Published:Updated:

சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி... அரசு மருத்துவமனைகளை மீட்குமா தமிழக பட்ஜெட்?

2018-2019-ம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.11,638.44 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.925.39 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி... அரசு மருத்துவமனைகளை மீட்குமா தமிழக பட்ஜெட்?
சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி... அரசு மருத்துவமனைகளை மீட்குமா தமிழக பட்ஜெட்?

மிழக அரசின் 2019-2020- ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத் துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட், மாநில பட்ஜெட் எதுவாயினும் கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகள் முக்கியமாகக்  கருதப்படும். அந்த வகையில் தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு வரும் நிதியாண்டுக்காக ரூ.12,563 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.11,638.44  கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.925.39 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் முக்கியத் தகவல்கள்... 
``வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதாரத் தர நிலையை 2023-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்பதே தமிழக அரசின் தொலைநோக்கு இலக்காகும். தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் மகப்பேறு இறப்பு விகிதம், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் இதர சுகாதாரக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. மகப்பேறு இறப்பு விகிதத்தில் 2030-க்குள் அடைய வேண்டிய நிலையான வளர்ச்சி இலக்கினை முன்னதாகவே அடைந்ததற்காக  மத்திய அரசின் விருதையும் தமிழகம் பெற்றுள்ளது. மொத்தக் கருவுறு விகிதம் (Total fertility rate) தமிழகத்தில் 1.6 ஆக உள்ளது. இது நாட்டிலேயே  குறைவான அளவாகும்.


ஏழை எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் பெறுவதை உறுதிசெய்ய `முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 28.34 லட்சம் பேர், ரூ.5,527 கோடி அளவிலான சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தை மத்திய அரசின் `பிரதான் மந்திரி ஜன்' ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து ஓராண்டுக்கு ஒரு குடும்பத்துக்கான காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. 


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.14,000 ரொக்கமாக வழங்கப்படுவதுடன், ரூ.4,000 செலவில் இரும்புச்சத்து மருந்து மற்றும் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய இரண்டு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படுகின்றன. தகுதிவாய்ந்த கர்ப்பிணிகளின் முதல் பிரசவத்துக்கு மட்டும் நிதியுதவி வழங்க வகைசெய்யும் மத்திய அரசின் `பிரதான் மந்திர மாத்ரூ வந்தனா யோஜனா' திட்டத்துடன் மாநில அரசின் இந்தத் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து கடந்த ரூ.111.24 கோடி வாங்கப்பட்டது.
`பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா' திட்டத்தின் கீழ் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.150 கோடி செலவில் விபத்து காய சிகிச்சைப் பிரிவுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு, அண்மையில் பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது. 750 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரியை ரூ.1,264 கோடி செலவில் அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


மாநிலத்தில் உள்ள இடைநிலை மற்றும் உயர்நிலை அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காகத் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை ரூ.1,634 கோடி செலவில் ஜப்பான் கூட்டு முகமையின் கடனுதவியுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.242.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைப்பதில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது. அதேபோல் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்யக்கூடிய முக்கியமான திட்டம் அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்குத் தேவையான உபகரணங்கள், கருவிகள் மற்றும் பொருள்கள் வழங்கப்படுவதுடன் இந்தத் திட்டத்துக்காக சிகிச்சை நெறிமுறைகளும் உருவாக்கப்படும்" என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

சுகாதாரத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:

* 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் சுகாதாரத் துறைக்காக ரூ.12,563.83 கோடி ஒதுக்கீடு 
* முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்துக்கான கட்டணத்தொகைக்காக ரூ.1,363 கோடி ஒதுக்கீடு 
* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்துக்காக ரூ.959.21 கோடி ஒதுக்கீடு
* கர்ப்பிணிகளுக்கான அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டங்கள், சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான மகளிர் சுகாதாரத் திட்டம் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தும்.
* அரசு மருத்துவமனைகள் மூலம் கிடைக்கும் மருத்துவ வசதிகள் ஏழை எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு எளிதில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்காக உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகளை தொகுப்பாக வழங்கும் திட்டத்துக்கு மூன்று ஆண்டுகளில் ரூ.247 கோடி செலவிடப்படும்.