Published:Updated:

சபரிமலைக்குப் பெண்கள் வரலாம்... தேவசம் போர்டு!- ஆதரவும் எதிர்ப்பும்

சபரிமலைக்குப் பெண்கள் வரலாம்... தேவசம் போர்டு!- ஆதரவும் எதிர்ப்பும்
சபரிமலைக்குப் பெண்கள் வரலாம்... தேவசம் போர்டு!- ஆதரவும் எதிர்ப்பும்

``தேவசம் போர்டிலும் மாற்றுச் சிந்தனையாளர்கள், பழைமைவாதிகள் என இரு சாராருமே இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் கூடிப் பேசி காலத்துக்குத் தகுந்த மாதிரியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானதுதான் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைவிட இது மேம்பட்ட விஷயம்.''

னைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நுழையும்போது எங்கள் நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறது தேவசம் போர்டு. இது குறித்து,  காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, நடிகையும் பெண்ணியவாதியுமான செளகார் ஜானகி, ஆக்டிவிஸ்ட் பிளஸ் நடிகை ரஞ்சனி, நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் கருத்துக் கேட்டோம். 

``பக்தர்களின் உணர்வுகளை மதிக்காத தேவசம் போர்டு எதற்கு?'' - ரஞ்சனி.

``தேவசம் போர்டு அப்படித்தான் சொல்லுவாங்க. ஏன்னா, அவங்க கேரளாவின் ஆளும் அரசாங்கத்தின் ஒரு பகுதிதானே. எல்லா வயசுப் பெண்களும் சபரிமலைக்கு வரக்கூடாதுன்னு ஜனங்க குரல் கொடுத்த பிறகுதான் அவங்க `சரி பெட்டிஷன் அனுப்பறோம்'னு சொன்னாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் தேவசம் போர்டு தேவையில்லை. ஏன்னா, ஆட்சியில் எந்தக் கட்சி இருக்குதோ அவங்க சொல்றதைதான் இந்த தேவசம் போர்டு ஃபாலோ பண்ணுது. ஐயப்பன் பக்தர்களோட உணர்வுகளுக்கு தேவசம் போர்டு மதிப்பு கொடுக்கிறதே இல்லை. சி.பி.எம். கட்சியோட ஐடியாலஜிப்படி கடவுளே கிடையாது; அவர்கள் கடவுளையும் நம்ப மாட்டார்கள். ஆனால், தேவசம் போர்டின்  பணி பக்தர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது. அதையே செய்யாத தேவசம் போர்டு ஏன் இருக்கணும்?'' 

``இது சபரிமலையுடன் நின்று விடக்கூடாது'' - லட்சுமி ராமகிருஷ்ணன்.

``இந்த சமத்துவம் சபரிமலையுடன் நின்று விடக்கூடாது. சுப்ரீம் கோர்ட் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் எல்லா மதங்களிலும், இந்த சமத்துவத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பெண்ணுரிமைக்கான முழுமை கிடைக்கும். நம்முடைய எந்த வாழ்க்கை முறையாக இருந்தாலும், அதாவது கடவுளை வணங்கினாலும் சரி, இயற்கையை வணங்கினாலும் சரி, எல்லா இடத்திலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். இது சபரிமலையுடன் நின்று விடக்கூடாது.'' 

``அந்த மாதிரி பெண்ணியவாதி நான் கிடையாது'' - செளகார் ஜானகி

``ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் பொதுவாக நான் கருத்துச் சொல்ல விரும்ப மாட்டேன்.  ஏனென்றால், சிலருடைய அல்லது பலருடைய நம்பிக்கை அது. கோயில்களில் இருக்கிற நம்பிக்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் எதிராகப் போராடுவதற்குப்பதில், கல்வியில், வேலை வாய்ப்பில், சம்பளத்தில், குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் சரிசமமான உரிமையைக் கேட்டுப் போராடலாம். சபரிமலையில் இருக்கிற ஒரு நம்பிக்கைக்கு எதிராக சண்டை போட்டு, போராடி உரிமையைப் பெற வேண்டிய அவசியமில்லையே. நானும் தெய்வ நம்பிக்கை உள்ளவள்தான். துக்கமும் பக்தியும் மனதைப் பொறுத்தது. வீட்டிலிருந்தபடியேகூட கடவுளை வணங்க முடியும் என்று நினைப்பவள் நான். வரக்கூடாது என்று சொல்கிற இடத்தில் வருவேன் என்று கடவுளிடம் அடம்பிடிக்கக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. நானும் பெண்ணியவாதிதான். அதற்காக பெண்கள் போராடுகிற எல்லா விஷயங்களையும் சரி என்று சொல்ல மாட்டேன். அந்த மாதிரியான பெண்ணியவாதி நான் கிடையாதும்மா... தவிர, சம உரிமைக் கேட்டுப் போராடுவதற்குப் பெண்களுக்கு எத்தனையோ பிரச்னைகள் இருக்க, கடவுளை ஏன் கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும். அவர் பாவம் நிம்மதியாக இருக்கட்டுமே...''

``அது பெண்களுக்கு எதிரான தடையே கிடையாது'' - ஜோதிமணி. 

``எல்லா அமைப்புகளுக்குள்ளுமே சில மாற்றுச் சிந்தனையுள்ளவர்கள், பழைமைவாதிகள் எல்லோருமே இருப்பார்கள். பழைமைவாதிகள் என்றால், கெட்டவர்கள் என்று அர்த்தமில்லை. காலம்காலமாக இருக்கிற சில கருத்துகளைப் பின்பற்றுபவர்களாக அவர்கள் இருப்பார்கள். இதே போல தேவசம் போர்டிலும் மாற்றுச் சிந்தனையாளர்கள், பழைமைவாதிகள் என இரு சாராருமே இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் கூடிப் பேசி காலத்துக்குத் தகுந்த மாதிரியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானதுதான் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைவிட இது மேம்பட்ட விஷயம்.

சபரிமலையில் இதற்கு முன்னால் பெண்கள் போனதே இல்லை என்று சொல்ல முடியாது. நான் யோசித்த வரையில், தனித்து இருக்கிற கோயில்களில், வனாந்தரங்கள் சூழ இருக்கிற கோயில்களில்தான் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல, சபரிமலைக்கு மாதவிடாய் இருக்கிற பெண்கள் வரக்கூடாது என்று சொன்னதற்குப் பின்னால் `அந்தக் கோயில் காட்டுக்குள் இருக்கிறது, அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது; அதனால் வெளிச்சம் கிடையாது, விலங்குகள் நடமாட்டம், பெண்களுடன் வருகிற குழந்தைகளின் பாதுகாப்பு' என்று பல விஷயங்களையும் யோசித்து அப்படிச் சொல்லியிருக்கலாம். அந்த வகையில் பார்த்தாலும் இது பெண்களுக்கு எதிரான தடை கிடையாது. இன்றைக்குப் பாதுகாப்பு வசதிகள் வந்து விட்ட பிறகும் என்றைக்கோ சொன்ன ஒரு விதியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருக்கக் கூடாது.''

அடுத்த கட்டுரைக்கு