Published:Updated:

சொந்த பணத்தில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்த மாற்றுத்திறனாளி ஆசிரியை! #CelebrateGovtSchool

சொந்த பணத்தில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்த மாற்றுத்திறனாளி ஆசிரியை! #CelebrateGovtSchool
சொந்த பணத்தில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்த மாற்றுத்திறனாளி ஆசிரியை! #CelebrateGovtSchool

முன்பு எப்போதையும் விட, குழந்தைகளைத் தொழில்நுட்பப் பொருள்கள் ஏராளம் சூழ்ந்திருக்கும் காலம் இது. பெற்றோர்கள் எவ்வளவு முயன்றாலும் டி.வி, மொபைல், கணினி உள்ளிட்டவற்றில் வெளிவரும் விஷயங்கள், குழந்தைகளிடம் சென்று சேர்வதைத் தடுக்க முடியாது. தொழில்நுட்பத்தை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம் என்ற வழிமுறைக்குப் பல பெற்றோர்கள் மாறிவிட்டனர். இதே நிலைதான் பள்ளிகளுக்கும். காட்சி ஊடகங்களில் தாக்கம் அதிகம் இருக்கும் இந்தச் சூழலில், அதைப் பாடம் கற்பிப்பதற்குப் பயன்படுத்தும் முடிவுக்கும் ஆசிரியர்கள் வந்துவிட்டனர். தமிழக அரசும் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னுடைய பணத்திலிருந்து ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார் என்பது ஆச்சர்யம் தரும் செய்திதானே? 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் மேற்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஹேம்குமாரிதான் அவர். மாற்றுத்திறனாளியான இவருக்கு, ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் திட்டம் எப்போது வந்தது எனக் கேட்டோம். ``துறையூர் எனும் ஊரில்தான் எனக்கு ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு வந்தது. மாற்றுத்திறனாளியான நான் அவ்வளவு தூரம் சென்று வருவதில் உள்ள சிரமத்தை கல்வி அதிகாரிகளிடம் கூறினேன். சில மாதங்களில், இந்தப் பள்ளிக்குப் பணி மாறுதல் கிடைத்தது. அன்றிலிருந்து சுமார் 13 ஆண்டுகளாக இதே பள்ளியில்தான் பணிபுரிகிறேன். 

முதன்முதலாக எழுத்துகளைக் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு வார்த்தையால் மட்டுமல்லாமல், விஷூவலாகவும் பாடம் நடத்தினால், அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்பது என் எண்ணம். அதனால், என்னிடம் இருக்கும் மொபைல் மூலம் பூக்களையும் விலங்குகளையும் இன்னும் பல விஷயங்களையும் காட்டிவந்தேன். பிறகு, மாணவர்களுக்காகவே டேப் வாங்கினேன். பின், லேப்டாப் வாங்கினேன். ஒவ்வொன்றையும் பாடம் கற்பிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்பதே என் யோசனையாக இருக்கும். சக ஆசிரியர் நண்பர்களிடம் யோசனைகள் கேட்பேன். மொபைல், டேப், லேப் டாப் இவற்றைக் காட்டும்போது முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முழுமையாகத் தெரிகிறது. பின் வரிசை மாணவர்கள் எழுந்து, எழுந்து நிற்க வேண்டியிருந்தது. அது எனக்கு கஷ்டமாக இருந்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம்னு நினைத்ததுதான் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஐடியாவுக்கு அழைத்து வந்தது. 

டிஜிட்டல் போர்டு, புரஜெக்டர், ஸ்பீக்கர் என ஸ்மார்ட் வகுப்பறைக்கான பொருள்களை வாங்குவதற்கு சுமார் 1 லட்சம் செலவாகும் என்றிருந்தது. பலரிடம் உதவியாகக் கேட்டேன். சிலரும் முன் வந்தார்கள். ஆனாலும், முழுமையான தொகை கிடைக்காது என்ற நிலையில் அந்த உதவிகளைத் தவிர்த்துவிட்டேன். நான் பணிபுரிந்துகொண்டே எம்.ஏ ஆங்கிலம் படித்தேன். இப்படிப் படிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு ஊக்கத் தொகை அளிக்கும். அந்தத் தொகை மொத்தமாகச் சேர்த்து 60,000 ரூபாய் கிடைத்தது. இதை விட்டால், வேறு நல்ல வாய்ப்பு வராது என்று அந்தத் தொகையுடன் மீதத் தொகையையும் கொடுத்து ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கி விட்டேன். மொத்தம், 90,000 இதற்காகச் செலவாகியுள்ளது." என்றவரிடம், உங்கள் முயற்சிக்கான பலன் கிடைத்து வருகிறதா? என்று கேட்டேன். 

``மாணவர்கள், பாடத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதுதான் இதற்கான ஒரே பலன். அது கண் முன் நடந்துவருகிறது. குறிப்பாக, மெள்ள கற்கும் மாணவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். மாணவர்கள் உற்சாகமாக வகுப்பறைக்கு வருகிறார்கள். எனக்கும் இவ்வளவு பெரிய திரை புதிது என்பதால், இதை இன்னும் பயனுள்ளதாக எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஏற்கெனவே ஸ்மார்ட் வகுப்பறைகளில் பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களிடம் உதவி கேட்டு வருகிறேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் என்றால், ஸ்மார்ட் வகுப்பறை பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. என்னால், நடக்க முடியாது என்பதால், முன்பெல்லாம் மாணவர்களையே கரும்பலகையில் எழுத வைப்பேன். இப்போது நானே எழுதும்போது எனக்குமே உற்சாகம் கிடைக்கிறது. இந்த வகுப்பறை எனக்காக மட்டுமல்ல, பள்ளியின் அனைத்து வகுப்புகளும் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி வருகிறோம். நிச்சயம் பலன் கிடைக்கும். எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்றும் நம்புகிறேன்." என்று திடமாகச் சொல்கிறார் ஆசிரியை ஹேம்குமாரி.