை மீதிருந்த பயத்தை இந்தக் கடை வியாபாரம் போக்கி இருக்கு!"

ஒன்லி எருமைப்பால் டீ, விறகு அடுப்பு... கடலை எண்ணெய்... அசத்தும் செல்வியக்கா கடை! #GuessWhere
ஒன்லி எருமைப்பால் டீ, விறகு அடுப்பு... கடலை எண்ணெய்... அசத்தும் செல்வியக்கா கடை! #GuessWhere

`ஆளைப் பார்த்து எடைபோடக் கூடாது’ என்ற சொலவடை, மனிதர்களை எடைபோட மட்டும் பொருந்தாது போலிருக்கிறது. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தாண்டி பள்ளப்பட்டி பிரிவு சாலையில் உள்ளடங்கி இருக்கும் அந்த டீக்கடையை கடக்கும்போதெல்லாம்... எதுக்கு வயித்த வீணா கெடுத்துக்கணும்... எந்த எண்ணெயில செய்வாங்களோ' என்று பயந்ததுண்டு.

ஆனால், அதைத் தவறு என்று உணரவைத்தார் செல்வி அக்கா. அத்தனை அற்புதமான சுவை, தரம்... இத்தனை நாள் இங்க வந்து சாப்பிடாம போயிட்டோமே என்கிற குற்ற உணர்வை ஏற்படுத்திவிட்ட செல்வி அக்காவின் டீ/காபியைக் குடிக்க, சுற்றுவட்டார பதினெட்டுப்பட்டி கிராமங்களில் இருந்து படையெடுக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து உணர்ந்து கொண்டோம்.
 ஆவலிலும் நாக்கு ருசி பொறுக்காமலும் சில கேழ்வரகு வடை, மசால் வடைகளை எடுத்து அனிச்சையாக உண்டோம். ருசி நாக்கை இழுக்கக் கடமையே கண்ணாக இருந்த செல்வி அக்காவிடம் பேசினோம். டீ ஆற்றுவதிலே ஒரு லயத்தைக் காட்டியபடி ஆற்றிக்கொண்டிருந்தவர்,
 ``நான் இங்க வாக்கப்பட்டு வந்து அது ஆயிட்டு 25 வருஷம். என் கணவர் பால் வியாபாரம் பார்த்தார். எங்களுக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க பொறந்தாங்க. வேற வருமானம் இல்லை. பெண் பிள்ளைகளை வைச்சிருந்ததால, கூடுதல் வருமானத்துக்கு வேற தொழிலும் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். அப்படி என்ன பண்ணலாம்ன்னு யோசிப்பதான் பொட்டிக் கடை, டீக்கடை, பலகாரக்கடை வைக்கலாம்னு தோணுச்சு. ஏன்னா என்னோட பாட்டி, அம்மாகிட்ட இருந்த கைப்பக்குவம், என்கிட்டயும் அப்படியே இருந்தது. 20 வருஷத்துக்கு முன்னாடி கடையை ஆரம்பிச்சுட்டோம். என் பாட்டியோட சுவையான கேழ்வரகு வடையையே எங்க கடையோட முதல் பலகாரமா செய்ய ஆரம்பிச்சேன்.

அளவில்லாத ருசி, உடம்புக்கு நல்லது பண்ற தன்மைனு எல்லாம் கஸ்டமர்களுக்கும் கேழ்வரகு வடை பிடிச்சுபோச்சு. அப்புறமா எருமைமாட்டு டீ/காபி... பசுமாட்டு பாலைவிட, எருமைப் பாலில் டீ/காபி போட்டா, அதோட டேஸ்டே தனிதான். இது எங்க அம்மா சொன்னது. அதனால், எருமை மாட்டுப் பாலிலேயே டீ போட ஆரம்பிச்சோம். காத்தா 20 வருஷம் ஓடிட்டு. சுத்துப்பட்டு கிராமங்கள்ல, `செல்வி அக்கா கடை'ன்னு இப்போ ஒரே பேரா போய்ட்டு இருக்கு. 

நல்ல தரமான டீத்தூள், காபி தூளைதான் பயன்படுத்துவேன். அதேபோல், பால் வர லேட்டானகூட பசுமாட்டுப் பாலையோ, பாக்கெட் பாலையோ பயன்படுத்த மாட்டேன். எருமை மாட்டுப் பால் வந்ததும் அதுலதான் போடுவேன். அதுல போடுற டீயோ, காபியோ கெட்டியா, சுவைமிக்கதா இருக்கும். எங்க கடை கேழ்வரகு வடையைப் பத்திக் கேள்விபட்ட இந்தப் பக்கமா கார், வாகனங்கள்ல போற, வர்ற அசலூரு பார்ட்டிங்க, வண்டியை நிறுத்திட்டு வந்து நாலு வடை சாப்புட்டு, நாலு வடையைப் பொட்டலம் கட்டி வாங்கிட்டுதான் நவுருவாங்க. நான் போடுற மசால் வடையும், மெதுவடையும்கூட அதே டேஸ்டோடதான் இருக்கும். ருசி மாறக்கூடாது என்பதற்காக பலகாரங்களை மட்டும், விறகு அடுப்புலதான் இன்னைக்கும் சுடுறோம். அப்புறம், சுத்தமான கடலை எண்ணெய்தான் பயன்படுத்துறோம். ஒருமுறை பயன்படுத்துன எண்ணெயை மறுமுறை பயன்படுத்த மாட்டோம். மத்த கடைகளில் சுடுற பலகாரங்களில் 'சொலசொல'ன்னு எண்ணெய் வழியிறாப்புல, நான் சுடுற பலகாரங்கள்ல எண்ணெய் வழியாது. அது தனி டெக்னிக்.

இதனால், அதிகம் எண்ணெய் உடல்ல சேராத நன்மை கிடைக்கும். கேழ்வரகு மாவு, வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், மல்லித்தழை, கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, கடலை எண்ணெய்... இவ்வளவுதான் கேழ்வரகு வடைக்குத் தேவையான பொருள்கள். இதை வச்சுதான் வக்கனையா வடை சுடுறேன். அதோட கைமுறுக்கு, அடைன்னு செஞ்சு தனியா பெட்டிக்கடையில் வச்சு விற்பனை செய்றோம். அதுக்கும் நல்ல கிராக்கி இருக்கு. ஸ்கூல் பசங்க காலையில சாயந்தரமானா, என் கடையைப் பிலுபிலுன்னு மொச்சுக்குவாங்க. என் கணவர் தனியா பால் வியாபாரம் பார்க்கிறார். இந்தப் பகுதியில் பலரது வீடுகள்ல எருமை மாடுகள் இன்னமும் இருக்கு. அதனால், பதனமா வியாபாரம் நடக்குது. வாழ்க்கை மீதிருந்த பயத்தை இந்தக் கடை வியாபாரம் போக்கி இருக்கு’’ என்றார் பெருமிதமாக!

'செல்வி அக்கா கடை'யின் ரெகுலர் கஸ்டமரான சிவநாதன், 

``இந்தச் சுற்றவட்டார கிராமங்கள் அனைத்தும் விவசாயம் தொழில் நடக்கும் பகுதி. பக்கத்துலேயே அமராவதி ஆறு ஓடுது. அதனால், இங்க கடலை, நெல், கரும்பு, வாழைன்னு 365 நாளும் விவசாயிகள் வயல்கள்ல ஏதாச்சும் 'பொழப்புதழப்பு' பார்த்துகிட்டேதான் இருப்பாங்க. வெயில்ல வேர்வை சிந்தி உழைக்குற அவங்க உடம்புக்கு செல்வி அக்கா கடை பலகாரமும், ஒரு கிளாஸ் டீயும்தான் பெட்ரோலு. அதைச் சாப்புட்டு, நாள் முச்சூடும் களைப்பே இல்லாம வேலை பார்ப்பாங்க. அதேபோல், வயல்கள்ல வேலை பார்க்க வர்ற கூலி ஆளுங்களும், 'மதியத்துக்குப் பலகாரமும் டீயும் செல்வியக்கா கடையில் வாங்கிகிட்டு வர்றமாதிரி இருந்தா வேலைக்கு வாறோம்'ன்னு டிமாண்டு வச்சுட்டுதான் வேலைக்கு வரவே ஒப்புக்குவாங்க. இன்னும் சில ஆளுங்க, 'இன்னைக்கு செல்வி அக்கா டீக்கடை இருக்கா'ன்னு கேட்டு உறுதி பண்ணிகிட்டுதான் வயகாட்டு வேலைக்கே வருவாங்க. எனக்கும் 12 ஏக்கர் நிலமிருக்கு. என் வயலுக்கு வேலைக்கு வர்ற ஆளுங்களும், செல்வியக்கா கடை பலகாரத்தையும் டீயையும் வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. இந்த சால்ல மட்டும் செல்வி அக்கா கடையில் 11,000-க்கு டீ, வடை, பலகாரம் வாங்கி இருக்கேன். இந்தப் பகுதி உழைக்கும் விவசாய மக்களுக்கு கிடைக்கும் ஒரே இன்பம் இந்தக் கடை கேழ்வரகு வடையும் எருமைமாட்டு பால் டீயும்தான். அதுக்கு அப்படி ஒரு டேஸ்டுங்க’’ என்று முடித்தார் சப்புக் கொட்டியபடி!

இன்னும் இரண்டு கேழ்வரகு வடைகளை உள்ளே தள்ளிவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தோம். அந்த மார்க்கமாக நீங்களும் எப்போதாவது பயணிக்க நேர்ந்தால், மறவாமல் 'செல்வி அக்கா கடை'க்கு ஒரு எட்டு போய்ப் பாருங்களேன். சொக்கிப் போவீர்கள் சொக்கி!